மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வரலாற்று சிறப்புமிக்கக் கோட்டைகள்..!

தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள் பழைமை வாய்ந்தவை. பழங்கால மன்னர்களின் வரலாற்றையும் கட்டடக் கலையையும் இன்றும் பறைசாற்றி வருகின்றன.  கோட்டைகளின் வரலாற்றை சிறு குறிப்பாக அறிவோமா?

News image
Updated On :10 ஜூன் 2023, 6:30 pm

ஆ. கோ​லப்​பன்


தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள் பழைமை வாய்ந்தவை. பழங்கால மன்னர்களின் வரலாற்றையும் கட்டடக் கலையையும் இன்றும் பறைசாற்றி வருகின்றன. கோட்டைகளின் வரலாற்றை சிறு குறிப்பாக அறிவோமா?

புனித ஜார்ஜ் கோட்டை

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டை. அன்றைய கடற்கரையோர நகரான மதராஸில் (இன்றைய சென்னை) கி.பி.1639இல் கட்டப்பட்டது. புனித ஜார்ஜ் நினைவு நாளான ஏப். 23இல் கட்டி முடிக்கப்பட்டதால் இதற்கு, அவருடைய பெயரே சூட்டப்பட்டது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், சட்டப் பேரவை உள்பட முக்கிய அரசு அலுவலகங்கள் இங்குதான் இயங்கிவருகின்றன.

வேலூர் கோட்டை

கி.பி.16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின்போது, சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை வேலூர் நகரில் அமைந்துள்ளது. கி.பி. 1806இல் இந்தக் கோட்டையில்தான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, இந்திய சிப்பாய்கள் புரட்சி செய்தனர். திப்பு சுல்தான் குடும்பத்தினரும், இலங்கையில் உள்ள கண்டி அரசின் கடைசி மன்னரான ஸ்ரீவிக்கிரமராஜ சிங்கனும், குடும்பத்தினரும் இந்தக் கோட்டையில்தான் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

அறந்தாங்கி கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ளது. இது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தொண்டைமான்களால் கட்டப்பட்டது.

ஆலம்பரை கோட்டை

மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடப்பாக்கம் என்ற கிராமத்துக்கு அருகே அமைந்துள்ளது. இது 17ஆம் நூற்றாண்டில் மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது.

உதயகிரி கோட்டை

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட நாகர்கோவில் நகரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. கி.பி. 1600களில் திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்டது. கி.பி. 18ஆம் நூற்றாண்டில் திருவாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மனால் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

சங்ககிரி கோட்டை

15ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி நகரில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது, கொங்கு நாட்டின் வரிகளைச் சேமிக்கும் இடமாக விளங்கியது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

செஞ்சி கோட்டை

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சியில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் இதனை கிழக்கின் ட்ராய் என்று அழைத்தனர். 9ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் இங்கு சிறிய கோட்டை கட்டப்பட்டது. பின்னர். 13ஆம் நூற்றாண்டில் விஜநகரப் பேரரசு காலத்தில் கோட்டை விரிவாக்கம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் கோட்டை

திண்டுக்கல் நகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோட்டை முன்பு மலைக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. கி.பி. 1605இல் மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, 18ஆம் நூற்றாண்டில் மைசூரு மன்னர்கள் வசமானது. மைசூரை ஆண்ட ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் காலத்தில் இது முக்கிய கோட்டையாகத் திகழ்ந்தது.

திருமயம் கோட்டை

40 ஏக்கரில் அமைந்துள்ள கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் நகரில் உள்ளது. இது ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதியால், கி.பி. 1687இல் கட்டப்பட்டது.

புனித டேவிட் கோட்டை

இது சோழ மண்டலக் கடற்கரையில் கடலூருக்கு அருகே அமைந்துள்ளது. ஆங்கிலேயர் கோட்டையாகும். கி.பி. 1690இல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தக் கோட்டையை மராட்டியர்களிடமிருந்து விலைக்கு வாங்கியது. 1746இல் இது தென் இந்தியாவின் ஆங்கிலேயர் குடியிருப்புகளின் தலைமையகமாக விளங்கியது. 1756ஆம் ஆண்டில் ராபர்ட் கிளைவ் இந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு, ஆளுநராக ஆட்சிபுரிந்தார்.

மனோரா கோட்டை

நெப்போலியனுடனான ஆங்கிலேயரின் வெற்றியைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் மனோரா என்ற நினைவுச் சின்னத்தைக் கட்டினார். இது தஞ்சை மாவட்டத்துக்கு உள்பட்ட மல்லிப்பட்டினம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 230 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரம் எட்டு அடுக்குகளில் அறுகோண வடிவில் அமைந்துள்ளது. இது "மினாரட்' என்ற சொல்லில் இருந்தே "மனோரா' என்ற பெயரை பெற்றுள்ளது.

ரஞ்சக்குடி கோட்டை

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பெரம்பலூர் நகருக்கு வடக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கர்நாடக நவாப்புக்கு கட்டுப்பட்ட சிற்றரசால் கட்டப்பட்டது. இங்குதான் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கும் சந்தா சாகிப்புக்கும் 1751இல் வலிகொண்டா போர் நடைபெற்றது.

ராஜகிரி கோட்டை

கி.பி. 1200இல் கட்டப்பட்ட இந்தக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சியில் அமைந்துள்ளது. ராஜகிரி என்ற சொல்லுக்கு "அரசன் மலை' என்று பொருள்.

வட்டக் கோட்டை

வட்ட வடிவில் இருக்கும் இந்தக் கோட்டை கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஜெல்டிரியா அல்லது ஜெல்டாரியா கோட்டை

டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் கி.பி. 1613ஆம் ஆண்டில் பழவேற்காடு என்ற இடத்தில் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது டச்சுக்காரர்களின் வலுவான கோட்டையாக விளங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.