கடலில் சாகசம்..

அப்பா-மகள் ஜோடி கடல் மீட்புச் சாகசம்
கடலில் சாகசம்..
Picasa
Published on
Updated on
2 min read

'கடல்' என்றால் அரவிந்த் தருண்ஸ்ரீக்கும், அவருடைய மகள் தாரகை ஆராதனாவுக்கும் கொண்டாட்டம்தான். சாகசங்களை நிகழ்த்தி அசத்தும் இருவரும் 'கடலை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு நீந்தல் சாதனையை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நிகழ்த்த உள்ளனர்.

இதுகுறித்து அரவிந்த் தருண்ஸ்ரீயிடம் பேசியபோது:

'நாற்பது வயதாகும் எனது இயற்பெயர் அரவிந்த். திருமணமானதும் நான் என் மனைவி தருண்ஸ்ரீயின் பெயரைச் சேர்த்துகொண்டேன். எங்களுக்கு ஒரே மகள் தாரகை ஆராதனா.

கடலில் மூழ்கி பாறைகள், செடிகள், மீன்கள், முதுகெலும்பில்லா ஜீவிகளைப் பார்க்க உதவும் ஸ்கூபா டைவிங்கில் முறையான பயிற்சி அனுபவத்தைப் பெற்று, புதுச்சேரியிலும் சென்னை நீலாங்கரையிலும் பயிற்சி நிலையங்களை நடத்தி வருகிறேன். கடல் காவல், சுங்கத் துறை, தீயணைப்புப் படையினருக்கு ஸ்கூபா டைவிங்கில் பயிற்சியை அளித்து வருகிறேன்.

புயல் அல்லது காற்று அதிகமாக வீசும் நாள்களில் ஸ்கூபா டைவிங் செய்ய முடியாது. இந்தப் பயிற்சி பெறுவோருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும்.

Picasa

ஸ்கூபா டைவிங் பயிற்சி உடைகள் விலை கூடியவை. பலவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்கூபா டைவிங்கில் பயிற்சியை தந்து வருகிறேன். தரையில் செய்ய முடியாத பல பயிற்சிகளை அவர்கள்

தண்ணீருக்குள் செய்யலாம். அவர்களால் தங்கள் உடலைத் தூக்க தண்ணீருக்குள் சிறு முயற்சி செய்தால் போதும். மாற்றுத் திறனாளிகளிடம் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கிறேன்.

கடலுக்குள் சைக்கிள் ஓட்டுதல், சதுரங்கம் ஆடுதல், உடற்பயிற்சி செய்தல், அங்கே இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து வெளியே கொண்டு வருதல் போன்றவற்றை ஸ்கூபா டைவிங் பயிற்சியைத் தாண்டி செய்து வருகிறேன். ஆக்சிஜன் உதவி இல்லாமல் கடலுக்குள் மூச்சுப் பிடித்துகொண்டு நான்கரை நிமிடங்கள் வரை என்னால் இருக்க முடியும். கடலுக்குள் திருமணம் நடக்க தேவையான பாதுகாப்புகளையும் செய்து கொடுத்துள்ளேன்.

சந்திராயன் முயற்சியில் 'விக்ரம்' வாகனம் நிலவில் பத்திரமாக இறங்கிய வெற்றியைக் கொண்டாடும் விதமாக, 'விக்ரம்' போலவே வடிவமைத்து சுமார் நாற்பது அடி ஆழத்தில் கடலில் அடியில் வைத்து கொண்டாடி மீண்டும் தரைக்குக் கொண்டுவந்தோம்.

'விஸ்வரூபம்', 'தெறி' உள்ளிட்ட ஆறு திரைப்படங்களுக்காகக் கடலுக்குள் நிகழும் காட்சிகளைப் படம்பிடித்துக் கொடுத்துள்ளேன். மேலும், இரு திரைப்படங்கள் வெளிவர உள்ளன.

ஒன்பது வயதாகும் எனது மகள் தாரகை ஆராதனா, நான்காம் வகுப்பு படிக்கிறார். பிறந்த மூன்றாம் நாளிலேயே தண்ணீர்த் தொட்டியில் வைத்து தண்ணீருடன் இணக்கம் ஆகப் பழக்கினோம். இரண்டரை வயதில் நீச்சல் கற்றுக் கொடுத்தேன். ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்று, இப்போது கடலில் மீனாக மாறிவிட்டாள். என்னுடன் கடலுக்குள் சாகச நிகழ்வுகளில் பங்கேற்கிறாள்.

கடலில் வாழும் பலவகை உயிரினங்களுக்காகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் போராளியாக தாரகை ஆராதனா மாறியிருக்கிறார். தனியாக கடலியிருந்து இதுவரை 1,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே கொண்டு வந்திருக்கிறார். இந்த முயற்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்' என்றார் அரவிந்த் தருண்ஸ்ரீ.

'கடலைக் காப்பாற்றுங்கள்' என்ற விழிப்புணர்வுக்காக, சென்னை கோவளம் முதல் நீலாங்கரை வரை 19 கி.மீ. தூரத்தை 6 மணி 14 நிமிடத்தில் நீந்திப் பயணித்துள்ளார். 2024-இல் சென்னை நீலாங்கரை முதல் மெரீனா வரை 21 கி.மீ தூரத்தை 5 மணி நேரம் 25 நிமிடத்தில் நீந்தியுள்ளார். இதற்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். கராத்தே பயிற்சியில் மஞ்சள் பெல்ட் வாங்கி இருக்கிறார்' என்றார் அரவிந்த் தருண்ஸ்ரீ.

தொடர்ந்து, தாரகை ஆராதனாவிடம் பேசியபோது:

'ராமேசுவரம் கடலில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது, 'கடல் கன்னி' என்று சொல்லப்படும் 'கடல்பசு' மீன் பிடிக்கும் வலையில் சிக்கி இறந்து போயிருந்தது. கடல்பசு இனம் சீக்கிரம் அழிந்து வருண் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல கடலில் வாழும் பலவகை உயிரினங்களும் வலையில் சிக்கியும் இறக்கின்றன. நான் பெரியவள் ஆனதும் தொழில் முறை ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக ஆகணும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com