பாரதி பூமியில் பரவச விழா..!
பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் தினமணி நடத்திய பிரமாண்ட பிறந்த தின விழாவால் பாரதி நேசர்கள் அகம் மகிழ்ந்தனர்.


பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் தினமணி நடத்திய பிரமாண்ட பிறந்த தின விழாவால் பாரதி நேசர்கள் அகம் மகிழ்ந்தனர்.
மகாகவி பாரதியாரின் 141-ஆவது பிறந்த நாளையொட்டி, தினமணி சார்பில் தூத்துக்குடியில் பாரதியார் விருது வழங்கும் விழா டிசம்பர் 11-இல் கொண்டாடப்பட்டது. இதில், தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் பங்கேற்று, பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு பாரதி விருதும் ரூ. 1 லட்சத்துக்கான பொற்கிழியும் வழங்கி சிறப்பித்தார்.
தினமணி சார்பில் எட்டயபுரத்திலும்,தூத்துக்குடியிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட இந்த விழாக்களில் பாரதி நேசர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
காலை முதலே பாரதியின் இல்லத்தில் கூட்டம் அலைமோதியது. வயது வித்தியாசம் இன்றி நூற்றுக்கணக்கானோர் அணிஅணியாக பாரதி இல்லத்தைப் பார்வையிட்டனர். அவரின் திருவுருவச் சிலையின் முன் நின்று தற்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
முன்பெல்லாம் பாரதி அன்பர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மட்டுமே பாரதி இல்லத்துக்கு வந்து சென்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தினமணி நடத்தி வரும் பாரதி விழாவுக்கு பின்னர் இளம் தலைமுறையினரின் கூட்டம் அதிகரித்து வருவது கண்கூடு.
தென்காசியை சேர்ந்த மருத்துவர் தங்கபாண்டியன் ,தனது வீட்டில் பூத்து குலுங்கிய பூக்களை கொய்து மாலையாக உருவாக்கி அதை பாரதிக்காகக் கொண்டு வந்து தினமணி ஆசிரியரிடம் கொடுத்து பாரதிக்கு அணிவித்து அழகுபார்த்தார். இதைத் தொடர்ந்து, தனது இசைக்கருவியால் பாரதியார் பாடலை இசைத்து கேட்போர் மனம் குளிர வைத்தார்.
பாரதி பிறந்த இல்லத்திலிருந்து, பாரதியின் மணிமண்டபத்தை நோக்கி நடைபெற்ற ஊர்வலத்தில் திரளானோர் கலந்துகொண்டனர். அதிலும் பாரதியின் வேடம் தரித்து வந்த சிறுவர், சிறுமிகளை ஊர்வலத்தில் பங்கேற்ற பெரியவர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.
"அச்சமில்லை..அச்சமில்லை..' என்ற பாரதியின் பாடல் வரிகளை மனதில் சுமந்து வளர்ந்த சிறுவர்கள் , அச்சம் இன்றி வாழ ஏதுவாக தாங்கள் கற்ற சிலம்பத்தை பாரதி முன் கம்பீரமாகச் சுழற்றி காண்பித்தனர்.
ஊர்வலம் பாரதியின் மணிமண்டபத்தில் நிறைவடைந்த பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பாரதியின் உருவச் சிலைக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் மாலை அணிவித்தார். அவரைத் தொடர்ந்து, கூடியிருந்தவர்களும் பாரதிக்கு மாலை அணிவித்தனர்.
மணிமண்டப வளாகத்தில், கோவில்பட்டி சுழற்கழகத்தினர் மற்றும் மகாகவி பாரதியார் நினைவு அறக்கட்டளை மூலம் பிரமாண்ட அளவில் வரையப்பட்டிருந்த பாரதியின் ஓவியத்தை பார்த்து மாணவ, மாணவிகள் பேருவகை அடைந்தனர்.
மாலையில், தினமணி சார்பில் பாரதி விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழர்களின் இல்லம்தோறும் பாரதியின் புத்தகங்கள் இடம்பெற வேண்டும் விழாவில் வரவேற்புரையாற்றி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது:
தமிழர்களின் இல்லம்தோறும் பாரதியின் புத்தகங்கள் இடம்பெற வேண்டும். தினமணி சார்பில் பாரதி ஆய்வாளருக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தம்பதி சமேதராக விருது வழங்க வந்து இருப்பது மகிழ்ச்சி. சிலம்பு செல்வர், ம.பொ.சி.க்கு பிறகு பாரதி குறித்து பட்டி,தொட்டி எங்கும் புகழ் பரப்பிய குமரிஅனந்தனின் வாரிசான தமிழிசை செளந்தரராஜனின் கையால் மகாகவி பாரதியார் விருது வழங்க இருப்பது மிகப் பொருத்தமானது. சுதந்திரப் பித்தனான பாரதியின் நினைவைப் போற்றும் வகையிலும், சுதந்திர வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் தொடங்கப்பட்ட தினமணியின் பாதையில்தான் நாங்கள் இன்றும் நடக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த பாரதி விழா.
" பாரதியின் பாடல்களில் எந்தக் குறையுமே இருந்தது இல்லை . ஏனென்றால், பாரதி உணர்வை மட்டுமே உருக்கி எழுதினான்; அந்த எழுத்துக்கு ஈடு இல்லை' என்பார் கண்ணதாசன்.
"தமிழர்களின் இல்லம்தோறும் பாரதியின் புத்தகம் இடம் பெற வேண்டும். பாரதியின் எழுத்துகளால்தான் கம்பன் குறித்தும் , வள்ளுவன் குறித்தும் தெரிய முடிந்தது' என்றார் ஜெயகாந்தன். தமிழ் பேசுகிற, தமிழ் குறித்து சிந்திக்கிற அனைவருமே பாரதியாரின் வாரிசுகள்தான். அத்தகைய சிறப்பு மிக்க பாரதியின் வாரிசுகளாகிய நாம் ஆண்டுக்கு ஒரு முறை அவரின் பிறந்தநாளில் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்திற்கு வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது எனது ஆசை.
கம்பன், வள்ளுவனுக்கு பிறகு பாரதி குறித்து எழுதப்படும் புத்தகங்கள்தான் அதிகம் இருக்கின்றன. அப்படி புத்தகம் எழுதும் எழுத்தாளர்கள் ஒரு பிரதியை பாரதி மணிமண்டபத்தில் உள்ள நூலகத்துக்கும், அவர் பிறந்த இல்லத்துக்கும் அனுப்பி வைத்தால் நூலகமே நிறைந்துவிடும்.
பாரதி விருது பெரும் ஆ.இரா.வேங்கடாசலபதி தனது வாழ்நாளில் பெரும் பகுதியை பாரதி குறித்த ஆய்வுகளுக்காகச் செலவிட்டவர். இந்த விழா பாரதிக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். தனது மண்ணில் தனக்கு பாராட்டு கிடைக்கும் என்று என ஆசைப்பட்டவன் பாரதி. அவரின் அந்த விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் பாரதி ஆய்வாளர்களுக்கு இந்த மண்ணில் தினமணி விருது வழங்குவதை பாரதி மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருப்பார்'' என்றார்.

விருது வழங்கி, தெலங்கானா- புதுச்சேரி ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
""மகாகவி பாரதியார் பெயரில் விருது வழங்கும் தினமணிக்கு எனது பாராட்டு. விருது பெற்றுள்ள ஆ.இரா.வேங்கடாசலபதியின் பாரதி குறித்த ஆய்வுகள் மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாக உள்ளன. பெண்கள் குறித்த பாரதியின் சிந்தனைகள் மிகவும் மேம்பட்டவை. அதனால்தான், பெண்களை சர்க்கரவர்த்தினி என்றார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை குழந்தைகள் படிக்க வேண்டும். எனது தந்தையாரின் மூலம் 4 வயது முதலே "அச்சமில்லை... அச்சமில்லை' என்ற பாரதியின் வரிகளை மனதில் ஏற்றிக் கொண்டு செயல்பட்டதால்தான் இந்த நிலையை நான் அடைந்துள்ளேன்.
மாணவர்கள் நூலகத்துக்குச் சென்று படிக்கும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பாரதி காசிக்கு சென்று அங்குள்ள நூலகத்தை பயன்படுத்திதான் பல மொழிகளை கற்றார். குழந்தைகளும், இளைஞர்களும் பாரதியைத் தொடர்ந்து படிக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்து அமுத விழாவை கொண்டாடி மகிழ்ந்துள்ள நேரத்தில், ஒவ்வொருவரும் நாட்டுப்பற்றுடன் திகழ வேண்டும்.
பாரதியார் உடல்நலம் குன்றியிருந்தபோது, பாரதிதாசன் உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது, "நீங்கள் நலமாக இருப்பதை நான் பார்க்க வேண்டும் . அதனால் புகைப்படம் அனுப்புங்கள்' என பாரதிதாசன் கேட்டுக் கொண்டார். அதற்காகதான், பாரதியார் கோட், தலைப்பாகை அணிந்து படம் எடுத்து அதை பாரதிதாசனுக்கு அனுப்பி தான் நலமாக இருப்பதை உணர வைத்தார்.
பாரதி என்றாலே அந்த படம்தான் நம் எல்லோரின் நினைவுக்கும் வரும். தினமணியின் நாட்டுப்பற்றையும், நாட்டின் விடுதலைக்காக அந்த நாளிதழ் அளித்த பங்களிப்பும் அளப்பரியது. இத்தகைய சிறப்பைப் பெற்ற தினமணி, மகாகவி பாரதியார் விருதினை ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம்'' என்றார்.

தினமணியின் மகாகவி பாரதியார் விருதை பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதி பேசியதாவது:
""சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து மக்களிடம் சுதேசி எண்ணத்தை மேம்படுத்தியவர் பாரதியார். தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில், பாரதியின் பெயரில் தினமணி வழங்கும் விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சுதேசி என்றாலே தூத்துக்குடி நகரம் நினைவுக்கு வரும்.
எட்டயபுரத்தில் இருந்த பாரதி, தூத்துக்குடிக்கு எத்தனை முறை வந்திருப்பார். எனக்குக் கிடைத்த பதிவுப்படி, ஒரே ஒருமுறைதான் வந்துள்ளார். அதுவும், 1908- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுதேசி எண்ணம் கொளுந்துவிட்டு எரிந்த நேரத்தில், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் மகாகவி பாரதியாரும் ஒரே மேடையில் தோன்றி மக்களிடம் சுதேசி எண்ணம் மேம்பட குரல் கொடுத்துள்ளார்.
இன்னொரு அரிய தகவல். பாரதியாருக்கு முதன் முதலாக சிறப்பு மலர் வெளியிட்டு பெருமை சேர்த்தது தினமணி நாளிதழ்தான். 1935- ஆம் ஆண்டு இந்த மலர் வெளிவந்தது. அந்த மலரை தயாரித்தவர் புதுமைப்பித்தன். அப்போது தினமணி ஆசிரியர் குழுவில் இருந்தார்.
மகாகவி பாரதி, வ.உ.சி. போன்றோரை சிறப்பித்ததில், சிறப்பித்து வருவதில் தினமணிக்கு பெரும் பங்கு உண்டு. தினமணியின் பழைய இதழ்கள் தமிழ்நாட்டின் வரலாறு குறித்து அறிந்துகொள்வதற்கான கருவூலமாகத் திகழ்கிறது. எனவே, தினமணியின் பழைய இதழ்களை மீண்டும் இளைய தலைமுறையினர் அறியும் வகையில் ஆய்வு செய்ய வழி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார் .

விருதாளர் அறிமுக உரை நிகழ்த்திய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் பேசியது:
""பாரதி குறித்த ஆய்வுகளை ஆ.இரா.வேங்கடாசலபதி மேற்கொண்டு பாரதி குறித்த புதையல்களை வெளிக்கொணர்ந்து வந்துள்ளார். தனது 17-ஆவது வயதிலேயே வ.உ.சி. கடிதங்கள் என்ற நூலைப் பதிப்பித்த பெருமை உடையவர்.
அவரின் 40 ஆண்டுகள் ஆய்வுத் தவத்தின் பயனாக தமிழிலும், ஆங்கிலத்தில் 50-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வ.உ.சி.யும்,பாரதியும் என்ற நூலில் வ.உ.சி. தொடர்பான வழக்கில், வ.உ.சி.க்கு ஆதரவாக சாட்சி சொல்ல வந்த பாரதி, சாட்சி சொல்ல வேண்டியதில்லை என திருப்பி அனுப்பப்பட்டார் என்ற தகவலை அவர் வெளி
யிட்டுள்ளார்.
ஆ.இரா.வேங்கடாசலபதி ஆவணங்களை பதிப்பிக்கும் போது, மூல ஆவணங்களை மட்டுமல்லாது, அதற்கான முன் ஆவணங்கள் மற்றும் சிறு,சிறு தகவல்களையும் சேர்த்து பதிப்பிப்பார் என்பது சிறப்பான விஷயம்'' என்றார்.
எங்கும் நிறைந்தவனுக்கு தினமணியும், பாரதி அன்பர்களும் நிகழ்த்திக் காட்டிய நிகழ்வுகளால் பாரதி பிறந்த புண்ணிய பூமி அன்று விழாக்கோலம் பூண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...