எண் 5, பெருமாள் கோயில் தெரு!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் ஐந்தாம் எண் வீட்டுக்கு ஒரு பெருமை உண்டு.


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் ஐந்தாம் எண் வீட்டுக்கு ஒரு பெருமை உண்டு. அது சுமார் 100 ஆண்டுகள் பழைமையானது. அதைவிட முக்கியமான விஷயம் அந்த வீட்டில் ஒரே குடும்பத்தில் வந்த ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர் என்பது. கூட்டுக் குடும்பம். மொத்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை
பதினேழு.
நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவரும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவருமான எத்திராஜ், பரம்பரையாக வந்த தங்கள் வீடு, முன்னோர்கள் குறித்து கூறியதாவது:
""வீரராகவலு செட்டியார்- அம்புஜம்மாள் எனது தாத்தா-பாட்டி. இந்த வீட்டை எங்கள் கொள்ளுத் தாத்தா-பாட்டி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால், 1920-ஆம் ஆண்டு வாக்கில் வாங்கினதாகச் சொல்லி இருக்கிறார். தரைத்தளமும், ஒரு மாடியும் கொண்ட மொத்தம் சுமார் 2,800 சதுர அடி வீடு.
தமிழக அரசில் தொழிலாளர் துறையில் தொழிற்சாலை ஆய்வாளராக இருந்தவர் அவர். பேட்மிண்டன், கால்பந்து ஆட்டக்காரர். சைதாப்பேட்டை மனமகிழ் மன்றத்தில் சுமார் 40 ஆண்டுகள் செயலாளராக இருந்தவர்.
நெருக்கடி நிலைக் காலத்தில், பொழுதுபோக்கு மன்றங்கள், கிளப்கள் செயல்பட தடை விதிக்கப்பட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எங்கள் தாத்தா சந்தித்து, "சைதாப்பேட்டை மனமகிழ் மன்றம் வெறும் பொழுபோக்கு கிளப் இல்லை; இந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் செஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் விளையாடும் இடம். இங்குள்ள நூல் நிலையத்தை நிறைய பேர் பயன்படுத்தி வருகின்றனர்' என்று எடுத்துச் சொல்லி, சிறப்பு அனுமதி பெற்று நடத்தினார்.
இந்தப் பகுதியில் திருவிழாக்களை எல்லாம் முன்னின்று நடத்துவார். அவருடைய தம்பி ஸ்ரீனிவாசன், பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். விளையாட்டு வீரர்.
எங்கள் அப்பா கமலநாபன், வங்கியில் தலைமைக் காசாளராக இருந்து ஓய்வு பெற்றவர். சமூக சேவகர். கோடைக் காலத்தில் ஒரு நாள் ஏழை மக்களுக்குக் கொடுப்பதற்காக ஆறு ஜோடி காலணிகளை வாங்கி எடுத்துக் கொண்டு பாரீஸ் பக்கம் சென்றார். இவர் காலணி கொடுக்கப் போகிறார் என்ற தகவல் பரவிய சில நிமிடங்களில் ஐம்பது, அறுபது பேர் கூடிவிட்டனர். எனது அப்பா உடனே, ஒரு ஐடியா செய்தார். அங்கே கூடி இருந்த அத்தனை பேரின் பெயர்களையும் துண்டு சீட்டுக்களில் எழுதிக் குலுக்கிப் போட்டு அவற்றில் இருந்து ஆறு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காலணிகளைக் கொடுத்துவிட்டார்.
அவருக்கு அந்தக் காலத் தலைவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம். ஜவஹர்லால் நேரு, பெரியார், காமராஜ், கலைஞர், கலாம் எனப் பலருடனும் புகைப்படங்களை எடுத்துக் கோண்டிருக்கிறார். அந்த சுவையான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
பெரியார் ஈ.வே.ரா.விடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியபோது, தனது புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றாராம். அவ்வாறு புத்தகம் வாங்கிக் கொண்ட பின்னரே புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளார்.
"ஜனதா கட்சியில் சேர்ந்தால்தான் புகைப்படம் எடுக்க அனுமதி' என்று மெரார்ஜி தேசாய் கூறியபோது, "நான் அரசு வங்கி ஊழியர். எனவே, விதிகளின்படி நான் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது' என்று தைரியமாகச் சொல்லிவிட்டார். மொரார்ஜி தேசாயும் அதை ஏற்றுக் கொண்டு, புகைப்படத்துக்கு அனுமதித்துள்ளார்.
சீன யுத்த நிதி வசூலித்தபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து நிதி அளித்தபோது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சென்னையில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் எனது தந்தை தன்னார்வலராகப் பணியாற்றியபோது, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
எண்பது வயதில் அப்பா காலமானபோது, உடனடியாக அவரது கண்களை தானம் செய்ததுடன் நிற்காமல், ராமசந்திரா மருத்துவமனைக்கு தகவல் சொல்லி, அவரது உடலையும் தானமாக அளித்தோம்.
நூறாண்டு ஆனாலும், எங்கள் வீடு இன்னமும் உறுதியாகவே இருக்கிறது. மாடியில் இருந்த ஓட்டுக் கூரையை, கான்கிரீட்டாகவே மாற்றியுள்ளார். அந்தக் காலத்தில் வெட்டிய கிணறு இன்னமும் இருக்கிறது.
கடும் வறட்சி ஏற்பட்டபோது, ஒரு தடவை மட்டும்தான் அதில் தண்ணீர் வற்றியது. இப்போது அந்தக் கிணறு, ஆழ்துளைக் கிணறு இரண்டுமே உள்ளன.
எங்கள் கொள்ளுப் பாட்டி-தாத்தா வாங்கிய வீட்டில், இன்று பி.டெக் படிக்கும் ஜான்சி ராணி, எம்.காம் படித்த லீலா ராம் உள்ளிட்ட ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த எள்ளுப் பேரன், பேத்திகள் வசிக்கின்றனர்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...