காவிய நாயகன் பாகவதர்

தமிழ்த் திரையுலகின் 'முதல் சூப்பர் ஸ்டார்' என்ற பெருமைக்குரிய ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் குறித்து 'காவிய நாயகன் பாகவதர்' எனும் ஆவணப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது.
காவிய நாயகன் பாகவதர்
Updated on
3 min read

தமிழ்த் திரையுலகின் 'முதல் சூப்பர் ஸ்டார்' என்ற பெருமைக்குரிய ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் குறித்து 'காவிய நாயகன் பாகவதர்' எனும் ஆவணப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை எடுத்திருப்பவர் ராதாகிருஷ்ணன் என்ற கார்முகிலோன். ஐம்பதுக்கும் அதிகமான கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் எழுதியவர். பாகவதர் குறித்து நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகேயுள்ள மங்கைநல்லூரில் பிறந்த இவரது தந்தை சுதந்திரப் போராட்டத் தியாகி. பாகவதரது வாழ்க்கையில் நடைபெற்ற சில சுவையான சம்பவங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் பாகவதராகத் தோன்றி, நடித்துள்ள கார்முகிலோனுடன் ஓர் சந்திப்பு:
பாகவதரைப் பற்றிய அதீதமான ஆர்வம் உங்களுக்கு எப்படி, ஏன் ஏற்பட்டது?
உன்னதமான மனிதர், கொடையுள்ளம் கொண்டவர், தமிழ்த் திரையுலகில் உச்சம் தொட்ட முதல் சூப்பர் ஸ்டார் என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்தான் தியாகராஜ பாகவதர். எங்கள் குடும்பத்தில் அனைவருமே பாகவதரின் பரம ரசிகர்கள். அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அதில், பாகவதர் பாடிய பாடல்களின் ரெக்கார்டுகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவரது கந்தர்வக் குரலில் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள். இவை அனைத்துக்கும் மேலாக, நான் தீவிர சிவ பக்தனாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் நான் சிறுவயதில் கேட்ட பாகவதரின் சிவபக்திப் பாடல்கள்தான்!
ஆனால் அவரைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள். பல அற்புதமான பாடல்களைப் பாடி, நடித்த மனிதநேயம் மிக்க மனிதரைப் பற்றி இளையதலைமுறையினருக்கு தெரியவில்லை. எனவே, பாகவதர் குறித்த உண்மைகளை உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்துவதை எனது கடமையாகக் கருதினேன். அதன் பலன்தான் நான் எழுதிய 'ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்' என்ற நூல். அடுத்த கட்டமாக இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறேன்.


அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டிய அனுபவம் எப்படி இருந்தது?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தாளர் விந்தன் எழுதிய 'பாகவதர் கதை' தொடங்கி 23 நூல்களைச் சேகரித்துப் படித்தேன். பாகவதரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினேன். பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். திருச்சியில் பாகவதர் வசித்த வீட்டையும், அவரது கல்லறையையும் சென்று பார்த்தேன். அவர் மீதான வழக்கு பற்றிய முழுமையான தகவல்களையும் திரட்டினேன்.
பாகவதர் குறித்த அபூர்வமான நூல்கள் சிலரிடம் இருப்பதை அறிந்து அவர்களை அணுகினேன். ஒரே ஒரு பிரதி மட்டுமே வைத்திருந்த அவர்கள், அதை என்னிடம் கொடுக்கத் தயாராக இல்லை.
எனது ஒரிஜினல் ஆதார் அட்டையை அவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்த பிரதியினைப் பெற்று பிரதி எடுத்துகொண்டு, திருப்பிக் கொடுத்துவிட்டு, ஆதார் அட்டையைத் திரும்பப் பெற்றேன்.
சுமார் ஆறுமாத காலம் சரியான தகவல்களை முழுமையாக சேகரிப்பதற்காக செலவிட்டேன். எனது கடுமையான உழைப்பு, பணமும் காலநேரமும் செலவிட்டதன் பயனாக உருவாகிய நூலும், ஆவணப்படமும் ஆத்ம திருப்தியை அளித்தன.
இந்த முயற்சிகளுக்கு 'மின்னல் கலைக்கூடம்' வசீகரன் அளித்த ஆதரவும், ஒத்துழைப்பும் மறக்க முடியாது.
பாகவதரது தனிச்சிறப்பு என்ன?
தனது இசை அரங்கேற்ற நிகழ்ச்சியன்றே 'பாகவதர்' என்ற பட்டம் பெற்ற ஒரே மனிதர் தியாகராஜ பாகவதர்தான். கச்சேரி, நாடகம், திரையுலகம் என்று மூன்றிலும் முத்திரை பதித்தவர். முதல் படமான பவளக்கொடியில் (1934) இடம்பெற்ற ஐம்பதுக்கும் அதிகமான பாடல்களில் பெரும்பாலானவற்றைப் பாடியது பாகவதர்தான்.
பெரிய அளவில் வெற்றி பெற்ற 'நவீன சாரங்கதாரா' படத்தில் இடம்பெற்ற 'சிவபெருமான் கிருபை' என்ற பாடலை தான் நடிக்கும் நாடகங்களிலும் பாகவதர் பாடுவார்.
'திருநீலகண்டர்' படப் பாடல்கள் பெரிய வெற்றி பெற்று, சிறந்த படத்துக்கான விருதையும், பாகவதருக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுத் தந்தது. அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ், என அடுத்தடுத்து வெற்றி மேல் வெற்றிதான்! 'ஹரிதாஸ்' படத்தின் மூன்று தீபாவளி கண்ட சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.

புகழின் உச்சிக்குச் சென்ற பாகவதருக்கு இறங்குமுகம் ஏற்பட்டது எப்படி?
'ஹரிதாஸ்' பட வெற்றிக்குப் பின்னர் பத்து தயாரிப்பாளர்கள் பாகவதரைத் தங்கள் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், பாகவதர் சிக்க வைக்கப்பட்டார். பாகவதருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. 'நிரபராதியான தான் நிச்சயம் விடுதலை செய்யப்படுவோம்' என நம்பிய பாகவதரோ தீர்ப்பால் நிலை குலைந்து போனார். பாகவதர் சிறைக்குச் செல்ல, லண்டன் பிரிவியூ கவுன்சிலில் மேல் முறையீடு நடைபெற்றது. வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி தீர்ப்பு வந்தது. வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, பாகவதர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, விடுதலை ஆனார்.
அதன்பிறகு, பாகவதர் 'ராஜமுக்தி' என்று சொந்தப்படம் எடுத்தார். படப்பிடிப்புக் குழுவினரோடு, பூணேவுக்குச் சென்று அங்கே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்துத் தங்கி, படப்பிடிப்பைத் துவக்கினார். சில நாள்களிலேயே மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட, அதனால் ஏற்பட்ட சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாக சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நின்று, செலவு அதிகரித்தது.
பாகவதருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஒருவழியாக 1948 அக்டோபரில் படம் ரிலீசானபோது, படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்கு, பாகவதரின் குரலில் வசீகரமில்லை, படம் ரொம்ப நீளம், ஹாஸ்யம் இல்லை என ஏதேதோ காரணங்கள் சொன்னார்கள். சினிமாவை விட்டு ஒதுங்கி நாடகம், கச்சேரி என்று இருந்த பாகவதர் நடித்து 1952-இல் அமரகவி, சியாமளா என்ற இரண்டு படங்கள் வெளியாகி, தோல்வி கண்டன.
ஆவணப் பட அனுபவம் எப்படி இருந்தது?
வாசிப்புப் பழக்கம் முறைந்துவரும் இந்தக் காலத்தில் பாகவதர் வரலாற்றை ஒரு நூலாகவே எழுதி இருக்கிறேன். வருங்கால தலைமுறைக்கு பாகவதரைக் கொண்டு செல்ல வேண்டுமானால், அவரது வாழ்க்கையை ஆவணப் படமாக்கி, யூடியூப் மூலமாகவே வெளியீடு செய்ய முடியும் என நினைத்தேன்.
பின்னணிக் குரலில் அவரது வாழ்க்கையைச் சொன்னாலும், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த 12 சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து, தகுதியான கலைஞர்களைக் கொண்டு நடிக்கச் செய்து காட்சிப்படுத்தி இருக்கிறேன். பாகவதராக நானே நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு, நெகிழ்ந்து பாராட்டினார் பாகவதரின் மகளான சுசீலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com