

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட கோவிந்தப்பேரி கிராமத்தில் சப்தமின்றி, சிறந்த அளவில் கல்விப்புரட்சியை கலைவாணி கல்வி மையம் மேற்கொண்டுவருகிறது. பல்வேறு காரணங்களால், பள்ளிப் படிப்பைத் தொடராமல் பாதியில் இடைநின்றவர்கள்தான் இங்கு பயின்று வருகின்றனர். சர்வதேச அளவில் பிரபலமான கணினி மென்பொருள் துறை நிறுவனமான "ஜோஹோ' இந்தப் பள்ளியை நிர்வகித்துவருகிறது.
இதுகுறித்து அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது:
""கரோனா காலத்தின்போது, கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. பள்ளிகள் மூடப்பட்டுவிட்ட நிலையில், மாணவர்கள் இலக்கின்றி பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தினமும் சில மாணவர்களை அழைத்து, உணவு அளித்து நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தேன். நல்ல வரவேற்பும் கிடைத்தது.
கரோனா காலத்துக்குப் பின்னர், மாணவர்களில் பலர் குடும்பச் சூழ்நிலைகளால் பள்ளிக்கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு, கல்வியைத் தொடருவதற்கு உதவும் நோக்கத்துடன் 2021 ஆம் ஆண்டில் தொடங்கியதுதான் "கலைவாணி கல்வி மையம்'.
சுடுகளிமண்ணில் அணிகலன்கள் செய்தல், தையல் பயிற்சி, இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்த்தல் உள்ளிட்ட தொழிற்கல்வியும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றைப் படித்தால் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட திறனும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களை உருவாக்குவதே இந்த மையத்தின் நோக்கம். கோவிந்தப்பேரி பள்ளியில் ஓரிரு ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை 750ஐ தாண்டிவிடும்.
இந்த ஆண்டு கம்பத்தில் 50 மாணவர்களோடு கலைவாணி கல்வி மையத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கலைவாணி கல்வி மையத்தின் பள்ளிகள் எண்ணிக்கை இருநூறாக வேண்டும் என்பதே லட்சியம்.
கோவிந்தப்பேரி கிராமத்தில், குடிநீர் வரவில்லை என்று மாணவர்கள் வேதனைப்பட்டனர். விசாரித்தபோது, குடிநீர் விநியோகிக்கும் தண்ணீர் தொட்டி மாசற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது. நாங்கள் பள்ளி மாணவர்களோடு களம் இறங்கி, தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்தோம். பள்ளி மாணவர்களின் சமூகப் பணியைப் பார்த்து ஊரே வியந்தது'' என்றார்.
இந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் அட்சயா சிவராமன் கூறியதாவது:
"மென்துறையில் பொறியாளராகப் பணிபுரிந்தேன். சமூக அக்கறை, கற்பித்தல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, கல்விப் பணிக்கு வந்துவிட்டேன்.
இன்றைய சூழ்நிலையில் கட்டணமே வாங்காமல், முற்றிலும் இலவசமாகவே இந்தப் பள்ளியை நடத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் மாணவ, மாணவிகளுக்கு தரமான, ஆரோக்கியமான காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை நொறுக்குத் தீனிகளையும் வழங்குகிறோம்.
ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி, மதிப்பெண்களில் தேர்வு முறை நிர்ணயிக்கப்படுவதில்லை. மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. பள்ளி வளாகமே இயற்கையுடன் ஒருங்கிணைந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு வயது முதல் பதினாறு வயது வரையிலான மாணவ, மாணவிகள் எவரானாலும், இங்கே கேள்விகள் ஏதும் கேட்காமல், அவர்களிந் குடும்பப் பொருளாதார நிலையைப் பார்க்காமல், இங்கே சேர்க்கை வழங்கப்படுகிறது.
அடிப்படைக் கல்வி பயிலும் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு முழுக்க, முழுக்க மாண்டிச்சேரி கல்வி முறை இங்கே பின்பற்றப்படுகிறது காலையில் ஏழரை மணிக்கு ஒருநாள் யோகா, மறுநாள் தோட்டவேலை.. என்று உடற்பயிற்சியுடன் பள்ளி வகுப்புகள் துவங்குகின்றன.
பின்னர், காலை சிற்றுண்டி. இதையடுத்து, பாடங்கள். இங்கே கல்வி அறிவுடன் கணிதத் திறனை மேம்படுத்தக் கூடிய வகையில் பாடத் திட்டத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வாழ்வியல் தொடர்பான விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவு இடைவேளைக்குப் பின்னர், நாட்டியம், சிலம்பம், பாட்டு, நாடகம் போன்றவற்றுடன் திருமுறைகள் உள்ளிட்ட பல பக்தி இசை என்று கூடுதல் பாடத் திட்டமாக இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
பாடல்கள், சுலோகங்கள் மூலமாக மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கப்படுகிறது.
கடந்த கல்வியாண்டுவரை சுமார் 130 மாணவ, மாணவிகள் கல்வி கற்றனர். இந்தக் கல்வியாண்டில் கூடுதலாக, 120 பேர் சேர்ந்திருக்கின்றனர்.
மெட்ரிக், மாநிலக் கல்விப் பாடத் திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயின்ற மாணவர்களும் இங்கு புதிதாகச் சேர்ந்துள்ளனர்.
""எங்கள் பள்ளியில் தேசிய திறந்த நிலைப் பள்ளிக்கல்வி முறையின்கீழ், எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தைப் பின்பற்றி, அரசுப் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அதன்பின்னர், பத்து, 12ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு. பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஐந்து பாடங்களில் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயம் இந்தக் கல்வி முறையில் கிடையாது. மாணவர்கள் தன்னுடைய விருப்பப்படி மூன்று பாடங்களை மட்டும் தேர்வு செய்து தேர்ச்சி பெற்றால் போதும். அடுத்த தேர்வின்போது மீதி இரண்டு பாடங்களில் தேர்வு எழுதும் சலுகை உண்டு.
மாணவர்கள் தமிழ் வழியில் பாடம் கற்றுக் கொண்டபோதிலும், ஆங்கிலமும், இந்தியும்கூட கற்றுத் தரப்படுகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.