'பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்து, சிரத்தையுடன் பயின்றாலே போதும். உடலும், மனமும், தமிழர்களின் பெருமையும் செம்மைப்படும்'' என்கிறார் மல்லர் கம்பம் கலையை மீட்டெடுக்கப் பெருமுயற்சி மேற்கொண்டுவரும் இரண்டாமாண்டு சட்டக் கல்லூரி மாணவி சிவசக்தி.
விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:
'பழந்தமிழர்கள் வீரம், ஞானம், உடல் வலிமை, போர்தீரங்களில் சிறந்து விளங்கியதோடு, நீண்ட ஆயுள்கொண்டவர்களாகவும் விளங்கினர். ஆனால் இன்றைய நவீன வாழ்க்கையில் ஆயுள் காலம் கணிசமாகக் குறைந்துள்ளதற்கு உடல் உழைப்பின்மைதான் காரணம்.
பாரம்பரியக் கலைகளில் வெகுவாக அறியப்படாததும் மிகவும் சுவாரசியமிக்க கலை என்றால் அது 'மல்லர் கம்பம்'. தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டாலும் தற்போது வடமாநிலங்களில் 'மால்கம்' என்ற பெயரில் பிரபலமாக உள்ளது.
மல்லன் என்றால் 'வீரன்'. உடலை வில் போன்று வளைத்து சாகசம் செய்யும் வீரமும் தைரியமும் நிறைந்த அற்புதமான கலைதான் மல்லர் கம்பம். இதன் நிலை மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம் என மூன்று வகைகள் உள்ளன. தமிழகத்தில் தற்போது இக்கலை குறைவாகவே பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் மல்லர் கம்பம் பயில்வதால் உடலும், மனமும் ஒருநிலைப்படுவதோடு அவர்களின் உடல் உறுதிப்படவும் இது உதவுகிறது. சுவாசக் கோளாறுகளையும் குணமாக்குகிறது. இக்கலையின் மீது இளைஞர்கள் நாட்டம் செலுத்தினால் உடல் உறுதிப்படுவதோடு பாரம்பரியக் கலையும் பாதுகாக்கப்படும்.
உடற்பயிற்சி மையங்களை ஒப்பிடுகையில் இக்கலையைக் கற்றுக்கொள்ள ஆகும் செலவு மிகவும் குறைவு. பெண்கள் இக்கலையைப் பயில்வதால் அவர்களின் உடல் வலுவுக்கும், கர்ப்பக் காலத்திலும் பெரிதும் உதவியாக இருக்கும். எனக்கு முதன்முதலில் பரதநாட்டியம், மேற்கத்திய நடனக் கலையின் மீதே நாட்டம் இருந்தது. பின்னர், எனது 12-ஆவது வயது முதல் மல்லர் கம்பம் மீது ஆர்வம் ஏற்பட்டு, எட்டு ஆண்டுகளாகப் பயிற்சி செய்து வருகிறேன்.
விழுப்புரத்தில் மல்லர் கம்பம் அகாதெமி நடத்திவரும் செல்வமொழியனின் நேர்த்தியான பயிற்சியால் தேசிய அளவில் பல பதக்கங்களை என்னால் வெல்ல முடிந்தது. தமிழ்நாடு அரசும் என்னைப் பாராட்டி 'கலை இளமணி' விருது வழங்கியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட காயத்தால் என்னால் பல போட்டிகளில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டபோது, பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமாகி போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளேன். விரைவில் மீண்டும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு தேசிய அளவில் தங்கப்பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பேன்.
எனது பயிற்சியாளர்கள் செல்வமொழியன், கபிலன், எனது அண்ணன் பிரவீன்குமார் ஆகியோரின் உதவியுடன் 'சிவசக்தி மல்லர் கம்பம்' பயிற்சி மையத்தை தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பயிற்சியை அளித்து வருகிறேன். நான் பயின்ற சிந்தாமணி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில்மல்லர் கம்பம் தவிர்த்து யோகா, ஜிம்னாஸ்டிக், சிலம்பம் போன்ற கலைகளையும் பயிற்றுவிக்கிறேன்.
முதலில் 250 மாணவர்கள் பயிற்சிபெற ஆரம்பித்தனர். தற்போது 80 மாணவர்கள் தொடர் பயிற்சியில் உள்ளனர். தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை பயிற்சி நடைபெறும். அவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே பயிற்சிக்கான தொகையாகப் பெறுகிறோம். பின்னர் எத்தனை மாதங்கள் பயிற்சி எடுத்தாலும் அதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை.
எங்களிடம் பயின்று வரும் மாணவர்கள் பூமிகா, மதிவதனி கேலோ, முத்தரசி, பிரனீத் குமார், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் தேசிய, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் பதக்கங்கள் வெல்வதைப் பார்த்து, பலரும் பயிற்சி பெற முன்வருகின்றனர்.
கேலோ இந்தியா போட்டியின்போது, விளையாட்டு- இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் எங்களது தேவைகள் குறித்துப் பேசியபோது, உதவுவதாகக் கூறினார்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இக்கலையை கற்றுகொடுக்க தமிழ்நாடு அரசு ஊக்கமளிக்க வேண்டும். நமது அடையாளத்தை எப்பாடுபட்டேனும் அவற்றைக் காக்க அனைவரும் முன்வர வேண்டும்'' என்றார்.
- ம.பெரியமருது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.