தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாரம்பரியம்தான் இன்றும்..!

"மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் பாரம்பரியமான கலாசாரத்தையே இன்றும் பின்பற்றுகின்றனர்' என்கிறார் அந்த மாநில ஆளுநர் இல.கணேசன்.

News image
Updated On :20 நவம்பர் 2022, 12:30 am

எஸ். சந்திர மௌலி

"மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் பாரம்பரியமான கலாசாரத்தையே இன்றும் பின்பற்றுகின்றனர்' என்கிறார் அந்த மாநில ஆளுநர் இல.கணேசன். அவருடன் ஓர் சந்திப்பு:

மணிப்பூர் அனுபவம் எப்படி?

வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் ஓர் ஆனந்தமான இடம். அங்கே பெரும்பான்மையானவர்கள் மலைவாழ் மக்கள்.  நிலப்பரப்பில் சுமார் 20 சதவீதம் சமதளப் பகுதி.  மற்றவை மலைப் பகுதிகள்தான்! கிறிஸ்தவர்கள் கணிசமாக இருந்தபோதிலும்,  பாரம்பரியமான கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர். இங்கே மற்றவர்களுக்கு பரிசாக ராதே-கிருஷ்ணா சிலையைக் கொடுக்கின்றனர். உடைகள் அணிவதில் மேற்கத்திய தாக்கம் இல்லை.  மகாபாரத யுத்தத்துக்கும், மணிப்பூருக்கும் சம்பந்தம் உள்ளது.

விவசாயம்தான் பிரதான தொழிலா?

ஏலம் போன்ற திரவியங்கள் அங்கே அதிகமாக விளைகின்றன. தேயிலையும் முக்கியமான பயிர்.  கருப்பு அரிசியை விளைவித்து, உணவுக்கும் பயன்படுத்துகின்றனர். 

கைவினைப் பொருள்கள் தயாரிப்பதும் ஒரு முக்கியமான தொழிலாக உள்ளது. கடந்த காலத்தில் ஆயுதமேந்திய போராளிகள் இருந்தார்களே? 

நிலைமை வெகுவாக மாறிவிட்டது. கடந்த காலத்தோடு ஒப்பிட்டால் இப்போது வெகு சிலரே உள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது.  கடந்த முறை கூட்டணி ஆட்சி நடத்திய பா.ஜ.க.  தற்போது மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32-இல் வென்று தனிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி செய்கிறது.  பைரேன் சிங் முதல்வராக இருக்கிறார். மொத்தத்தில் மணிப்பூர் ஒரு நல்ல மாநிலமாக விளங்குகிறது.

மணிப்பூரில் தமிழர்கள் இருக்கிறார்களா?

மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சுமார் 200 தமிழக மாணவர்கள் படிக்கின்றனர்.  சுமார் இரண்டாயிரம் தமிழர்கள் மியான்மரை ஒட்டிய மணிப்பூர் எல்லைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.  வியாபாரம் செய்வதற்காகச் சென்ற நம் ஊர் செட்டிநாட்டுக்காரர்கள்,  அங்கே ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக, அங்கிருந்து வெளியேறி, மணிப்பூர் எல்லைப் பகுதிகளில் குடியேறினர்.  

மணிப்பூர் கலாசார, பண்பாட்டு அமைப்பின் சார்பில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தினீர்களே?

மணிப்பூரின் பிரபல எழுத்தாளர் பினோதினியின் நூற்றாண்டு விழாவையொட்டி,  சென்னையில் "காலா அகாதெமி' என்ற மணிப்பூர் அரசு அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழா அது. எழுத்தாளர் சிவசங்கரி தனது இலக்கியத்தின் மூலமாக இந்தியாவை இணைக்கும் திட்டத்தின்படி,  மணிப்பூரைச் சேர்ந்த பினோதினையை சந்தித்து, உரையாடி தனது நூலில் எழுதியிருக்கிறார்.  அவரும், மணிப்பூரைச் சேர்ந்தவர்களும் பினோதினியைப் பற்றி பேசினர்.

பாரதியாரைப் பற்றி மணிப்பூர் மக்களுக்காக அங்கே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தீர்களே?

ஆம்.  வானவில் ரவி,  இசைக் கவி ரமணன், பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்ற விழா மணிப்பூரில் நடைபெற்றது. 

மணிப்பூர் ராஜ் பவனில் தென்னிந்திய உணவுப் பிரச்னை ஏதுமில்லையா?
மணிப்பூர் ராஜ்பவனில் உள்ள சமையல்காரருக்கு, ஒரு தென்னிந்தியருக்கு எப்படி சமைக்க வேண்டும் என்று தெரிந்துவிட்டது.  உணவு பிரச்னை இல்லை.

அங்கே புதிய உடையில் தோன்றுகிறீர்கள் அல்லவா?

ஆளுநர் என்ற முறையில் கோட்டு- சூட் அணிந்து பொது நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன். அதன் பின்னர்,  பாரம்பரிய வேட்டிக்கு மாறிவிட்டேன். குளிர் காரணமாக,  அரைக்கை சட்டை அணிவது சாத்தியமில்லை. ஸ்வெட்டர், ஓவர் கோட் அணிந்து குளிரை சமாளிக்கிறேன்.

மணிப்பூரி மொழியை கற்றுக் கொண்டீர்களா?

வாரத்துக்கு இரண்டு நாள்கள் ஒரு ஆசிரியர் வந்து மணிப்பூரி மொழியைக் கற்றுக் கொடுக்கிறார்.   கற்றுக் கொள்ள கஷ்டமான மொழியாக இருக்கிறது. 
நெஞ்சில் நிற்கும் சில அனுபவங்கள்?

மணிப்பூரில் "ஷிரூய் லில்லி'  என்று ஒரு அபூர்வ பூ மலர்கிறது.  ஷிரூய் மலையில் மட்டுமே இது பூக்கிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் அது மலரும்போது சுற்றுலாத்துறையினர் பெரிய விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர். 

மணிப்பூரில் பழக்க- வழக்கங்கள் எவ்வாறு உள்ளன?

ஒருநாள் நான்  உணவு அருந்தியபோது,  புரை ஏறியது. உடனே என் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உள்ளூர்க்காரர் வெகு சுவாதீனமாக என் தலையில் கைவைத்து லேசாகத் தட்டினார். "அட! இது நம் ஊர் பழக்கமாயிற்றே!'  என நான் வியந்தேன். அந்தத் தருணத்தில்,  " யாரோ உங்களை நினைத்துக் கொள்கிறார்கள்!' என்று அவர் சொல்ல, வியப்பு பல 
மடங்காகியது!

மணிப்பூரின் பெருமை என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

போலோ விளையாட்டைக் கண்டுபிடித்தது மணிப்பூரில்தான். உள்ளூர் மக்கள் குதிரை மேல் ஏறி மட்டையை வைத்துக் கொண்டு ஆடிய (போலோ) விளையாட்டைப் பார்த்துவிட்டு, ஆங்கிலேயர்கள் அதை தங்கள் கண்டுபிடிப்பாக மற்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தினர்.  

மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் பலர் தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றிருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.