

இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு இரண்டு பேரை தமிழுலகம் மறந்து விட்டது. ஒருவர் தமிழ் ஒளி, மற்றொருவர் கம்பதாசன். தமிழ் ஒளியை இடதுசாரி இயக்கங்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டன. பன்முகப் பேராற்றல் படைத்த கம்பதாசனை தமிழ் கூறு நல்லுலகம் மறந்து விட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
""நண்பர் கம்பதாசனை யாவரும் அறிவர். அவர் கவி. கவிராயனுக்குரிய கவலையற்ற தன்மையும், மிடுக்கும், திமிரும், காம்பீர்யமும் அவரிடம் காண்பது போல் மற்றவர்களிடம் காண முடியாது. வாழ்வையும், கவிதையையும், காவியக் கனவையும் ஒன்றாக்கிய கவின் அவரது உள்ளத்தின் கனிவு. வறுமையூடும், செல்வத்தூடும் மனங்கலங்காது குலுங்காது அநாயாசமாகப் பறந்து செல்லும் வானம்பாடி அவர்...'' என்று ச.து.சு. யோகியார் கூறியுள்ளார்.
இவரது தந்தை சுப்பராயர் புதுச்சேரியைச் சேர்ந்த வில்லியனூரைச் சேர்ந்தவர். இவரது தாயார் பாலாம்பாள் திண்டிவனம் அருகேயுள்ள உலகாபுரம் என்னும் ஊரினர். அதன் காரணமாக கம்பதாசன் தம் தாயாரின் ஊரில் பிறந்தார். இளமையிலேயே சென்னைக்குக் குடியேறினார்.
இவரது இயற்பெயர் அப்பாவு. பள்ளிப் படிப்பில் நாட்டம் கொள்ளாமல் நாடகக் குழுக்களுக்குச் சென்று விடுவார். இனிமையான குரல் வளத்தினால் பாடகராகவும், நடிகராகவும், நாடங்களில் புகழ் பெறத் தொடங்கினார். நடிப்புத் துறையில் இவர் பெயர் சி.எஸ்.இராஜப்பா. இறுதியில் "கம்பதாசன்" என்னும் மாபெரும் மக்கள் கவிஞராக மாறினார்.
கவிஞரின் வறுமைக்குக் காரணம் அவரது திட்டமிடப்படாத வாழ்க்கை முறையே யாகும். அன்றைய தினம் தமிழ்க் கவிஞர்களில் திரைப்படப் பாடல் எழுதுவதற்கு அதிகத் தொகை வாங்கிய முதல் கவிஞர் கம்பதாசனே!
1934ஆம் ஆண்டு வெளிவந்த "சீனிவாச கல்யாணம்' என்னும் திரைப்படத்துக்கு முதல் பாடல் எழுதியதாகத் தெரிகிறது. 1940இல் வெளிவந்த "வாமன அவதாரம்' திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்களே சான்றுகளாகக் கிடைக்கின்றன.
இதனைத் தொடர்ந்து வேணுகானம், ஆராய்ச்ச்சி மணி, பூம்பாவை, உதயனின் ஞான செளந்தரி, மங்கையர்க்கரசி, இதயகீதம், வனசுந்தரி, வானரதம், அக்பர் ஆகிய ஏராளமான படங்களுக்கு கம்பதாசன் பாடல்களை எழுதினார். 1940ஆம் ஆண்டு தொடங்கிய அவரது பாடல் இயற்றும் பணி 1971ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. 31 ஆண்டுகள் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார். அவர் சமதருமக் கொள்கையை வாழ்க்கையில் கடைபிடித்தவர். பணத்தைச் சேர்த்து வைக்கக் கூடாது என்று நினைத்தார்.
கவிதைகள், திரைப்பாடல்கள் மட்டுமின்றி, காவியங்கள் பதின்மூன்றையும் இயற்றியுள்ளார். கனவு, காணிக்கை, காதலும் கண்ணீரும், புத்தன் புனர் ஜென்மம், சாவுக்கு விருந்து, வேளை வந்தது, இரத்த ஓவியம், கல்லாத கலை, சொல்லாத சொல், கறிகனி, மொழி முத்தம், கம்பக் குயில் என்னும் இந்தக் காப்பியங்கள் அவரது கவித்துவத்தை வெளிப்படுத்தும்.
இவரது நூல்கள் பற்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாராட்டியுள்ளார்: "கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இயற்றப்பட்டவை. அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று. உண்மையில் கம்பதாசன் எண்ணம் நன்று. கவிதை உள்ளம் நன்று. நல்ல கற்பனையே புதுமையை வரவேற்கும் தன்மையே அதைப் போற்றும் ஆற்றலைக் காணுகின்றேன்' என்று கூறியுள்ளார்.
அறிஞர் வ.ரா. "புத்தர் புனர் ஜென்மம்' காவியம் பற்றி பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது இது கம்பதாசன் கவிதையில் வரைந் திருக்கும் அற்புதச் சித்திரமாகும். தமது கவி தர்க்க சாஸ்திரத் திறமையினால் மறுபிறப்பில் நம்பிக்கை யில்லாத புத்தனைக்கூட புனர்ஜென்மம் எடுக்கும் படியாகக் கம்பதாசன் செய்திருப்பது விசித்திர மான வேலைப்பாடாகும்.
நாடக நடிகராகத் தம் கலைப் பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் தொடர்ந்து தமது இனிமையான குரல் வளத்தால் பின்பாட்டுக்காரராகவும் ஆர்மோனியம் வாசிக்கும் பக்கவாத்தியக்காரராகவும், நாடகங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞராகவும் வளர்ந்தார். இறுதியில் திரையுலகம் அவரை இரு கரம் கூப்பி வரவேற்றது. அகில இந்திய அளவில் புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் ஆனார்.
1956ஆம் ஆண்டு வெளிவந்த "நன்னம்பிக்கை' என்னும் திரைப்படத்துக்குத் தொழிலாளியைக் கடவுளுக்கு ஒப்பிட்டு ஒரு பாடல்:
சூரியனும் ஒரு தொழிலாளி தினம்
சுற்றும் உலகும் தொழிலாளி
வாரி அலையும் தொழிலாளி எதிர்
வந்திடும் காற்றும் தொழிலாளி
மாரி நதியும் தொழிலாளி இருள்
மலரும் உடுவும் தொழிலாளி
பாரை நடத்தும் தொழிலாளி இனி
பரமனடா கலை பிரமனடா
1961 ஆம் ஆண்டு "அக்பர்' திரைப்படத்துக்கு இவர் இயற்றிய பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. "கனவு கண்ட காதல்' பாட்டினை கேட்டு இந்திய திரையுலகமே வியந்தது. அங்கே கருத்தும் இசையும் கைகோத்துக் கொண்டது.
"கனவு கண்ட காதல் கண்ணீராச்சே!
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே!
மழை சூழலாச்சே!' (கனவு)
காதலரின் பிரிவுத் துயரத்தை இதைவிடச் சிறப்பாக யாரால் கூற இயலும்? திரைப்படத்துக்கு மட்டுமல்ல, அவரது காதல் தோல்விக்கும் பொருத்தமானது. இந்தப் பாடல் அடிகள் திரும்பத் திரும்ப வந்து இதயத்தின் துயரத்தை மிகுதிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
கம்பதாசன் இக்கால யுவ எழுத்தாளர், கலை வல்லார், ஆவேசத் துடிப்புடன் புதுவாக்குத் தேடி, புதிய சாதனை வேண்டி நிற்கிறார். காவிய தெய்வத்தின் அபூர்வ வார்ப்படத்திலே பழைய ரத்தம் பாய்ந்திருந்தாலும் புதுக்குரலின் தெளிந்த தொனிப்பு கேட்கிறது என்று கம்பதாசனின் பாட்டுத் திறனைப் பற்றி கவிஞர் ஹரிந்திரநாத் சட்டோபாத்தியாயா குறிப்பிட்டுள்ளார். இவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர். இவரே இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் நெளஷாத்திடம் கம்பதாசனை அறிமுகம் செய்து வைத்தவர்.
அகப்பாடல்கள் மட்டுமல்லாமல், சமுதாயப் பாடல்கள், இறையுணர்வுப் பாடல்கள் என எல்லாவற்றிலும் அவர் முத்திரை பதித்தார். 1948ஆம் ஆண்டு வெளிவந்த "ஞானசெளந்தரி' படத்தில் இவர் எழுதிய மேரி மாதாப் பாடல் கேட்டவர் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.
அருள்தாரும் தேவமாதாவே!
ஆதியே! இன்ப ஜோதியே!
என்னும் இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் ஆனந்தக் கண்ணீர் சொரிவர்.
அப்படிப்பட்ட கவிஞரின் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் பத்தாண்டுகள் வறுமையில் வாடி துயரங்களை அனுபவித்தார். அதனை அவரே இப்படிக் கூறுகிறார்:
இன்று என்னை வறுமையில் ஆழ்த்தி, என் வாழ்வைக் குலைத்த சிறுபகை, நரிகளின் கூட்டம். நான் இவ்வுலகை விட்டு இறந்த பிறகாவது உண்மைக் கவிஞன், உலக மனிதன் என்று ஏற்குமாகில் இயேசு கிறிஸ்து கூறியது போல், அவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள், அவர்களை மன்னியுங்கள் என்று எனது ஆத்மா சாந்தியடையும்.
நித்தம் வறுமையில் நெஞ்சழிந்து தன்னை
நேசனெனச் சொல்ல யாருமின்றி
பித்தன் இவனெனக் காட்சிதந்து உயிர்
பிரிந்தபின் புகழைப் பெறுபவர் யார்?
என்னும் இவர் கவிதை சிந்திக்கத்தக்கது.
கவிஞரின் கடைசிக் காலம் வேதனை மிகுந்தது. வறுமை, காதல் தோல்வி, காசநோய் மூன்றும் வாட்டி வதைக்க சமூகத்தின் புறக்கணிப்பால் தனித்து விடப்பட்ட கம்பதாசன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 1973 மே 23இல் ஓர் அநாதையைப் போல மரணத்தைத் தழுவினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.