வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

அறிவியல் ஆயிரம்: ஊட்டச்சத்து உணவு என்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல! மூளைக்கும்தான்!

ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வின் முடிவுகள்...

News image

கோப்புப் படம் - ANI

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:59 pm IST

ஓர் உணவை உண்ணும்போது ஏற்படுத்தும் அதுகுறித்த நினைவலைகள் வெறும் மூளையின் வேலை மட்டுமல்ல என்று புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

உணவும் நினைவும்

பிரெஞ்சு இலக்கிய மேதை, 'மார்சல் ப்ரூஸ்டின்' மேட்லைன் (Madeleine) என்ற சிறிய கேக்கின் மணமும் சுவையும், அவரை குழந்தைப் பருவ நினைவுகளுக்குள் கண நேரத்தில் அழைத்துச் சென்றதாக உலக இலக்கியம் பேசுகிறது. அவருக்கு மட்டும் அல்ல, நமக்கும்கூட அவ்வித செயல்கள்/உணர்வுகள் ஏற்படுகின்றன. பொதுவாக எல்லோருக்கும் ஓர் உணவைப் பற்றி, அதுவும் விருப்பமான உணவைப் எண்ணும்போது, அது கடந்த கால நினைவுப்பொதியுடன் இழுத்துச் செல்லும் வாய்ப்பு எப்போதும் உண்டு. ஒரு சுவை, ஒரு மணம், ஒரு நினைவு.. இவை அனைத்தும் மூளையின் செயல் மட்டுமல்ல; நம் குடலும் அதில் பங்காளிதான் என்ற தகவலை, புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

குடல் - மூளை தகவல் பரிமாற்றம்

நாம் உண்ணும் உணவு வெறும் வயிற்றை நிரப்புவதில்லை. அந்த உணவை எங்கே கண்டோம்? எப்படிப் பெற்றோம்? அது நமக்குச் சத்து அளித்ததா? என்பதையும் நினைவாகப் பதியச் செய்ய, குடலிலிருந்து மூளைக்குச் செல்லும் தகவல் பரிமாற்றம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆய்வும் முடிவும்

இப்போதைய புதிய ஆய்வு ஒன்று, அத்தகைய நினைவலை வெறும் மூளையின் வேலை மட்டுமல்ல என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. நமது செரிமான மண்டலத்திலிருந்து வரும் குறியீடுகளும் கூட, உணவுத் தொடர்பான எந்த அனுபவங்கள் நினைவாக மாற வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

ஆய்வு என்ன?

சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின், டோர்ன்சிஃப் கலை அறிவியல் கல்லூரி, உயிரியல் பேராசிரியர், ஸ்காட் கனோஸ்கி (Scott Kanoski) தலைமையில் ஓர் ஆய்வு எலிகளிடம் செய்யப்பட்டது.

இதில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாவது:

பாலூட்டிகளின் குடல் என்பது நினைவு உருவாக்கத்தில், குறிப்பாக உணவைத் தேடி உண்ணும் அனுபவங்கள் தொடர்பாக, உணவு கிடைப்பது, உண்ணுவது, செரிமானம் செய்வது போன்ற செயல்பாடுகளில், மூளையின் ஒரு பங்காளியாகக் குடல் செயல்படக் கூடும்” என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இந்த ஆய்வு, அதன் முடிகள் தொடர்பான தகவல்கள், “நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்” (Nature communications) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு, செரிமான மண்டலத்திற்கும் மூளைக்கும் இடையே உள்ள முக்கிய தொடர்பு பாதைகளில் உள்ள வேகஸ் (vsgus) நரம்பை (மூளையிலிருந்து செல்லும் 10வது நரம்பு) ஆராய்ந்து அறிந்தது.

இதுவரை வேகஸ் (Vagus) நரம்பு, செரிமானம், பசி, வயிறு நிரம்பிய உணர்வு போன்றவற்றை ஒழுங்குபடுத்தவே ஆதிக்கம் செலுத்துகிறது என்றே அறியப்பட்டது. ஆனால் தற்போது, உணவுடன் தொடர்புடைய அனுபவங்களை நீண்டகால நினைவுகளாக மாற்றுவதிலும், இதற்கு முக்கிய பங்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மூளையில் நினைவுகளைச் சேமிக்க உதவும் தகவல்களையும் சுமந்து செல்லக் கூடும் என்பதே புதிய கண்டுபிடிப்பு.

குடலிலிருந்து நினைவகத்துக்குச் செல்லும் மறைமுகப் பாதை

ஸ்காட் கனோஸ்கி நடத்திய ஆய்வில், எலிகளுக்கு சத்துகள் நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டன. சோதனைகளின் வழியே கிடைத்த உண்மை: “முக்கியமாக, ஊட்டச்சத்து நிறைந்த உணவை எலிகள் உண்ணும்போது, மூளையின் பகுதியான ஹிப்போகாம்பஸுடன் (Hippocampus) இணைந்த நரம்பணுக்களில் அசிட்டைல்கோலின் (Acetylcholin) என்ற வேதிப்பொருளின் சுரப்பு அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஹிப்போகாம்பஸ் என்பது கற்றல், நினைவாற்றலில் முக்கியப் பங்கு வகிக்கும் மூளையின் ஒரு பகுதியாகும்"

அசிட்டைல்கோலின் பணி

நரம்பணுக்களில் உருவாகும் அசிட்டைல்கோலின், புதிய தகவல்களை மூளை உறுதியாகப் பதிவு செய்து, நீண்ட கால நினைவுகளாக மாற்ற உதவுகிறது.

ஆனால் ஆய்வாளர்கள் வேகஸ் நரம்பின் தகவல் பரிமாற்றத்தைத் தடுத்தபோது/வெட்டியபோது, அங்கே, எலிகள் உணவை உண்ட பிறகும் அசிட்டைல்கோலின் அளவு அதிகரிக்கவில்லை. அதோடு, உணவு மறைத்து வைக்கப்பட்ட இடத்தை நினைவில் வைத்திருக்க வேண்டிய சோதனைகளிலும் எலிகள் குறிப்பிடத்தக்க அளவில் தோல்வியடைந்தன.

இதனால், குடலிலிருந்து வரும் தகவல்களே, மூளையின் நினைவுப் பதிவைத் தூண்டுகின்றன என்பது தெளிவானது.

வேதிப்பொருள் அசிட்டைல்கோலின் புதிய தகவல்களைப் பதிவு செய்யவும், நினைவுகளை உருவாக்கவும் மூளைக்கு உதவும் ஒரு நரம்பியக்கடத்தி. இந்த அதிகரிப்பு, குடலிலிருந்து வேகஸ் நரம்பு வழியாகச் செல்லும் செய்திகளைச் சார்ந்திருந்தது. இதனால், குடலிலிருந்து வரும் தகவல்களே நினைவுப் பதிவைத் தூண்டுகின்றன என்பது தெளிவானது.

இனிப்பான சுவையைவிட ஊட்டச்சத்தே முக்கியம்

இந்த சோதனைகள் மேலும் ஒரு சுவாரசியமான உண்மையை வெளிக்கொணர்ந்தன. மூளையின் நினைவு அமைப்பு என்பது, உணவின் சுவை/ இனிப்பைக் காட்டிலும், அதன் உண்மையான ஊட்டச்சத்து மதிப்புக்கே அதிகமாக அக்கறை செலுத்துகிறது.

சர்க்கரை/ கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ட எலிகளில் நினைவுப் பாதைகள் தீவிரமாகச் செயல்பட்டன. ஆனால் இனிப்பாகச் சுவைத்தாலும் கூட, மிகக் குறைந்த கலோரியோ/ கலோரியே இல்லாத செயற்கை இனிப்புப் பானங்களை அருந்திய எலிகளில் அதே மாற்றம் ஏற்படவில்லை.

குடல் சிறப்பு

ஆய்வின் மூலம் அறிந்த விஷயம் என்பது, "மூளை சுவையை மட்டுமல்ல, உண்மையான ஊட்டச்சத்தையும் மதிப்பிடுகிறது. வெறும் இனிப்புச்சுவை நினைவைப் பதியச் செய்யாது; உடலுக்குப் பயனுள்ள சத்துகள் கிடைத்தால்தான் குடல், மூளைக்குச் சிறப்பான தகவலை அனுப்புகிறது”.

ஆய்வின் முதல் ஆசிரியரான லோகன் லாவர் (Logan Lauer) இதைப் பற்றி கூறுவதாவது,"இந்த அமைப்பு பரிணாம வளர்ச்சியின் ஓர் அற்புதமான பரிசு. எந்த இடத்தில் சத்தான உணவு கிடைக்கிறது என்பதை விலங்குகள் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும். குடல், 'இந்த உணவு உயிருக்கு அவசியமான சத்துகளை அளித்தது; இதை எங்கே, எப்படிப் பெற்றாய் என்பதை மறந்துவிடாதே' என்று மூளைக்குச் செய்தி அனுப்புகிறது."

வெறும் இனிப்புச் சுவை மட்டும் இந்த நினைவு-தொடர்பான பாதையைத் தூண்ட போதுமானதாக இல்லை என்பதை இந்த முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

வசந்த காலத்தில் சில தாவரங்கள் முதலில் எங்கு முளைக்கின்றன என்பதை நினைவில் வைத்திருப்பது, பசியுடன் இருக்கும் விலங்குகள் முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கண்டறிய உதவும். குடலிலிருந்து மூளைக்கு அனுப்பப்படும் சமிக்ஞை, "இந்த உணவு மதிப்புமிக்க ஊட்டச்சத்தைத் தந்தது, எனவே எங்கு, எப்படி அதைப் பெற்றாய் என்பதை நினைவில் வை" என்று சொல்வது போன்றது.

உணவு இருந்த இடத்தின் நினைவு ஏன் முக்கியம்

காட்டில் வாழும் விலங்குகளுக்கு, நம்பகமான உணவு ஆதாரத்தின் இருப்பிடத்தை நினைவில் வைத்திருப்பது என்பது, அவைகள் உயிர்வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது. மதிப்புமிக்க ஊட்டச்சத்தை அளிக்கும் ஓர் உணவு, அந்த உணவு எங்கு கிடைத்தது, எப்படிப் பெறப்பட்டது என்பதன் விவரங்களைச் சேமிக்குமாறு மூளையைத் தூண்டும் ஒரு செய்தியை அனுப்ப குடலைத் தூண்டக் கூடும்.

சத்துள்ள உணவு கிடைத்த இடம், அந்த உணவைப் பெற எடுத்த முயற்சி, அதை மீண்டும் எவ்வாறு கண்டுபிடிப்பது போன்ற தகவல்கள் நினைவில் பதிந்தால், அடுத்த முறை உணவை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இதனால்தான் சில உணவுகளோடு இணைந்த நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நம் மனதில் அழியாமல் நிற்கின்றன.

ஜங்க் உணவு- இந்த அமைப்பை மெதுவாகச் சிதைக்கிறது

ஆய்வின் மிகவும் கவலைக்குரிய கண்டுபிடிப்பு இதுதான். ஒரு முறை சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்ணும்போது நினைவுப் பாதைகள் வலுவாகச் செயல்பட்டாலும், நீண்ட காலமாக அதே வகை உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்டால் எதிர்மாறான விளைவு ஏற்படுகிறது.

இளம் வயதிலிருந்தே அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை கொண்ட உணவை உண்ட எலிகளில், பின்னர் ஆரோக்கியமான உணவுமுறைக்குத் திரும்பிய பிறகும் குடலுக்கும் ஹிப்போகாம்பஸுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் பலவீனமடைந்திருந்தது. அந்த எலிகள் உணவு இருந்த இடத்தை நினைவில் வைத்திருக்கும் சோதனைகளிலும் மோசமான செயல்திறனைக் காட்டின.

இதனால், தொடர்ச்சியான ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் நினைவுத் திறனை மெதுவாகக் குறைக்கக் கூடும் என்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஊட்டச்சத்து உணவு - குடல் - மூளைப் பாதை ஆற்றல்

சில உணவு அனுபவங்கள் ஏன் விசேஷமாக நினைவில் நிற்கின்றன என்பதற்கு இந்த செயல்முறை விளக்கம் அளிக்கலாம். ஆற்றல் அல்லது மதிப்புமிக்க ஊட்டச்சத்தை அளிக்கும் உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இளம் வயதிலேயே அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை உணவுகளை உண்ட எலிகள், பின்னாளில் குடலுக்கும் ஹிப்போகாம்பஸுக்கும் இடையேயான தொடர்பில் பலவீனத்தைக் காட்டின. ஆரோக்கியமான உணவுக்குத் திரும்பிய பின்னரும், அவற்றின் நினைவு தொடர்பான மூளைப் பதிலிறுப்புகள் குறைவாகவே இருந்தன.

இந்த விலங்குகள், உணவு இருந்த இடத்தை நினைவில் வைத்திருக்கும் பணிகளிலும் மோசமாகச் செயல்பட்டன. நீண்டகால ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல், உணவு தொடர்பான நினைவுகளைப் பதிவு செய்ய முதலில் உதவிய அதே குடல் - மூளை அமைப்பையே சீர்குலைக்கக் கூடும் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.

அறிவாற்றல் வீழ்ச்சியுடன் தொடர்பு இருக்கலாமா?

இந்த கண்டுபிடிப்புகள் மனித ஆரோக்கியத்திற்கும் விரிவான தாக்கங்களைக் கொண்டிருக்கலாம். பருமன், சரியில்லாத ஊட்டச்சத்து, நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்கெனவே அறிவாற்றல் வீழ்ச்சிக்கான அதிக அபாயத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

அல்சைமர் போன்ற நோய்களுக்கும் தொடர்பு இருக்குமா?

உடல் பருமன், தவறான உணவு முறை, நீரிழிவு போன்ற மாற்றுச் சுரப்பியல் நோய்கள் அறிவாற்றல் குறைபாட்டுடன் தொடர்புடையவை என்பது ஏற்கனவே அறியப்பட்ட உண்மை. இப்போது இந்த ஆய்வு, அதற்கான ஓர் உயிரியல் விளக்கத்தையும் முன்வைக்கிறது.

ஆரோக்கியமற்ற உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது, குடலுக்கும் மூளைக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை மெதுவாகக் குலைத்து, நினைவக அமைப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கக் கூடும்.

பேராசிரியர் ஸ்காட் கனோஸ்கியின் கூற்று: "ஹிப்போகாம்பஸில் அசிட்டைல்கோலின் சுரப்பு குறைவது, அல்சைமர் நோயின் ஆரம்பகட்ட வேதியியல் மாற்றங்களில் ஒன்றாகும். இந்தச் சுரப்பை வேகஸ் நரம்பின் தகவல் பரிமாற்றம் ஊக்குவிப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எனவே, எதிர்காலத்தில் வேகஸ் நரம்பைத் தூண்டும் சிகிச்சை முறைகள் நினைவாற்றலைப் பாதுகாக்க உதவுமா என்பது ஆராயப்பட வேண்டிய முக்கிய துறையாகும்."

எதிர்கால சிகிச்சைகளுக்கான புதிய வாயில்கள்

இந்த ஆய்வு, நினைவுத் திறனை மேம்படுத்தும் எதிர்கால மருத்துவ முறைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

குடல் – மூளை தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் சிகிச்சைகள், வேகஸ் நரம்புத் தூண்டல் (Vagus Nerve Stimulation), குடல் நுண்ணுயிர் சமநிலையை மேம்படுத்தும் முறைகள் ஆகியவை ஒருநாள் நினைவாற்றலைக் காக்கும் மருத்துவ வழிகளாக மாறக்கூடும்.

இருப்பினும், இந்த ஆய்வு தற்போது எலிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனிதர்களிலும் இதே செயல்முறை முழுமையாக நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வுகள் அவசியம்.

மனம் விரும்பியது நினைவில் நிற்கும். ஆனால் இந்த ஆய்வு அதைவிட ஆழமான உண்மையைச் சொல்கிறது.

"உடலுக்கு உண்மையில் ஊட்டமளித்ததை, குடல் மூளையிடம் நினைவில் வைத்துக்கொள்ளச் சொல்லுகிறது."

எனவே, நல்ல உணவு என்பது உடலுக்கான முதலீடு மட்டுமல்ல; அது நினைவாற்றலுக்கும், அறிவாற்றலுக்கும், எதிர்கால மூளை நலத்திற்கும் செய்யும் அமைதியான முதலீடாகவும் இருக்கலாம்.

இப்படி எலிகளில் நடத்தப்படும் ஆய்வுகள்தான், மனிதனின் நோய் தீர்க்க, சிகிச்சை அளிக்க தடம்போட்டுக்கொடுக்கின்றன.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

Summary

Nutritious food is not just for the body, but for the brain as well: Research

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.