மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இட்லியும் இறைவழிபாடும்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா.

News image
Updated On :6 மே 2023, 6:30 pm

டி.வி. நரசிம்மன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா. ஜாதி, மத, வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் தர்காவுக்கு வந்து வழிபடுகின்றனர்.
தர்காவில் மெளலானா, மெளல்விகள், பக்தர்களுக்கு பாத்திஹா ஓதவும், புனித இடத்தில் கணப்பில் (நெருப்பு அடுப்பு) இட்டு மணம் பரப்பவும் சந்தனக் கட்டைகளை வழங்க தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவிட்டிருக்கிறது.
கணப்பில் சந்தனக்கட்டைகளைப் போட்டு தர்கா முழுவதும் மணம் வீச முதன்முதலாக 1919இல் நடைமுறைக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்தவர் தர்காவின் சூப்பிரின்டென்ட்டாக பணியாற்றிய நல்ல மாங்குடி (நன்னிலம்) சுந்தரம் ஐயர் என்பவர். இந்த எண்ணம் அவருக்கு உதித்ததற்கு ஒரு வரலாறு உண்டு.
இளம் வயதிலேயே நாகூர் தர்கா கண்காணிப்பாளராகப் பணியில் அமர்ந்தவர் சுந்தரம் ஐயர். அவருடைய மாமனார் வீடு தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாலியமங்கலம் கிராமமாகும்.
இவ்வூர் அருகில் வடவாறு (காவிரியின் கிளை நதி) ஓடுகிறது. முன்பு ஆற்றங்கரையில் அரசுக்குச் சொந்தமான தோப்புகளினூடே சந்தனக்கன்றுகளும் வளர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.
சாலியமங்கலம் வரும்போதெல்லாம் ஐயர் ஆற்றில் குளிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். அந்தச் சமயம் காற்றில் மிதந்து வரும் சந்தன வாசனையால் மெய் மறந்து இருப்பார். அதன் தாக்கத்தால் நெற்றியில் சந்தனம் தரித்துக் கொள்ள ஆரம்பித்த அவர், தான் பணியாற்றும் தர்காவிலும் சந்தன மணம் வீசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பி கணப்பில் சந்தனக் கட்டைகளைப் போட ,தர்காவுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்க ஏற்பாடு செய்தார்.
தன்னுடைய வீடு தேடி வரும் தர்கா டிரஸ்டிகளுக்கு (இஸ்லாமிய அன்பர்கள்) தன் வீட்டில் சாப்பாடு போட்டு உபசரிப்பார். இதற்கு அவரது துணைவியார் அருந்ததி அம்மையார் உறுதுணையாக இருந்தார்கள். கடைசி காலம் வரை, 'நாகூர்ஆண்டவரே!' என்று சொல்லி பிரார்த்துப் படுக்கையிலிருந்து எழும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
ஓய்வு பெற்றவுடன் சாலியமங்கலத்திலேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கிய அவர், அவ்வூரில் நடைபெறும் நரசிம்ம ஜெயந்தி உத்ஸவத்திலும், அதனையொட்டி நடைபெறும் பாகவத மேளா நாட்டிய நாள்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
இன்றும் நாடகங்கள் தொய்வின்றி 378 ஆண்டுகளாக நடைபெறுவதற்கு காரணமாகத் திகழ்ந்த இவ்வூர் முக்கியஸ்தர்களில்
இவரும் ஒருவர்.
உத்ஸத்துக்கு வரும்பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிகாலையில் ஸ்ரீநரசிம்ம அவதாரக் காட்சி முடிந்த பின் சூடான இட்லியும், காப்பியும் தனது இல்லத்தில் கிடைக்கும்படி வகை செய்து தொண்டாற்றி வந்தார்.
மிகுந்த நகைச்சுவையுடன் பேசும் வழக்கம் கொண்டிருந்த ஐயரின் இந்தக் கைங்கரியத்தைப் பாராட்டி நகைச்சுவையாகவே தஞ்சாவூர் பன்மொழிப் புலவர் பிரம்மஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் ஒரு சுலோகத்தை இயற்றி அர்ப்பணம் செய்துள்ளார்.
அது,
ம்ருதுதவளஸþகோஷ்ணா
ப்ராதர்இட்லிமனோக்நா
பரிமளக்ருதபக்வா:
உப்புமாசாருரம்யா !
சுரபிமதுரகாபி
மித்ரஸங்கேனபீத:
நரஹரிசரணாப்தே
பக்தியுப்தோபபூவ:!!
சுலோகத்தின்பொருள்: வெண்மையான மிருதுவாகவும், மிதமான சூட்டுடன் கூடியதுமான இட்லியும், மணம் மிக்க நெய்யில் தயாரிக்கப்பட்ட அரிசி உப்புமாவும், சுவைமிக்க சாரு என்ற சாம்பாரோடு கூடிய சிற்றுண்டியையும், பசுவின் பாலில் தயாரிக்கப்பட்ட மதுரமான காப்பியையும் விடியற்காலை நேரத்தில் தனது உறவினர்கள், நண்பர்களை அனைவருக்கும் எவனொருவன் வழங்குகிறானோ, அவன் ஸ்ரீலெக்ஷ்மி நரஸிம்மத்தின் அருளைப் பெற பக்தி நெறியைக் கடைப்பிடிக்க வேண்டுமோ? என்பதாக நகைச்சுவையுடன்அமைந்திருக்கிறது.
ஐயரின் இந்த உபசரிப்பு வைபவம் இன்றும் சாலியமங்கலத்தில் தொடர்கிறது.
'சுந்தரஅண்ணா' என்றுஅனைவராலும் பாசத்தோடு அழைக்கப்பட்டு வந்த அவர் திரைப்படஇயக்குநர் மறைந்த கே.பாலச்சந்தரின் சொந்த பெரியப்பா மகன்ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.