ட்ரோனில் மருந்துப் பொருள்கள்...
மருந்துப் பொருட்களை விரைந்து கொண்டு செல்லும் ட்ரோன்: தஞ்சாவூர் பொறியாளரின் சாதனை


மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான ட்ரோனை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீநகர் கூட்டுறவு காலனியைச் சேர்ந்த முப்பது வயதான பொறியாளர் தினேஷ் பாலுராஜ் வடிவமைத்துள்ளார். அவரிடம் பேசியபோது:
தஞ்சாவூரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக். ஏரோநாட்டிக்கல் படித்தேன். அப்போது, ஏரோ மாடலிங், ட்ரோன் வடிவமைப்புகளைச் செய்தேன்.
பின்னர், ஜெர்மனியிலுள்ள டியூஎம் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தவுடன், ஆஸ்திரேலியாவில் போர்க்களத்தில் படை வீரர்களுக்கு மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான டிரோனை தனி நபராக வடிவமைத்தேன். ஜெர்மனியில் வனுவாட்டு தீவுகளில் வசிப்போருக்கு ட்ரோன் மூலம் மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்லக்கூடிய ட்ரோனை யுனிசெப் அமைப்பின் மூலம் வடிவமைத்தேன். தொடர்ந்துஆறு மாதங்கள் செயல்படுத்தப்பட்ட இந்த ட்ரோன் திட்டம் வெற்றிகரமாக அமைந்தது.
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ட்ரோன் தயாரிக்கும் நிறுவனங்களில் பத்து ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது அவசரச் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்து பொருள்களைக் கொண்டு செல்லும் ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டேன்.

இந்தியாவில் மருத்துவச் சேவை விரைவாக உரிய நேரத்தில் கிடைக்காததால், மகப்பேறு இறப்பு, பாம்புக்கடியால் உயிரிழப்பு, சாலை விபத்துகள் உள்ளிட்ட மரணங்கள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. இதற்காக, மலைக் கிராமங்கள், எளிதில் சென்றடைய முடியாத கிராமங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்லும் விதமாக ட்ரோனை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
2022- ஆம் ஆண்டு மே மாதம் சொந்த ஊருக்குத் திரும்பியவுடன், இந்த ட்ரோனை முழுவதும் உள்நாட்டு பொருள்களைக் கொண்டு தயாரித்தேன். இதில், மருந்துப் பொருள்களை விரைந்து கொண்டு செல்லலாம். மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் 400 அடி உயரத்தில் செல்லும். ஏழு கிலோ வரை உள்ள மருந்து பொருள்களை எளிதில் எடுத்துச் செல்லக் கூடியது.
இந்த ட்ரோன் தொடர்ச்சியாக 150 கி.மீ. வரை பறந்து செல்வதற்கான பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், மருந்துகள் தேவைப்படும் மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் விதமாக செயலிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மருத்துவத் தேவைகள் குறித்து இணையவழியில் பதிவு செய்தால், அந்த இடத்துக்கு இந்த ட்ரோன் மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்லும். இந்த ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள மருந்துப் பெட்டியில் தண்ணீர் உள்புகாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வான்வெளியில் பறக்கவிடுவதற்கான அங்கீகாரமும், தடையின்மை சான்றிதழும் பெறப்பட்டுள்ளது. இதற்காக, 'யாளி ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனத்தை எனது மனைவி அனுகிரஹா உதவியுடன் தஞ்சாவூரில் தொடங்கியுள்ளேன்.
கடந்த ஜனவரியில் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த ட்ரோனை காட்சிப்படுத்தினேன். சோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்புவும் இந்த ட்ரோனை பார்வையிட்டு, ஆதரவு தருவதாகக் கூறியுள்ளார்.
இந்த ட்ரோனை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதி பெற முயற்சி செய்து வருகிறேன்.
ட்ரோனில் கழுகு பார்வை போன்று உயரமாக பறக்கவிடப்பட்டு, புகைப்படங்கள், விடியோ பதிவுகள் செய்யப்படுகின்றன. தற்போது விளைநிலங்களில் பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது மருத்துவத் துறையிலும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவது பேருதவியாகவே இருக்கும்' என்கிறார் தினேஷ் பாலுராஜ்.
-வி.என்.ராகவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...