

'பாட்ஷா' பாணியில் 'ராயன்'!
தனுஷின் 50-ஆவது படத்தின் டைட்டில் 'ராயன்' என அறிவிக்கப்பட்டுள்ளது. கதையை செல்வராகவன் எழுதியிருக்கிறார் என்று தகவல் பரவிய நிலையில், தான் நடிகன் மட்டுமே என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தைப் பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்:
'ராயன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனது அடுத்த படமான 'டி51' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் அங்கே நடக்கிறது. 'ராயன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா, செல்வராகவன் எனப் பலரும் நடித்துள்ளனர்.
' வட சென்னையில் இரவு நேர உணவுக் கடையில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார் ராயன். ஒரு கட்டத்தில் அவரைப் பற்றிய உண்மை தெரிய வரும்போது, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கேங்ஸ்டராக இருந்தவர்தான் தற்போது அமைதியின் வடிவமாக சமையல்காரராக இருந்துள்ளார். அதன்பிறகு என்ன நடக்கிறது' என்பது மீதிக்கதை என்கிறார்கள்.
'திருச்சிற்றம்பலம்' ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அஜித்தின் 'விடாமுயற்சி'யில் வேலை செய்து வருகிறார். இந்தக் கதையில் அண்ணன் - தங்கைக்கான எமோஷனல் பேசப்படும் என்றும், 'மாரி' ரவுடி பேபி பாடலுக்குப் பின்னர் பிரபுதேவாவுடன் இணைந்திருக்கிறார் என்றும் தகவல். படத்தில் தனுஷிக்கு ஜோடி இல்லையாம்.
இன்னொரு விஷயம், வடசென்னையை மையப்படுத்தும் கதை என்பதால் இ.சி.ஆரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் 500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சூழ்ந்த பெரிய கிராமம் ஒன்றையே செட் போட்டுப் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர்.
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தனுஷே இயக்கி நடிக்கிறார் என்பதால் டப்பிங் வேலைகளை இரவும் பகலுமாக கவனித்து வருகிறார் தனுஷ். இசை ஏ.ஆர்.ரஹ்மான். இதற்கு முன் தனுஷின் 'அட்ராங்கி ரே', 'ராஞ்சனா', 'மரியான்' படங்களுக்கு இசையமைத்தவர், இப்போது நான்காவது முறையாக தனுஷுடன் கைகோத்திருக்கிறார். இன்னும் சில நாள்கள் டப்பிங் பணிகள் நடக்கின்றன. அதனை முடித்து விட்டு மீண்டும் சேகர் கம்முலாவின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் தனுஷ்.
14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா!
2010-ஆம் ஆண்டு 'விண்ணைத் தாண்டி வருவாயா' தெலுங்குப் படத்தில் ஆரம்பித்து (தமிழில் கேமியோ) குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்திய என பேன் இந்தியத் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்தவர் சமந்தா. 'பாணா காத்தாடி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'நான் ஈ', 'கத்தி', 'தெறி' எனத் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். த்ரிஷாவின் 'விண்ணைத் தாண்டி வருவாயா', '96' படங்களின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து தமிழ், தெலுங்கு இரண்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பிடித்தார். 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்று தனது சமகால உச்ச நட்சத்திரமான நயன்தாராவுடன் எந்தவித ஈகோவுமின்றி நடித்தார். தெலுங்கு, தமிழ் எனப் பெரும்பாலும் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்துவிட்டார் எனலாம்.
மயோசிடிஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்து கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த 'குஷி' படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன்பின்னர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப் போவதாகக் கூறினார்.
ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'ஹெல்த் பாட்கேஸ்ட்' ஒன்றைச் செய்துள்ளார். தொடர்ந்து ஒருசில படங்களிலும் கமிட்டாகி தனது பணியை மீண்டும் தொடந்து வருகிறார். அவர் திரைத்துறைக்கு வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. வெற்றி, தோல்வி, தனிப்பட்ட வாழ்வில் விவாகரத்து, மயோசிடிஸ் பாதிப்பு எனப் பல சோதனைகள் வந்தாலும் எதையும் தனது சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு வெற்றி நடைபோடும் சமந்தாவுக்கு நயன்தாரா, பிரபல நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். '
பலருக்கும் அவர் இன்ஸ்பிரேஷன்' என்றும் பாராட்டி வருகின்றனர். இது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
முதல் இந்திய ஒளிப்பதிவாளர் !
சர்வதேச 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் 1946- ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 2013-ஆம் ஆண்டிலிருந்து ஒளிப்பதிவாளர்கள் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் 'பியர் ஆசிங்யு' விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை பிலிப் ரூùஸலோட், வில்மோஸ் சிக்மண்ட், ரோஜர் டிக்கின்ஸ், பீட்டர் சுசிட்ஸ்கி, கிறிஸ்டோபர் டாய்ல், எட்வர்ட் லாச்மேன், புருனோ டெல்போனல் என குறிப்பிடத்தக்கவர்கள்தான் பெற்றிருக்கின்றனர்.
இந்த வரிசையில் தற்போது சந்தோஷ் சிவன் இவ்விருதைப் பெறுவதன் மூலம், விருது பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், இந்திய சினிமாவில் திரைப்படங்கள், ஆவணப்படங்களில் பணியாற்றி இந்தியாவின் பெருமை மிகுந்த ஒளிப்பதிவாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் 12 தேசிய விருதுகளையும், நான்கு கேரள அரசின் விருதையும், மூன்று தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.
இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய 'ரோஜா', 'தளபதி', 'உயிரே', 'துப்பாக்கி' உள்ளிட்ட படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தவை. பல திறமையான ஒளிப்பதிவாளர்களை உருவாக்கியவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.