மாடியில் மனநிம்மதி தோட்டம்

மாடியில் மனநிம்மதி தோட்டம்

காஞ்சிபுரம் தேசிபாளையத்தில் வசிக்கும் கவிதா காமராஜ்,  தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியை அழகான தோட்டமாகவே மாற்றி இருக்கிறார்.
Published on


காஞ்சிபுரம் தேசிபாளையத்தில் வசிக்கும் கவிதா காமராஜ், தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியை அழகான தோட்டமாகவே மாற்றி இருக்கிறார்.


தேடினாலும் கிடைக்காத மூலிகைச் செடிகள், கமகமக்கும் வாசனைச் செடிகள், காய்கறிகள், பழங்கள், பூ வகைகள்.. என மொட்டை மாடியை அவருக்கு மன நிம்மதியை தரக் கூடிய தோட்டமாகவே மாற்றி இருக்கிறார். இவை இயற்கை விவசாயத்தின் மூலமாகச் செய்யப்பட்டு வருவதும் சிறப்பு.

"கார்டன் கவிதா' என்ற செல்லப் பெயருடன் வலம் வரும் அவரிடம் பேசியபோது:

உங்களது மாடித்தோட்டத்தில் உள்ளவை பற்றி..?

சிறுகுறிஞ்சான், துளசி, சோற்றுக் கற்றாழை, மருதாணி, கருவேப்பிலை, ரணகல்லி, லெமன்கிராஸ், பெருமருந்துக்கொடி, டிஞ்சர் பிளாண்ட்,இன்சுலின் பிளாண்ட் இப்படியாக பத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறேன். கத்தரிக்காய், முள்ளங்கி, அவரைக்காய், முட்டைக்கோஸ், சுண்டக்காய், தக்காளியில் இரு வகைகளும், மிளகாயில் சில வகைகளும் உள்ளன.

இதுதவிர வெள்ளை மிளகாய், நாட்டு மிளகாய்ச் செடிகளும்,தக்காளியில் செரி டொமட்டோ,பாப் டொமட்டா ஆகியனவும் வளர்த்து வருகிறேன்.

ரோஜாவில் ஏழு வகைகளும், கனகாம்பரத்தில் நாட்டு வகை, படவேட்டுக் கனகாம்பரம் என இரு வகைகளும், சிகப்பு, வெள்ளை, ரோஸ், அடுக்கு என ரோஸில் 4 வகைகளும் வளர்த்து வருகிறேன். செம்பருத்திப்பூ, சாமந்திப்பூக்களில் இரு வகை, ,அடுக்கு சங்குப்பூவில் மூன்று வகை, மல்லிகைப்பூவில் நான்கு வகைகள் உள்ளன.

இவை தவிர காஸ்மோஸ், பால்சம் ஆகியவற்றில் இரண்டிரண்டு வகைச் செடிகளும் இருக்கின்றன.

தினசரி சரியாக மாலை 5 மணிக்கு மட்டுமே பூக்கும் அஞ்சு மணிப் பூ உள்ளது. இதில், 4 வண்ணங்களில் பூ பூக்கும் செடிகள் உள்ளன. மழை பெய்யும்போது மட்டுமே பூக்கும் ரெயின் லில்லிப்பூவில் வெள்ளை, பிங்க் நிறத்தில் பூக்கும் வகையில் இரு செடிகளை வளர்த்து வருகிறேன்.

கொய்யாப்பழத்தில் ஸ்டிராபெரி, லாவண்டர், எலுமிச்சம் பழத்தில் விதை உள்ளது, விதை இல்லாதது, மாதுளம்பழம், அத்திப்பழங்கள் உள்ளன. கீரை வகைகளில் நாட்டுப்புதினா, வல்லாரை, பொன்னாங்கன்னி, வெள்ளை, மஞ்சள் கரிசலாங்கன்னி, பிரண்டை ஆகியனவும் உள்ளன. வாசனைச் செடிகளைப் பொருத்தவரை மரிக்கொழுந்து, மல்லிகை, மாசிப்பச்சை, கதிர்ப்பச்சை, ரோஸ்மேரி, ரம்பை பிளாண்ட் எனப்படும் கமகமக்கும் வாசனை தரும் பிரியாணி இலை ஆகியன உள்ளன. இந்த வாசனைச் செடிகளால் மாடியை விட்டு கீழே இறங்க மனசே வராது. அழகுச் செடிகளில் மணி பிளாண்ட்,பட்டுரோஸ் ஆகியனவும் இருக்கின்றன.

இதற்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

செடிகளைப் புதிதாக வாங்கும்போது மட்டும்தான் செலவாகும். மற்றபடி ஒரு மாதத்துக்கு ரூ.500 மட்டுமே செலவாகும். மானியத்தில் மணல் நிரப்பத் தேவையான கிரீன் பேக்குகள் ஆகியனவற்றை செடிகளை வளர்க்கப் பயன்படுத்துகிறேன்.

கொசுக்கள் வராமல் இருப்பதற்கென்றே அவற்றை சாப்பிடும் அல்லி மீன்களையும் ஒரு தொட்டியில் வளர்த்து வருகிறேன்.வேப்ப எண்ணெய் தெளிப்பதாலும் கொசுக்கள் வராது.

செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

எனது பெற்றோர் செடிகளை வளர்த்து பராமரித்து வந்தனர். சிறுவயதிலிருந்தே அவற்றைப் பார்த்து வளர்ந்த எனக்கும் செடிகளின் மீது தீராத பற்று ஏற்பட்டது. பிறந்த வீட்டில்தான் செடிகளை வளர்த்தார்கள் என்றால், புகுந்த வீட்டிலும் செடிகளை அதிகமாக வளர்த்து வந்தனர். இதுவே நான் செடிகளை வளர்க்க காரணமாகி விட்டது.

உங்கள் விருப்பம் என்ன?

தயவு செய்து மொட்டை மாடியை துணிகளை காயப் போட மட்டும் பயன்படுத்தாதீர்கள்.

குறைந்த முதலீட்டில் இயற்கையாக விளைந்த காய்கறிகளையும், பழங்களையும் பயிரிட்டு அழகு பாருங்கள். நோயில்லாமலும் வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com