மனிதக் கணினியின் மகேசன் சேவை!
நூறு வயதைக் கடந்தும் மக்கள் சேவையையே மகேசன் சேவையாகக் கருதி செய்துவருகிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சி.என். கோதண்டராமன்.


நூறு வயதைக் கடந்தும் மக்கள் சேவையையே மகேசன் சேவையாகக் கருதி செய்துவருகிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சி.என். கோதண்டராமன்.
இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்தபோது, புத்திசாலித்தனம், செயல்திறன், அசாதாரண நினைவாற்றல், அற்புதமான எண்கணித திறன் ஆகியவற்றுக்காகத் தனித்து அறியப்பட்டவர். ஒரு நொடியில் இலக்கக் கணக்கீடுகளை இலகுவாக செய்து முடித்துவிடுவதால், "மனிதக் கணினி' என்றும் அழைக்கப்பட்டவர்.
கால்குலேட்டர் பயன்பாடு பெரிதாக இல்லாத நாள்களில் கோதண்டராமனின் மூளைதான் திருச்சி ரயில்வே கோட்டத்தின் 3 டிஜிட் கால்குலேட்டராக இயங்கியது. இத்தகைய பெருமைகளை சுட்டிக்காட்டி திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகமே கோதண்டராமனின் நூற்றாண்டு பிறந்த நாளில் (கடந்த மே 1ஆம் தேதி) வீடு தேடி நேரில் வந்து பாராட்டுப் பத்திரத்தை அளித்தது.
1923ஆம் ஆண்டு மே 1இல் பிறந்த கோதண்டராமன், அந்தக் காலத்தில் இன்டர்மீடியட் கல்வி பயின்றவர். 1943 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போதே, தென்னிந்திய ரயில்வேயின் திருச்சி பிரிவில் தனது இருபதாவது வயதில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பதவி உயர்வுகளைப் பெற்று, கணக்குத் துறை துணைத் தலைவராக உயர்ந்து 1981இல் பணி ஓய்வு பெற்றார்.
நான்கு ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலும், சுதந்திரத்துக்குப் பின்னரும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர்.
கணிதத்தில் மட்டுமின்றி மக்களின் மனங்களையும் கணித்து யாருக்கு என்ன தேவையோ அதனை உடன் நிறைவேற்றித் தருவதில் முனைப்புடன் கோதண்டராமன் செயல்படுவது வழக்கம். ஆதரவற்றோர், தாழ்த்தப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவதுடன், வறுமை காரணமாக திருமணம் செய்ய இயலாத நிலையில் உள்ள 42 பெண்களுக்கு வேண்டிய சீர்வரிசைகளை வழங்கி, செலவுக்கும் உதவி திருமணம் செய்து வைத்துள்ளார். தனது பரிந்துரையால் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பலரும் ரயில்வே பணியில் சேருவதற்கு பாலமாக இருந்தவர். நான்கு தசாப்தங்களைக் கடந்த அலுவல் பணிக்கு மட்டுமே ஓய்வு கிடைத்துள்ளது. அன்றாட வாழ்வியல் பணிக்கு என்றும் இவருக்கு ஓய்வில்லை.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் காலை தரிசனத்துடன் தனது நாளைத் தொடங்குகிறார். பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குத் திரும்பி, திண்ணையில் அமர்ந்து உள்ளூர் வாசிகள் தன்னிடம் வந்து கேட்கும் உதவிகளை செய்து தருவதுடன், நண்பர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஸ்ரீரங்கம்வாசிகளின் சிநேகிதராக அறியப்படும் இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். நான்கு தலைமுறைளை கண்டவர். தனது மூத்த மகன் கே. ரங்கநாதன் குடும்பத்தினருடன் வடக்கு சித்திரை வீதியில் வசித்து வருகிறார்.
இதுகுறித்து கோதண்டராமன் கூறியதாவது:
""கடவுள் எனக்கு எல்லாவற்றையும் ஆசீர்வதித்திருக்கிறார். 2015-இல் எனது மனைவி கல்யாணி காலமானார். எல்லாம் கடவுளின் விருப்பம். மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் என 27 வாரிசுகள் உள்ளனர். என்னைப் பொருத்தமட்டில் அந்த 27 பேரும் 27 நட்சத்திரங்களைப் போன்றவர்கள்தான். எனக்கு இன்னும் என்ன வேண்டும்?. திருப்தியான வாழ்க்கை இருக்கிறது. நான் மக்களுக்கு உதவும் கருவியாக மட்டுமே இருந்தேன். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை.
"பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம் (புண்யம் ஸம்பாதிக்க வேண்டுமானால் பரோபகாரம் பண்ணு; பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு)' என்பதை கடைப்பிடித்தால் வாழ்வு வளமாகும். சுற்றமும் சிறக்கும் .
"ஏழைகளும், வறியவர்களும் படும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள். கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும்' என்ற மகாத்மா காந்தியின் கருத்தை அனைவரும் ஏற்று செயல்பட வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து கோதண்டராமனின் மூத்த மகனும், ஓய்வு பெற்ற வங்கி மேலாளருமான கே. ரங்கநாதன் கூறியதாவது:
தினமும் காலை 3.30 மணிக்கே எழுந்து பூஜைகளை முடித்துவிட்டு, வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து தமிழ், ஆங்கிலச் செய்தித் தாள்களை வாசிப்பார். அப்போது, அந்த வழியாக நடைபயிற்சிக்கு வரும் நபர்களை அழைத்து உள்ளூர் நடப்பு முதல் உலக நடப்புகள் வரை விவாதித்துவிடுவார்.
நண்பர்களுடன் அளவளாவுதலில் தனிப் பிரியம். ஒவ்வொரு நாளைய திட்டமிடுதலும், அதன்படி நடத்தலும் ராணுவக்கட்டுப்பாடு மிக்கவர். உணவு முறையிலும் நேரம் தவறாமை இன்றும் தொடர்கிறது. தனது காரியங்களை தானே செய்து கொள்கிறார். கைத்தடி உதவியுடன் அரங்கநாதரை தரிசிக்க தினமும் சுயமாக சென்று வந்தவருக்கு, கடந்த சில மாதங்களாக துணையின்றி செல்ல முடியவில்லை. எனவே, பக்தர்களுக்கு சிரமம் வேண்டாம் என கோயில் செல்வதை மட்டும் தவிர்த்துள்ளார். இதர அன்றாட பணிகளை அப்படியே தொடர்ந்து வருகிறார். லஞ்சம், ஊழலுக்கு எதிரானவர். தனி மனித வாழ்வுக்கும், பொது வாழ்வுக்கும் இலக்கணமாக விளங்கியிருப்பது எங்களது குடும்பத்துக்கு கிடைத்த பேறு'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...