தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அந்தநாள் ஞாபகம்!

தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியுள்ள நிலையில், பல  ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்கள் இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 12:30 am

இரா. இரகுநாதன்


தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியுள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்கள் இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகம் கையடக்கத்தில் சுருங்கிவிட்ட நிலையில், "ஆன்லைன் தீபாவளி' களைகட்டிவரும் நிலையில், பழைய தீபாவளி கொண்டாட்டங்களை நினைவில் கொள்வோமா?

"2கே கிட்ஸ்'-களின் தீபாவளி கொண்டாட்டங்கள் ஆன்லைன், ஆஃப், இணையதளங்களில் பதிவு செய்து பொருள்களை வாங்குவதைக் காட்டிலும், 80-ஸ் கிட்ஸ், 90-ஸ் கிட்ஸ்களின் பொருள்கள் வாங்குவது என்பது ஒரு மாதமாகவே ஓடிக் கொண்டிருக்கும்.

நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தோரை சிரித்துப் பேசி, பகிர்ந்து கொண்டாடிய நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அன்றைய தீபாவளி கொண்டாட்டம் இன்றைய தலைமுறையினருக்காக:

மனசுக்குள் மத்தாப்பாய் ஒளிர்ந்து கொண்டிருந்த தீபாவளி எப்போது வரும் என ஏங்கி பத்து நாள்கள் முன்னதாகவே பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுத்தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு ,விரல்விட்டு நாள்களை எண்ணிப்பார்த்து, நண்பர்கள் யார், யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என கணக்குப்போட்டு, தாத்தாவிடம் போய் மெல்ல பேச்சுக் கொடுத்து நூறு ரூபாய்க்கு வாங்கலாமா? எனக் கேட்டு எதுவும் பதில் வராமல் பாட்டியிடம் போய் தாத்தாவிடம் போய் தகவல் சொல்லச் சொன்னது.

புதுத்துணி தைக்கக் கொடுத்து, தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா என நினைத்தபடியே ஏங்கி தினமும் பள்ளிக்குப் போய் வரும் வழியில் நண்பனை அழைத்துக் கொண்டு போய் டெய்லர் கடையில் அந்தோ பாருடா! மேலே கண்னாடி பீரோவில் 3-ஆவது தட்டில் இருக்கும் துணியைக் காட்டிக்காட்டி வந்தது .

சில நேரங்கள் டெய்லரிடம் தைக்கக்கொடுத்த சட்டை தயாராகாத நிலையில் தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு போய் பிளாட்பாரத்தில் தரையில் போட்டு விற்கும் அடர்பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம் என கலர் கலராக சாட்டீன் துணியை "பட்டு சட்டை எடுங்க சார்! ! போனா வராது! பொழுது விடிஞ்சா கிடைக்காது!!' என கூவி விற்றவரிடம் 7 அணாவுக்கு பேரம் பேசி 5 அணாவுக்கு வாங்கி தாத்தாவுடன் வரும் போது பைக்குள் கை விட்டு தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டு தூக்கக்கலக்கத்துடன் வீட்டுக்கு வந்தது


அக்காவும் தங்கையும் மெதுவாக நண்பிகளிடம், "எனக்கு பட்டுப்பாவாடை வாங்கித்தரேன்னு அம்மா சொல்லியிருக்காடீ!' எனச் சொல்லி மகிழ்ச்சியை அமைதியாக வெளிக்காட்டி, "இந்த தீபாவளிக்கு நல்ல மருதாணி அரைச்சு வைச்சு விடரேன்னு சொல்லியிருக்காங்க' என சொல்லி சொல்லி மாய்ந்து போனது.

நமக்குத்தெரியாமல் அப்பாம்மாக்கள் புது உடைகளை வாங்கி பாழாப்போன "சர்ப்ரைஸ்' என்ற பேரில் ஒளித்துவைத்திருக்க, முதல் நாள் இரவு சுவாமி படத்தின் முன் வைத்ததை தொட்டுத் தொட்டுப் பார்த்து மனம் முழுக்க மகிழ்ந்தது.

ஒரு வாரம் முன்னாலேயே பலகாரங்கள் தயாராகும்போதே நாக்கில் உமிழ் நீர் ஊற நண்பனிடம் போய் எங்கவீட்டில் செய்யாத பலகாரங்களைக் கூட பொய்யாக சொல்லி, அவசர அவசரமாக சாமிக்கு காட்டியவுடன் வாயில் போட்டுக் கொண்டு பட்டாசு வெடிக்க ஓடியது.

தாத்தா பாட்டியோடதான் தீபாவளி என்று ஆசையோடு அப்பா ஜன்னல் வழியாக இடம் போட்டு பஸ்ஸில் பயணம் செய்துஅங்கே உள்ள பழய, புதிய நட்புகளுடன் ஜாலியாகப் பழகியது.

முதல்நாள் மாலையே அப்பா கையைபிடித்து மத்தாப்பு புஸ்வாணங்கள், தரைச்சக்கரங்கள் விட்டு, கிட்டேவரும்போது பயந்து தாண்டி குதித்து பிறர் கேலி செய்ய, போறும் சீக்கிரம் படு, விடிஞ்சா தீபாவளி, சீக்கிரம் எழுந்துக்கணும் என விரட்டிய தாத்தாவுக்கு பயந்து கள்ளத்தூக்கம் தூங்க கண்மூட உண்மையாகவே தூங்கிப்போனது.

அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் பலவந்தமாக எழுப்பி பாதி தூக்கத்திலேயே தன் பழுத்த கைகளால் இளஞ்சூடோடு கூடிய பாசத்தில் பாட்டி எண்ணெய்த் தேய்க்க அந்த இருட்டிலே கொட்டாங்குச்சியால் சுட்ட வெந்நீர் அடுப்பில் குளிர் காய்ந்தது.

மிளகும் மிளகாயும் போட்டு காய்ச்சிய எண்ணெய் போக சீயக்காய் பொடியை அம்மா தேய்க்க நம் கண் எறிய அலறியது.

சுவாமி படத்தின் முன்னால் குங்குமம் தடவிய புத்தாடையை பெரியவர்கள் எடுத்து தர அதை மாட்டிக்கொண்டு பட்டாசை தூக்கிக்கொண்டு தெருவில் ஓடியது.

வழி மறித்துக் கூப்பிட்டு பெரியவர்களை வணங்கச் சொல்லி தீபாவளி இனாம் என்று காசு அப்பா தர, வாயில் தீபாவளி மருந்தையும் அல்வாவையும் அம்மா ஊட்டியது.

ஒருமணிக்குக் குறைவாக ஒத்தவெடி, குருவி வெடி, சீனிப்பட்டாசு, ஓலைவெடி புஸ்வானம் ரெட் போர்ட் 24 சரம் ஊசி வெடி என எல்லாம் வெடித்து தெரு முழுக்க எல்லா நண்பர்கள் வீட்டுக்கும், நழுவி விழும் டிராயரைத் தூக்கி விட்டுக் கொண்டு யார் வீட்டில் வெடிக்குப்பை அதிகம் என சர்வே செய்து கொண்டு குறைவாக குப்பை கிடக்கும் நண்பனிடம் எங்கள் வீட்டில் 2 வண்டி குப்பை கிடக்கிறது . இன்னும் மதியம் மாலைவேற வெடிக்கனும் என வெட்டி அலுப்பு காட்டியது.

காலை 6 மணிக்கெல்லாம் தீபாவளி இட்லி, வடை, பஜ்ஜியும் சாப்பிட்டுச் சட சட என சரம் வெடிப்பதை பார்த்து துள்ளும்போது, காசைக் கரியாக்காம ஒண்ணொண்ணா பிரித்து வெடிடா என்று திட்டு வாங்கியது .

ரெண்டு சீனி வெடியை சேர்த்து, கொட்டாங்குச்சி ஓட்டைக்குள், மண்ணைக்கவித்து அதில் சொருகி என வித விதமாக ரசித்துக் கொண்டாடியது.

அக்கம்பக்கத்து வீடுகளில் யார் வீட்டிலாவது தலைதீபாவளிக்கு அதிகமாக பட்டாசு வெடிப்பதை அப்பாம்மாவுக்கு தெரியாமல் நம் கெளரவம் குறையாமல் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தது நம் வீட்டில் யாருக்காவது தலை தீபாவளி எப்போது வருமென ஏங்கியது.

அம்மாவும் பக்கத்து வீட்டம்மாவும் என்ன தீபாவளி ஆச்ச்ச்சா? என ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்துக் கொள்ளுவது? பக்கத்து வீட்டிலிருந்து பெரியவர் சிறியவர் என எல்லோரும் வந்து தாத்தா பாட்டிக்காலில் விழுந்து ஆசி வாங்கிச் செல்வது.

போஸ்ட்மேன் எப்போ வருவார் என 10 மணியில் இருந்து காத்திருந்து அவர் தெருக்கோடியில் வரும்போதே எதிர் கொண்டோடி சார் எங்கள் வீட்டுக்கு வாழ்த்து அட்டை வந்துருக்கும் சார் கொடுக்கறீங்களா சார் எனக் கேட்க , அவர் என்னிடமே மரியாதையாக நீங்கள் கீழே போட்டுவிட்டுப் போயிட்டீங்கன்ன நல்லாருக்காது நானே கொண்டுவந்து கொடுத்துட்டு தீபாவளி காசு வாங்கனும் தம்பி எனச்சொல்லுவது.

அக்காவும் தங்கையும் தட்டுகளில் தீபாவளி பலகாரங்களுடன் முறுக்கு இதர இனங்களுடன் தீபாவளி மருந்தையும் சேர்த்து வைத்துக் கொண்டு எடுத்துப்போய் வீடு வீடாக அம்மா கொடுக்கச் சொன்னாங்க எனச் சொல்லி கொடுத்துவிட்டு வரும் போது பட்டாசை கொளுத்திப்போடுவது போல் பாவ்லா காட்ட வேண்டாண்டா' என அலறியது ராத்திரியில் சீக்கிரமே ஊர் களைப்பால் ஓய்ந்திட, நம்மை ஏக்கத்திலும் தூக்கத்திலும் ஆழ்த்தி நாம் அறியாமல் விடைபெற்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் மிக்க அந்த மனிதர்களின் உணர்வுகளில் கலந்து ஒட்டிய தீபாவளியை எங்கேயாவது பார்த்தால் திரும்ப வரசொல்லுங்களேன் ஆசையாக இருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.