

"நூற்றுக்கணக்கான புள்ளியியல் விஞ்ஞானிகளை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியதே எனக்கு மன நிறைவைத் தருகிறது!'' என்கிறார் நூற்று இரண்டு வயதான கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ்.
அவர் புள்ளியியல் மேதை மட்டுமல்ல; பொருளாதாரம், மரபியல், மானுடவியல், நிலவியல், தேசிய திட்டமிடல், மக்கள்தொகையியல், மருந்தியல், உயிரிப் புள்ளியியல் உள்ளிட்ட பல துறைகளிலும் புள்ளியல் யுக்திகளைப் புகுத்தியவர்.
1920-ஆம் ஆண்டில் அவர் பிறந்தார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணிதத்தில் முதல் மாணவராகவும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுகலை படிப்பில் தங்கப் பதக்கத்துடனும் தேர்ச்சி பெற்றார்.
1941-ஆம் ஆண்டில் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் ஆராய்ச்சியாளராக ராவ் இணைந்தார். "இந்திய புள்ளியியலின் தந்தை' என்றழைக்கப்படும் பிரசாந்த் சந்திர மகலனோபிஸ்ஸால் நிறுவப்பட்ட அந்த அமைப்பில், அவரது வழிகாட்டலில் பணியாற்றும் வாய்ப்பு ராவுக்கு கிடைத்தது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல், தொல்லியல் அருங்காட்சியகத்தின் மேம்பாட்டுத் திட்டப் பணிக்காக ராவை பிரிட்டன் அழைத்தது.
அழைப்பை ஏற்று 1946-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்ற ராவ், மகலனோபிஸ் வடிவமைத்த புள்ளியியல் மாதிரியைக் கொண்டு அந்தத் திட்டப் பணியை வெற்றிகரமாக முடித்தார்.
அப்போது, கிங்ஸ் கல்லூரியில், உலகப் புகழ்பெற்ற புள்ளியியல் மேதை ஆர்.ஏ.ஃபிஷ்ஷரின் மேற்பார்வையில் முனைவர் பட்டமும் பெற்றார். பிறகு இந்தியா திரும்பிய ராவ், 1980-ஆம் ஆண்டு வரை, சுமார் 40 ஆண்டுகள் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
ராவ் ஐஎஸ்ஐ இயக்குநராக இருந்தபோது, புள்ளியியல் ஆராய்ச்சி, பயிற்சிப் பள்ளியைத் துவக்கி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அந்தத் துறைக்குள் கொண்டுவந்தார்.
ஐ.நா. சபையின் புள்ளியியல் துறைக் குழுவின் தலைவராக ராவ் இருந்தபோது, ஆசிய பசிபிக் புள்ளியியல் கல்வி நிறுவனம் டோக்கியோவில் 1970-இல் உருவானது. இதில், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில புள்ளியியல் மையங்களை ராவ் தொடங்கினார். அவை மத்திய, மாநில அரசுகளின் திட்டமிடலில் இன்றும் பெரும் பங்காற்றுகின்றன. மத்திய புள்ளியியல் நிறுவனம், தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆகியவற்றின் பணிகளிலும், ஆராய்ச்சிகளிலும் ராவ் துணை புரிந்தார்.
ராவின் தனிப்பட்ட முயற்சியால் இந்திய எகனோமெட்ரிக் சங்கம் 1960-இல் துவங்கப்பட்டது. திட்டமிடலுக்கான பொருளாதாரத்தைப் பயிற்றுவிக்கும் படிப்புகளை இந்த அமைப்பு முன்னெடுத்தது. இந்திய மருத்துவப் புள்ளிவிவரங்களுக்கான சங்கத்தையும் ராவ் 1983-இல் நிறுவினார்.
பணி ஓய்வுக்குப் பிறகு, தனது 60-வது வயதில் அமெரிக்கா சென்ற ராவ், அங்கு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு, பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியராகச் சேர்ந்த ராவ், இன்றுவரை ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது அவர் அமெரிக்காவின் பேன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பபெலோ பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.
ராவின் மனைவி பார்கவி, கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இத்தம்பதியரின் மகன், மகள் அமெரிக்காவில் விஞ்ஞானிகளாகப் பணிபுரிகின்றனர்.
கிராமர்-ராவ் இன்ஈகுவாலிட்டி, ராவ் பிளாக்வெலைசேஷன், ராவின் ஸ்கோர் சோதனை, ஃபிஷ்ஷர்-ராவ் தேற்றம், ராவ்-ரூபின் தேற்றம், லூ-ராவ் தேற்றம், காகன்-லின்னிக்-ராவ் தேற்றம் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை புள்ளியல் அறிஞர்களுடன் இணைந்து ராவ் நிகழ்த்தியிருக்கிறார்.
புள்ளியியலில் 14 நூல்களை எழுதியுள்ள சி.ஆர்.ராவ், பல துறைகளில் பயன்படும் புள்ளியியல் குறித்த 27 கையேடுகளைத் தயாரித்துள்ளார்.
இதுகுறித்து ராவ் கூறுகையில், "நூற்றுக்கணக்கான புள்ளியியல் விஞ்ஞானிகளை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியிருக்கிறேன். அதுதான் எனக்கு மன நிறைவைத் தருகிறது!'' என்கிறார்.
-சுதந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.