நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை..!

நாடக ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், வசனகர்த்தா... என பன்முகத் தன்மை கொண்டவர் கிரேஸி மோகன்.
கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்
Updated on
3 min read

நாடக ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், வசனகர்த்தா... என பன்முகத் தன்மை கொண்டவர் கிரேஸி மோகன். 1979-இல் கிரேஸி மோகனும், அவரது நண்பர்களும் இணைந்து தொடங்கிய 'கிரேஸி கிரியேஷன்ஸ்' எனும் நாடகக் குழுவினர் 'முழுக்க, முழுக்க நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை' என்ற லட்சியத்துடன் எழுதப்பட்ட 'அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்' எனத் தொடங்கி 'சாக்லேட் கிருஷ்ணா' வரை 18 நாடகங்களையும் உலகம் முழுவதும் 6500 முறை மேடைகளை ஏறி சாதனை புரிந்துள்ளனர்.

இந்த ஆண்டு டிசம்பர் சீசனில் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவின் மிகச் சிறந்த ஆறு நாடகங்கள் 'மார்கழி காமெடி கலாட்டா' என்ற பெயரில் நடக்கவுள்ளன.

இதுகுறித்து நாடகங்களின் கதாநாயகனும், கிரேஸி மோகனின் சகோதருமான மாது பாலாஜியிடம் பேசியபோது:

'சென்னை மந்தைவெளி சொக்கலிங்கம் தெருவில் வசித்த பன்னிரெண்டு இளைஞர்கள் பரம கிரிக்கெட் விசிறிகள். அவர்கள் உருவாக்கியதுதான் 'கிரேஸி கிரியேஷன்ஸ்'.

கிரேஸி மோகன் ஆரம்பத்தில் எஸ்.வி.சேகருக்கு 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்', 'டெனன்ட் கமாண்ட்மென்ட்ஸ்', 'ஒன் மோர் எக்சார்சிஸ்ட்', காத்தாடி ராமமூர்த்திக்கு 'ஹனி மூன் கப்புள்', 'பதி பத்னி - அவுர் மா' ஆகிய நாடகங்களை எழுதி கொடுத்தார். அவை மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

அந்த நேரத்தில் எஸ்.வி.சேகருக்கும், கிரேஸி மோகனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிய முடிவெடுத்தார்கள். அந்தச் சமயத்தில் முதலில் சொன்ன நண்பர்களுடன் திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அங்கே பேசிக் கொண்டிருந்தபோதுதான், 'நாடகக் குழு துவக்கினால் என்ன?' என்ற எண்ணம் தோன்றியது.

விவேகானந்தா கல்லூரியில் நான் படித்தபோது, கிரேஸி மோகன் நாடகம் எழுதிக் கொடுத்து, போட்டிக்காக நான் கதாநாயகனாக நடித்த அனுபவம் உண்டு.

'மோகன் நாடகம் எழுதிக் கொடுப்பதில், எனக்கு பிரதான ரோல். நண்பர்கள் நடிப்பது' என்று தீர்மானித்தோம். உடனே, 'கிரேஸி கிரியேஷன்ஸ்' வழங்கும் கிரேஸி மோகனின் 'அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்' எனும் நகைச்சுவை நாடகம் என்று ஒரு விளம்பரம் கொடுத்தோம். அப்போது, ஆர்.எஸ். மனோகர், ஒய்.ஜி.பி., சோ, காத்தாடி ராமமூர்த்தி, டி.எஸ்.சேஷாத்ரி, விசு, மெளலி என்று பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் நாடகக் குழுக்களை நடத்தினர்.

சிலர், 'பாலாஜி குழந்தைடா! இப்பதான் காலேஜ் முடிச்சிருக்கான். அவனை ஹீரோவா போட்டு டிராமா போடறது வீண் வேலை. ரிஸ்க் எடுக்காதே!' என்று மோகனை எச்சரித்தனர். ஆனால், மோகன் பயப்படவில்லை.

1979 ஆகஸ்ட் மாதத்தில், முதல் நாடகமாக 'அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்' அரங்கேறியது. எங்கள் கிரிக்கெட் நண்பர்கள் அப்பா ரமேஷ், சுப்பு, வாசு, காந்தன், (கவிதாலயா) கிருஷ்ணன், சுந்தரராஜன், சத்யமூர்த்தி போன்றவர்களோடு வெளியிலிருந்து சிலர் சேர்ந்துகொள்ள நாடகம் அரங்கேறியது. அரங்கேற்றத்தன்று தமிழ் நாடக உலகத்தின் அத்தனை முக்கியஸ்தர்களும் வந்திருந்தார்கள்.

என்னுடைய கல்லூரி நாடகப் போட்டிகளுக்காக, மோகன் எழுதிய நாடகங்களைத் தொகுத்து, இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதின ஸ்கிரிப்ட் அது. சீனுக்கு சீன் அப்படி ஒரு கைத்தட்டல். நாடகம் முடிந்ததும் கோமல் சுவாமிநாதன் மேடைக்கு வந்து கிரேஸி மோகனை வாழ்த்தி, 'இன்றைக்கு பாலாஜி மேடையில் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கி இருக்கிறான். சீக்கிரமே ரொம்பப் பிரபலமாகிவிடுவான்' என்று சொன்னார்.

இரண்டாவது நாடகமான 'கிரேஸி கிஷ்கிந்தா' நூறு தடவைகளுக்கு மேல் மேடை கண்டது. அடுத்து மேடை ஏற்றிய 'மேரேஜ் மேட் இன் சலூன்' சூப்பர் ஹிட். அந்த நாடகம் டைரக்டர் கே.பாலசந்தருக்கு மிகவும் பிடித்துப் போய்விட, அதை 'பொய்க்கால் குதிரை' என்ற பெயரில் படமாக எடுத்தார்.

பெயர் சென்டிமென்ட்:

எங்களுடைய எல்லா நாடகங்களிலும் ஹீரோவின் பெயர் மாது, அவனுடைய நண்பன் பெயர் சீனு. இரண்டு பெண் கதாபாத்திரங்களின் பெயர்கள் மைதிலி, ஜானகி.

'எல்லா நாடகங்களிலும் இப்படி ஒரே பெயர்களை வைக்கிறீர்களே? போரடிக்காதா?' என்று கூட சிலர் கேட்டதுண்டு. 'நாடகத்தை ரசிக்கிறவர்களுக்கு பேர் போரடிக்குமா என்ன? அந்தப் பெயர்கள்தான் எங்களுடைய பிராண்ட் வேல்யூ!' என்பார் மோகன்.

அனைவரையும் கவரும் விதமாக, கிரேஸி மோகன் எழுதிய நாடகம்தான் 'சாக்லேட் கிருஷ்ணா'. மேலோகத்தில் இருந்து கடவுள் பூமிக்கு வந்து மனிதனோடு பேசுவதும், உலக நடப்புகளைக் கவனிப்பதும் சினிமாவிலும், நாடகத்திலும் சோ உள்ளிட்ட பலரும் ஏற்கெனவே செய்த ஒன்றுதான். ஆனாலும், கிரேஸியின் சாக்லேட் கிருஷ்ணாவுக்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழ வைக்கிறது. 2024 வரை அந்த நாடகத்தை மட்டும் 1,150 தடவை நடத்தி இருக்கிறோம்.

நகைச்சுவை நாடகங்களே ஏன்?

'காமெடி நாடகங்களையே போடுகிறீர்களே? மாறுதலுக்கு ஒரு சீரியஸ் நாடகம் போடக் கூடாதா?' என்று கிரேஸி மோகனிடம் பலர் கேட்பதுண்டு. அவர்களுக்கு கிரேஸி மோகன், 'கிட்னி சர்ஜனிடம் ஏன் டாக்டர் எப்பவும் கிட்னி சர்ஜரியே பண்ணிக்கிட்டு இருக்கீங்களே? போரடிக்கலையா? மாறுதலுக்கு ஒரு ஹார்ட் சர்ஜரி பண்ணக் கூடாதான்னு? கேட்பதில்லையே! மேடையில் பலரும் பல விதமான நாடகங்கள் போடுகிறார்கள். எங்களது பாணி நகைச்சுவை' என்பதுதான் கிரேஸியின் பதில்.

'உங்கள் நாடகங்கள் வெறும் துணுக்குத் தோரணங்கள்' என்று விமர்சிப்போருக்கு கிரேஸி தரும் விளக்கம் இது.

வெறும் நகைச்சுவைகளை அடுக்கி வைத்து, துணுக்குத் தோரணமாக நாடகம் போட்டால் எடுபடாது. இத்தனை வருடம் தாக்குப் பிடிக்கவும் முடியாது. நாங்கள் மாமியார்-மருமகள் மோதல், சந்தேகப் பிராணி கணவன், காதல் கல்யாணம் என்று சகஜமான குடும்பப் பிரச்னைகளை ஒரு தளமாக வைத்துக் கொண்டு காமெடியான வசனங்கள், காட்சிகளோடு நாடகம் போடுகிறோம். மக்கள் திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கின்றனர்.

'உங்கள் குழுவில் எல்லா நண்பர்களுக்கும் ரொம்பவும் வயசாகிவிட்டது. நீங்கள், தலைமுறை கடந்து ரசிகர்களைச் சென்றடைய வேண்டுமானால், நாலைந்து இளைஞர்களை உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று நடிகர் கமல் ஆலோசனை கூறினார். அதன்படி நாங்கள் ஆர்வமுள்ள இளையவர்களைத் தேர்ந்தெடுத்து, நடிப்புப் பயிற்சி கொடுத்து, ஒத்திகை பார்த்து எங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்' என்றார் மாது பாலாஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com