​வி‌ல்​லிசை நாயகி

வில்லிசை மீண்டும் உயிர்ப்பும்: மாதவி என்ற இளம்பெண்ணின் கதை
தமிழர்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கெல்லாம் வில்லுப்பாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். தனியாகப் பயிற்சி வகுப்பு தொடங்கும் திட்டம் உள்ளது.
தமிழர்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கெல்லாம் வில்லுப்பாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். தனியாகப் பயிற்சி வகுப்பு தொடங்கும் திட்டம் உள்ளது.
Published on
Updated on
3 min read

கிராமியக் கலைகளில் ஒன்றாக அறியப்படும் வில்லுப்பாட்டு கோயில் திருவிழாக்களில் இன்றும் பாடப்படுகிறது. காலமாற்றத்துக்கு ஏற்றவாறு மக்களின் ரசனைகளும் மாறியதால், அழிவின் விளிம்பிலிருந்த இந்தக் கலை தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலங்குளம் அருகேயுள்ள அச்சங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் மாதவி, தற்போது வில்லிசையில் மிகவும் பிரபலமாகிவருகிறார்.

அவருடன் ஓர் சந்திப்பு:

உங்களைப் பற்றி..

அச்சங்குன்றம் கிராமம்தான் எனது சொந்த ஊர். என்னுடைய தந்தை மாரிச்செல்வம் கட்டடத் தொழிலாளி. எனது அம்மா மாலதி பீடி சுற்றும் தொழிலாளி.

ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ளூரிலும், ஆறு முதல் 8-ஆம் வகுப்பு வரை பரங்குன்றாபுரத்திலும், 9-ஆம் வகுப்பு சுரண்டை பள்ளியிலும் படித்தேன். தொடர்ந்து தனித்தேர்வராய் பிளஸ் 2 பயின்று வருகிறேன். எனது இரண்டு சகோதரிகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. எனது தம்பி மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

வில்லிசை குறித்து...

வில்லிசை என்பது தென் தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் கலைகளில் தனிச் சிறப்புடன் திகழும் தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைக் கொண்டு பாடப்படும் பாட்டு "வில்லுப்பாட்டு' என பெயர் பெற்றது. பழங்காலத்தில் வில்லுப்பாட்டு கோயில் கொடை விழாக்களில் முக்கிய பங்கை வகிக்கும்.

இன்றும் இறை வாழ்த்து முதல் சுவாமி பிறப்பு, வளர்ப்பு, உச்சாட்டம், படுகளம், ஊட்டுக்களம், முத்துவரம் படுகளம், எழுப்புதல், கும்மி என இந்து சமயத்தின் பல கிராமியக் கதைகளையும் தமிழ் இலக்கியங்களையும், கடவுள் கதைகளையும் இசையோடு சேர்த்து பாடப்படும் அற்புதமானக் கலைதான் வில்லுப்பாட்டு.

குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் வில்லுப்பாட்டு மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, மாவட்டங்களில் "வில்லிசை' என்றும் "நாஞ்சில் வசை' என்றும் அழைக்கப்படுகிறது.

இளம்தலைமுறையான உங்களுக்கு வில்லுப்பாட்டில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

என்னுடைய பாட்டி வீடு ரெட்டியார்பட்டியில் உள்ளது. பாட்டி தாத்தா, தாய்மாமா அனனவருக்கும் வில்லுப்பாட்டு மிகவும் பிடிக்கும். எங்கு வில்லுப்பாட்டு நடந்தாலும் என்னையும் அங்கே கூட்டி செல்வார்கள். தாத்தா,பாட்டி கூட உட்கார்ந்து பேசும்போது அவர்கள் கூறும் கதைகளை ஆர்வத்துடன் கேட்பேன். எங்கள் ஊர் திருவிழாவில் வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தும் கலைஞர்கள் எங்கள் வீட்டில் விருந்து உணவு

சாப்பிடுவது வழக்கம். அவர்கள் கோயிலில் வில்லுப்பாட்டு பாடும்போது, நானும் எனது குடும்பத்தினரோடு சேர்ந்து அதை பார்த்து ரசித்து கொண்டிருப்பேன்.

சிறுவயதிலிருந்தே வில்லுப்பாட்டை ரசித்தபடி தான் வளர்ந்தேன். ஒருநாள் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, எனது தாய் மாமாவும், தாத்தாவும், "நமது வீட்டிலும் யாராவது வில்லுப்பாட்டு பாடினால் நன்றாக இருக்கும்' என்று கூறினர். இதை கேட்டு எனக்கு அந்த எண்ணம் வந்தது. எனது விருப்பத்தை புரிந்து கொண்ட குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவாளித்தனர்.

வீரகேளரம்புதூரைச் சேர்ந்த இசக்கி, புலவர், வல்லத்தைச் சேர்ந்த மாரியம்மாள், கடையநல்லூரைச் சேர்ந்த கணபதி புலவர் ஆகியோரிடம் வில்லிசை பயின்றேன். ஆரம்பத்தில் விடுமுறை நாள்களில் மட்டும் வில்லுப்பாட்டு கற்றேன். வில்லுப்பாட்டு மீது நான் கொண்ட ஆர்வத்தால் தற்போது முழுவதுமாக அதில் கவனம் செலுத்தி வருகிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தொடர்ந்து கல்வியும் கற்று வருகிறேன்.

முதல் கச்சேரி நடைபெற்றது எங்கே?, இதுவரை எத்தனை கச்சேரிகளில் பாடியுள்ளீர்கள்?

முதன்முதலாக, நான் ஒன்பதாம் வகுப்பு பயின்றபோது அச்சங்குன்றத்தில் என்னுடைய 14-ஆம் வயதில் முத்தாரம்மன்கோயில் விழாவில் முதல் கச்சேரி தொடங்கியது.

ஐந்து வருடங்களாக 400 கச்சேரிகளில் பாடியுள்ளேன். வெளிநாடுகளிலிருந்தும் அழைப்பு வருகிறது. ஆனால் உள்ளூரிலேயே மிகவும் அதிகமான கச்சேரிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் அங்கு செல்ல முடியவில்லை.

வில்லுப்பாட்டு குறிப்பிட்ட சீசன் காலங்களில் மட்டுமே நடைபெறும். கோயில் கொடை விழாக்களில் ஏழு மாதங்கள் வரை கச்சேரி உறுதியாக இருக்கும். மாவட்டம்விட்டு மாவட்டம் விழாக்காலங்கள் மாறும். எனக்கு ஆண்டு முழுவதும் கச்சேரி தொடர்ந்து ஒப்பந்தமாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி உள்ளீர்களே?

பலரும் எங்களுடைய கச்சேரியைப் பதிவு செய்து ஒளிபரப்புவார்கள். அவ்வப்போது எங்களுடைய குழுவினரைப் பாராட்டி பரிசுப் பொருள்கள் வழங்குவார்கள், மற்றபடி எந்தவிதமான லாப ஈவுத் தொகையும் வழங்குவதில்லை. நாங்கள் கேட்டதும் இல்லை.

கச்சேரிகளில் பாடுவதற்கான கதைகளை எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?

கோயில்களின் வரலாறை அவர்களிடம் கேட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் பாடுவோம். சுடலை, முத்துப்பட்டன் கதைகள் எனக்கு மிகவும் பிடித்த கதைகளாகும். அந்தப் பாடல்களைப் பாடத்தொடங்கிவிட்டால் நேரம் போவதே தெரியாது.

சினிமா பாடல் கச்சேரிகளில் பாட ஆர்வம் உள்ளதா?

சினிமா கச்சேரிகளில் பாட எனக்கு எந்த விதமான ஆர்வமும் கிடையாது. வில்லுப்பாட்டை கடைசி வரை பாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

வில்லுப்பாட்டிற்கு மக்களிடம் எவ்வாறு வரவேற்பு உள்ளது?

வில்லுப்பாட்டு பற்றிய மக்களின் மனநிலை தற்போது மாறி உள்ளது. கடந்த காலங்களில் பெரியவர்கள் மட்டுமே வில்லிசையை ரசிப்பார்கள். தற்போது எங்களுடைய கச்சேரியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்வையிட்டு ரசிப்பது பெருமையாக உள்ளது.

இளம்பெண்கள் பலருக்கும் வில்லுப்பாட்டு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது வரவேற்கத்தக்கது.

வில்லுப்பாட்டு கச்சேரிக்காக ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் அங்குள்ள மக்கள் என்னை தங்கள் வீட்டு பிள்ளை போல நினைத்து வரவேற்கிறார்கள்.

உங்களுடைய லட்சியம் என்ன?

தமிழர்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கெல்லாம் வில்லுப்பாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். தனியாகப் பயிற்சி வகுப்பு தொடங்கும் திட்டம் உள்ளது.

உங்கள் குழுவினர் குறித்து?

கச்சேரி முடிந்து பெரும்பாலும் நள்ளிரவு கடந்த பின்பு தான் வீடு விரும்ப முடியும். கச்சேசரி முடிந்து என்னை பத்திரமாக வீட்டில் சேர்ந்தவுடனே அவரவர் இல்லங்களுக்குச் செல்வார்கள். மேடைக்கு கீழே நாங்கள் ஒரு குடும்பமாகச் செயல்படுவோம். ஆனால் மேடையில் கச்சேரி தொடங்கிவிட்டால் ஒவ்வொருவரும் போட்டிபோட்டு தங்களுடைய திறமைகளைக் காட்டத் தொடங்கி விடுவார்கள்.

கச்சேரிகளில் கோயில் கதைகளைத் தவிர்த்து வேறு என்ன கருத்துகளைக் கூறுவீர்கள்?

கச்சேரி நடக்கும்போது இடையிடையே குடும்பம், உறவுகள், பொருளாதாரம், இயற்கை மருத்துவம், ஆரோக்கியம், அழகு உள்ளிட்ட அன்றாட வாழ்வியலுக்குத் தேவையான விஷயங்களைப் பற்றியும் கூறுவேன். நாட்டு நடப்பு குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைப்பதன் அவசியம், முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பொருள்களின் முக்கியத்துவத்தை இணையம், நூல்கள் வாயிலாகப் படித்து தெரிந்து கொள்வேன். பெண் கல்விக்கு முக்கியத்துவம் ஊக்குவித்தால், அவர்கள் சாதிப்பார்கள் என்பதை வலியுறுத்துவேன்.

அரசுக்கு உங்களுடைய கோரிக்கை என்ன?

இது போன்ற கலைகளுக்கு அழிவே வராது. இளையதலைமுறையினரும் அறிய நாட்டுப்புறக் கலைகள் குறித்து பாடத் திட்டத்தில் கொண்டு வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com