மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

 ரோஜா மலரே!: நெகிழ வைத்த சந்திப்பு - குமாரி சச்சு - 56

எது முடியாதோ அதை முடித்து வைப்பது தான் செட்டியாரின் தனித்தன்மை. எல்லோரும் போய் செட்டியாரிடம் சொல்ல, அவர் ஸ்டுடியோவில் இருந்த அனுபவசாலியான தச்சரை அழைத்தார்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 12:30 am

சலன்

எது முடியாதோ அதை முடித்து வைப்பது தான் செட்டியாரின் தனித்தன்மை. எல்லோரும் போய் செட்டியாரிடம் சொல்ல, அவர் ஸ்டுடியோவில் இருந்த அனுபவசாலியான தச்சரை அழைத்தார். அவர் வந்து நின்றவுடன்" எப்படிச் செய்யலாம்' என்று ஆலோசனை கேட்டார் செட்டியார். அந்தத் தச்சருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அவருக்குப் புரியவில்லை என்று செட்டியார் தெரிந்து கொண்டார். அவரிடம் செட்டியார்  எளிமையான  ஓர் கேள்வியைக் கேட்டார். 

"கோயில் திருவிழாவின் போது எப்படி "தெப்போற்சவம்'  நடத்துகிறார்கள்? சாமியை வைத்து தெப்பக்குளத்தில் சுற்றுகிறார்கள் இல்லையா?. அதில் பலர் ஏறி நிற்கிறார்கள், அமர்கிறார்கள். தெப்பம் கோயில் குளத்தை ஒரு முறை இல்லை பல முறை சுற்றி வருகிறது. எப்படி இதைச் செய்கிறார்கள்?' என்று அந்தத் தச்சரிடம் கேட்டார். 

தச்சரோ புரிந்து கொண்டார். அவர் உடனேயே  "கீழே பெரிய டிரம் வைத்து, மேல தடிமனான பலகை போட்டு, இதற்கு நடுவில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு பெரிய இரும்புக் கம்பி கொடுத்து இதைத் தாங்கச் செய்து,  ஓரமாக கயிறு கொடுத்து இழுக்கச் செய்வார்கள் அல்லது ஒரு சக்கரம் மாதிரி இருக்கும். கயிறு அந்த சக்கரத்தில் இணைத்தால் சுற்றும்' என்றார். அவர் சொன்னதைக் கேட்டு விட்டு "அந்த முறையில் இந்தத் தாமரைப்பூ மட்டும் அல்ல இலைகளை மிதக்க விடுங்கள். ஒவ்வொரு இலைகளின் மீதும் ஒருவர் நிற்க வேண்டும்.  நடனம் ஆட வேண்டும். நீங்கள் சொன்னது போல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்' என்று செட்டியார் சொன்னார். 

"இது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் அன்று இரண்டு பக்கமும் நீச்சல் தெரிந்தவர்கள் சுமார் பத்து நபர்கள் உடம்பில் டியூப் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும்' என்றார். இவ்வளவு தூரம் செட்டியார் முன் எச்சரிக்கையோடும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சொன்னதும், படப்பிடிப்பிற்கான எல்லாவற்றையும் ஸ்டுடியோ ஆட்கள் செய்து முடித்தார்கள்.  

நான் மலர்ந்த தாமரைப்பூவின் நடுவில் நின்று நடனம் ஆட, முதல் சுற்றில் உள்ள தாமரை இலையில் சுமார் 8 நடனப்பெண்கள் நின்ற வண்ணம் நடனம் ஆட, அவர்களைச் சுற்றி இருமடங்கு பேர்கள் அதே போல் உள்ள இலையில் நடனமாட, இந்தப் பாடல் காட்சியைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது. 

ஸ்டுடியோவில் பல்வேறு மொழி கலைஞர்களை  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எல்லோரும் எங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் நாங்கள் எல்லோரும் மேக்கப் போட ஒரு முறை, பின் போட்ட மேக்கப்பை கலைக்கத் திரும்பவும் ஒரு முறை என மாலையில் ஸ்டுடியோவில் தான் நாங்கள் சந்தித்துக் கொள்வோம். எங்களுக்கு மொழி தெரியவில்லை என்றாலும் கைஅசைவில் பேசிக் கொள்வோம். இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம். அல்லது வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை பங்கிட்டு கொள்வோம். இப்படி நாங்கள் அந்தக் காலத்தில் நட்புடன் பழகி உள்ளோம். இப்படித்தான் நாங்கள் எல்லோரும் அன்று இருந்தோம். என்னைக் கேட்டால் நான் அதிகம் இருந்தது ஸ்டுடியோவில் தான். இப்படி எல்லாம் அன்று நாங்கள் குடும்பமாகத் தான் இருந்தோம், வாழ்ந்தோம். அப்படி நாங்கள் இருந்த போதுதான் ஒரு நாள் அவர்களைச் சந்தித்தேன். 

எங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த அதே சமயம், வெற்றி பெற்ற "களத்தூர் கண்ணம்மா' தமிழ் படத்தை ஏவி.எம் ஹிந்தியில் எடுத்துக் கொண்டிருந்தார். அதன் பெயர் "மெயின் சுப் ரகுங்கி'." இதே "களத்தூர் கண்ணம்மா' படத்தைத் தெலுங்கில் "மூக நோமு' என்று எடுத்தனர் ஏவி.எம். ஹிந்தியில் எடுத்த "களத்தூர் கண்ணம்மா' படத்தில் சாவித்ரி நடித்த வேடத்தில் மீனாகுமாரியும், ஜெமினி கணேசன் நடித்த வேடத்தில் சுனில் தத்தும் நடித்தார்கள்."வீரத்திருமகன்' படத்தின் படப்பிடிப்பு, குறிப்பாக நாங்கள் எடுத்துக் கொண்டிருந்த தாமரைப்பூ பாடல் காட்சியை நாங்கள் சென்னையை விட்டு மகாபலிபுரம் அருகில் படமாக்கிக் கொண்டிருந்தோம். 

இந்த "களத்தூர் கண்ணம்மா' ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த மீனாகுமாரி ஏவி.எம் ஸ்டுடியோவில் என்னைச் சந்தித்தார். என்னைப் பார்த்தவுடன் அவர் என்னிடம் பேச,  நான் அவருக்கு ஹிந்தியில் பதில் சொல்ல அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. சிறு வயதில் இருந்தே எனக்குத் தமிழ் தவிர தென்னக மொழிகளும், ஹிந்தி மொழியும் தெரியும். இதை அவரிடம் நான் சொல்ல, அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். 

என்னைப் பார்த்து "நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்'  என்று அவர் சொல்ல நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

பல புகழ் பெற்ற மனிதர்களைச் சிறு வயதிலேயே காலம் கொண்டு போய் விடுகிறது. நமது தமிழ்நாட்டிலேயே பல உதாரணங்களைச்  சொல்ல முடியும். மீனாகுமாரியின் வயதில் தான் நமது மகாகவி பாரதியும் மறைந்தார். அன்று மிகவும் புகழ் பெற்ற பாடகர், நடிகர் கானக் குரலோன் எஸ்.ஜி.கிட்டப்பா மறைந்தது சிறிய வயதில் தான்.. நமது "ஓளவையார்'” திரைப்படத்தில் நடித்தவர், அல்லது ஓளவையாராக வாழ்ந்தவர் கே.பி.சுந்தராம்பாளின் கணவர் தான் இந்த கிட்டப்பா. அவரது நாடகமும், பாட்டும் அன்று எல்லோரையும் மெய்மறக்கச் செய்துவிடும். கிட்டப்பா மறையும் போது 27 வயதுதான் இருக்கும். இப்படி சிறு வயதிலே பலர் நம்மை விட்டு விட்டுப் போகின்றனர். அப்படித்தான் மீனாகுமாரியும். 

"வீரத்திருமகன்'” படத்தின் படப்பிடிப்பைப் பற்றியும், நாங்கள் எடுக்கப் போகும் காட்சிகளைப் பற்றியும் சொல்லச் சொல்ல அவருக்குப் பார்க்க வேண்டுமென்று ஆவல் ஏற்பட்டது. அவர்களது படப்பிடிப்பு, எங்களது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த அடுத்த நாளில் முடிந்தது. அடுத்த நாள் காலையில் பம்பாய் செல்ல விமான டிக்கெட் போட்டிருந்த மீனாகுமாரி, ஒரு நாள் இங்கிருந்து விட்டு, அடுத்த நாள் போகிறேன் என்று சொல்ல, தனது விமானப் பயணத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டார். அந்த ஒரு நாளில் எங்கள் படப்பிடிப்பிற்கு வர தயாரானர். காரணம் நான் கூப்பிட்டதால் மட்டுமல்ல, எப்படி இந்தத் தாமரைப்பூ செட் போட்டு இருக்கிறார்கள் என்று பார்த்து விட்டுச் செல்லலாம் என்பது மட்டும் அல்ல, நான் எப்படி நடனம் ஆடுகிறேன் என்று பார்க்க ஆவருக்கு ஆசை என்று பிறகு எனக்குத் தெரிந்தது.

மீனாகுமாரி வாழ்ந்தது 38 வயது வரை தான் என்றாலும், அதற்குள் அவர்  92 படங்கள் நடித்து முடித்துவிட்டார். அவர் ஒரு நடிகை மட்டுமல்ல,  அவர் சிறந்த பாடகி, கவிஞருங்கூட. சில படங்களில் அவர் உடை அலங்கார நிபுணராகவும் இருந்திருக்கிறார். இப்படிப்பட்டவர் எங்கள் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்றால் சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும். என் நடனத்தைப் பார்க்க வந்தாரா, பார்த்தாரா, என்ன சொன்னார் மீனாகுமாரி...!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.