தன்னம்பிக்கை நாயகன்!
எங்கே மன தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கின்றதோ, அங்கே தோல்வி இல்லை என்பதற்கு உதாரணம் காஷ்மீரை சேர்ந்த அமீர் ஹுசைன். எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில்


எங்கே மன தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கின்றதோ, அங்கே தோல்வி இல்லை என்பதற்கு உதாரணம் காஷ்மீரை சேர்ந்த அமீர் ஹுசைன். எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் அமீர் ஹுசைன் இழந்தாலும் உறுதியை இழக்கவில்லை. கிரிக்கெட் பாரா அணி கேப்டனாக உயர்ந்துள்ளார். தான் கடந்த வந்த பாதை பற்றி விவரிக்கிறார் அமீர் ஹுசைன்:
""இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது எனக்கு சரியாக 8 வயதாக இருந்தபோது எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான மரத்தூள் ஆலையில் எனது தந்தைக்கு மதிய உணவு கொடுக்கச் சென்றேன் எனது தந்தையும் மூத்த சகோதரரும் மரத்தூள் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் எனது இரண்டு கைகளையும் இழந்தேன். மிஷினுக்குள் சிக்கியிருந்த என்னை அன்று இந்திய ராணுவப் பிரிவு வந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது.”
அந்த விபத்தில் இருந்து குணமடைய மூன்று ஆண்டுகள் ஆனது. எனக்கு ஏற்பட்ட விபத்துக்கு பின்பு அந்த மர ஆலையை எனது தந்தை விற்றுவிட்டார்.
விபத்து கொடுத்த அதிர்ச்சி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எனது பாட்டியே எனக்கு உதவினார். அவர் தான் என்னை பள்ளிக்குச் செல்ல ஊக்கப்படுத்தினார். ஆனால், பள்ளியில் ஆசிரியர் ஒருவர் நான் அங்கு இருப்பதை விரும்பவில்லை.
ஏனென்றால் கைகளை இழந்த எனக்கு கல்வி பயனற்றது என்று நினைத்துக்கொண்டார். ஆனால் விபத்துக்குப் பிறகு எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்த என் பாட்டி ஆசிரியரிடம் எனது நிலையை எடுத்துச் சொல்லி கல்வியைத் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தார். பாட்டி இறக்கும் வரை அவரின் வாழ்நாள் முழுவதையும் எனக்காக அர்ப்பணித்தார்.
பாட்டியின் மரணம் என்னை நிறைய கற்றுக்கொள்ள வைத்தது. எனக்குத் தேவையானவற்றை கவனித்து கொள்ள வைத்தது. நான் கற்ற அந்தப் பாடத்தால் இப்போது என்னுடைய தேவைகளை நானே கவனித்து கொள்கிறேன். அன்றாட வேலைகளை நிர்வகிக்கிறேன்.
சிறுவயது முதலே கிரிக்கெட் மீது எனக்கு ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால், எனது துரதிர்ஷ்டம் நான் விபத்தில்சிக்கினேன். இந்த நிலையில் இருந்தாலும், எனது விளையாடும் திறனை உருவாக்க மிகவும் கடினமாக உழைக்க உறுதியாக இருந்தேன்.
அனந்த்நாக், அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது தான் அங்கு ஆசிரியர் ஒருவர் எனது கிரிக்கெட் ஆர்வத்தை கண்டுபிடித்து பாரா கிரிக்கெட் விளையாட்டில் என்னை ஈடுபட செய்தார்.
மிகுந்த உறுதியுடன், நான் விளையாட்டைப் பயிற்சி செய்யத் தொடங்கினேன், பல முயற்சிகளுக்குப் பிறகு, நான் பேட்டைப் பிடிக்கத் தொடங்கினேன். பந்தை வீசுவதிலும் வெற்றி பெற்றேன், எனது கால்களைப் பயன்படுத்தி பந்து வீசுகிறேன்.
கன்னத்திற்கும் கழுத்துக்கும் இடையில் மட்டையை வைத்து பேட்டிங் செய்கிறேன்.
மேலும் நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். சச்சின் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவரைப் போலவே இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாட விரும்புகிறேன்' என்கிறார் அமீர் ஹுசைன்.
அமீர் இதுவரை, டெல்லி, லக்னோ, கேரளா, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். தனது மன உறுதி மற்றும் பயிற்சி காரணமாக பாரா அணி கேப்டனாக உயர்ந்துள்ளார். இதுவே, அவருக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் அதிக கவனத்தை பெற்று தந்துள்ளது.
கைகள் போனாலும் கால்களால் வெற்றி பெற முடியும் என பாட்டி கொடுத்த தன்னம்பிக்கையே கிரிக்கெட் வீரராக உருவாக உறுதுணையாக இருந்தது என்று சொல்லும் அமீர் ஹுசைன், காலால் பந்து வீசக் கற்றுக்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அணியை வழி நடத்தும் அளவுக்கு இப்போது முன்னேறியுள்ளதை பெருமையாகச் சொல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...