நாங்கள் குயின்ஸ் என்ற இடத்தில் தங்கியிருந்தோம். சென்னையிலிருந்து முறுக்கு, தட்டை போன்றவற்றை கொண்டு சென்று இருந்தேன். இயக்குநர் கோபு வீட்டிலிருந்து ஒரு சில தின்பண்டங்கள் வந்திருந்தன. காரணம் அங்கு சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற பயம் தான். முதல் நாள் இதை எல்லாம் நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் நாங்கள் படப்பிடிப்பு முடிந்து அறைக்கு வந்த போது எங்கள் அறையில் இரவு உணவு தயாராக இருந்தது. தினமும் எங்களை சமைக்க விடாமல் ஒவ்வொரு நாளும், இரவு உணவு எங்கள் அறைக்கு வந்துவிட்டது. சாம்பார், ரசம், பொரியல், வத்தக்குழம்பு, அப்பளம், அவியல் என ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகளை எங்களுக்காக தயார் செய்து கொண்டு வந்து கொடுத்தார்கள். உணவும் சுவையாக இருந்தது. எங்களுக்கு கொண்டு வரப்பட்ட உணவு எங்கிருந்து வருகிறது என்று கேட்டதற்கு தயாரிப்பாளரின் நண்பர் வீட்டிலிருந்து வருவதாகச் சொன்னார்கள்.