முதல்வர்களின் வாழ்வில் ருசிகரம்..!
மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை மக்கள் இன்றளவும் நினைவுகூர்கின்றனர்.


மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை மக்கள் இன்றளவும் நினைவுகூர்கின்றனர். காரணம் அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்த அணுகுமுறைகள்தான். அவர்களை இன்றும் நினைவு கூர்வதற்கு உதாரணங்கள் ஏராளம்!
ஓட்டுநருக்கு அருகே கட்டில் போட சொன்ன காமராஜர்: ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் திருநெல்வேலிக்கு காரில் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக கார் பள்ளத்தில் இறங்கியதால், காமராஜருக்கும், ஓட்டுநர் நாயருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியே வந்தவர்கள் ஓடிவந்து, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தனது அறையில் ஓட்டுநருக்கும் கட்டில் போட சொன்னார் காமராஜர். ஓட்டுநருக்கு வேறொரு வசதியான அறையை தருவதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்லியும், காமராஜர் கேட்கவில்லை.
"எதற்காக ஓட்டுநருக்கும் அருகே கட்டில் போட சொல்கிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, காமராஜர் சொன்னார்:
""ஓட்டுநர் என் அருகில் இருந்தால் எனக்கு தரப்படும் அதே சிகிச்சை அவருக்கும் தரப்படுகிறதா? என்பதை நான் கவனிக்க முடியும். இல்லாவிட்டால் ஓட்டுநர்தானே என்று அலட்சியப்படுத்தி விடுவார்கள். இந்த விபத்துக்கு காரணம் அவருடைய அஜாக்கிரதை கிடையாது. எதிரே வந்தவருடைய வேகமும், கவனக்குறைவும்தான். அது தெரியாமல் தொண்டர்கள் ஓட்டுநரை
அடித்துவிட்டால் அதை தடுக்க வேண்டும் அல்லவா?'' என்றார் காமராஜர். வியந்த தொழிலதிபர்: காமராஜரைவிட அதிகம் படித்தவர் சி.சுப்பிரமணியன். காமராஜருக்கு மாற்றான முதல்வர் வேட்பாளராக சி.சுப்பிரமணியனை ஒருசாரார் கருதினர். ""உங்களால் எப்படி படிக்காத காமராஜர் அமைச்சரவையில் பணிபுரிய முடிந்தது. உங்களுடைய மனதில் சங்கடம் இருந்திருக்குமே?'' என்று சி.சுப்பிரமணியத்திடம் ஒரு தொழிலதிபர் கேட்டார். இதற்கு சி.சுப்பிரமணியன் கூறியது:
""ஒருமுறை முதல்வர் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். தன்னுடைய அழுத்தமான குரலில், " பரம்பிக்குளம் ஆழியாறு தண்ணி என்னாச்சுன்னேன்?'' என்று கேட்டார். "இருவரும் பேசுகிறோம்' என்றேன். "யாரு பேசுறா?' என்றார் காமராஜர்.
"இரு மாநில பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள்' என்றேன். "ஏன் நீங்கள் பேச மாட்டீர்களா?' என்று எதிர்வினா தொடுத்தார் அவர். "இப்போது அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது' என்று விவரத்தைச் சொன்னேன்.
"அதிகாரிகளுக்கு என்ன 58 வயது வரைக்கும் பேசிட்டே இருப்பாங்க? ரிட்டையர்டு ஆகும் வரை அரசு ஊதியம் அளிக்கும். நமக்கு ஆட்சி அஞ்சு வருஷம்தானே! அவர்களை நம்பிவிட்டா எப்படி முடியறது' என்று காமராஜர் அலுத்துக் கொண்டார்.
அடுத்த விநாடியே தனது உதவியாளரை அழைத்து எதிரில் இருந்த போனைக் காட்டி, கேரள முதல்வர் நம்பூதிரிபாட்டுக்கு போன் செய்ய சொன்னார். அவரிடம் காமராஜர், "நம்ம ரெண்டு பேரும் ஒன்றாக சிறையில் இருந்தவங்க! சுதந்திரம் கிடைச்சா நம்ம நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என பொதுமக்கள் மத்தியில் அன்று பேசினோம். இப்போ உங்க என்ஜினியருங்க தண்ணீர் தர மாட்டேங்கறான். நீங்க கம்யூனிஸ்ட். நான் காங்கிரஸ். வேற, வேற கட்சி. ஆனால் ரெண்டு பேரும் தேசப் பக்தி உள்ளவங்க! நீங்க தமிழ்நாட்டுக்கு தண்ணியைக் கொடுங்க. நான் அரிசி, மின்சாரம் கொடுக்கிறேன்!' என்று கூறினார்.
இந்தப் பேச்சுக்குப் பின்னர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனம் உடனே கையெழுத்தானது. இந்தப் பாசனத்தால் லட்சக்கணக்கணக்கான உயிர்கள், பயிர்கள் செழித்தன. இவர் கீழ் பணிபுரிவது பெருமையல்லவா? என்று கூறி முடித்தார் சி.சுப்பிரமணியன்.
காமராஜரின் தேசப் பக்தி, ஆற்றலைப் பார்த்து அந்தத் தொழிலதிபர் ஆச்சரியப்பட்டார்.
நெகிழ வைத்த அண்ணா:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் எனும் ஊரில் அண்ணாவின் படத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு அண்ணாவையும் வற்புறுத்தி அழைத்து வந்தனர். விழாவில் அண்ணாவின் மாண்புகளை என்.எஸ்.கிருஷ்ணன் குறிப்பிட்டுப் பேசினார்.
"தனக்கு வாழ்நாளில் இரு கடமைகள் இருந்தன. அதில் ஒன்றை இப்போது செய்துமுடித்துவிட்டேன். இன்னும் ஒரு கடமை காத்திருக்கிறது. அதை எப்போது செய்து முடிக்கும் தருணம் எப்போது வருமோ?' என்று கலைவாணர் ஏக்கத்தோடு விழாவில் தெரிவித்தார்.
விழா முடிந்தது, காரில் சேலத்துக்குத் திரும்பும்போது அண்ணாவிடம் ராஜாராம், " ஏதோ கடமை பாக்கி இருப்பதாக என்.எஸ்.கே. மனத்தாங்கலோடு குறிப்பிட்டாரே? அது என்ன?' என்று கேட்டார்.
"அது ஒன்றும் அவ்வளவு ஏக்கத்தோடு குறிப்பிட வேண்டியது அல்ல! கலைவாணர் படமாக்கிய நல்லதம்பிக்கு நான் வசனம் எழுதிக் கொடுத்ததற்காக எனக்கு தர வேண்டிய பணத்தை இன்னும் தராமல் இருக்கிறோமே? என்று மனம் குறைபட்டுக் கொள்கிறார். நான் அதைப் பற்றி நினைக்கவே இல்லை. நல்ல பல சீர்திருத்தக் கருத்துகளை திரைப்படத்தின் வாயிலாக, மக்கள் மத்தியில் பரப்ப அவர் வாய்ப்பு கொடுத்தாரே? என்று நான் மகிழ்ந்திருக்கிறேன்' என்று பெருந்தன்மையோடு அண்ணா குறிப்பிட்டார்.
இறுதி வரை கடைப்பிடித்த எம்ஜிஆர்: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தன்னுடைய பதினெட்டு வயது முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது முதல் திரைத்துறையில் நுழைய வாய்ப்பும் தேடினார். அப்போது திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் மன்னார்குடி நடராஜ பிள்ளை.
1938ஆம் ஆண்டில் "தட்சயக்ஞம்' எனும் திரைப்படத்தை நடராஜ பிள்ளை "தட்சன்' எனும் வேடத்தில் தானே நடித்து, தயாரித்தார். இந்தப் படத்தில் நடிக்க அவரிடம் வாய்ப்பு இருந்தால் தருமாறு எம்ஜிஆர் கேட்டார். அதில், பரமசிவன் வேடமும் எம்ஜிஆருக்கு கிடைத்தது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, மார்கழி மாத கடும் பனியில் கயிலாயக் காட்சி
படமாக்கப்பட்டது.
நடராஜ பிள்ளைக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்ததால் பனி ஏற்றுக் கொள்ளாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரைக் காண எம்ஜிஆர் சென்றார்.
நடராஜ பிள்ளையிடம் மருத்துவர்கள், "பிராந்தி சாப்பிட்டால் மூச்சுத்திணறல் குறையும்' எனக் கூறினர். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
நடராஜ பிள்ளையிடம் எம்ஜிஆர், "பிராந்தியை மருந்து என்று நினைத்து குடியுங்கள். அதை ஏன் மதுவாக நினைக்கிறீர்கள்?' என்றார். இதற்கு நடராஜ பிள்ளையோ, "நான் காந்திய வழியில் கதர்ச் சட்டை அணிபவன். அது மருந்தாக இருந்தாலும், மதுவை நான் அருந்த மாட்டேன்' என்றார்.
பின்னர் அவர் எம்ஜிஆரின் கையைப் பிடித்து, "நீயும் வாழ்நாளில் புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது. இது என் மீது ஆணை' என கேட்டுக் கொண்டார்.
அதுவே எம்ஜிஆருக்கு வேத வாக்காக மாறி, இறுதிவரை புகைக்கவோ, மது அருந்தவோ இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...