எளிய நூல்களாகும் ஆய்வுக் கட்டுரைகள்..

'தமிழ் இலக்கணத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறேன்.
எளிய நூல்கள்
எளிய நூல்கள்
Published on
Updated on
2 min read

'தமிழ் இலக்கணத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறேன். இன்னும் பல ஆய்வுக் கட்டுரைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கத் தொடர்ந்து முயற்சிப்பேன்' என்கிறார் நாற்பத்து எட்டு வயதான தமிழ் ஆசிரியை க. பழனியம்மாள்.

திருச்சி பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றும் இவர், 'முனைவர் தாமரை' என்ற தனது புனைப்பெயரில் ஆய்வுக் கட்டுரைகளை 14 எளிய நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'சிறு வயது முதலே படிப்பில் ஆர்வமுள்ள நான் எம்.ஏ. பி.எட். முடித்து தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றியபடி முனைவர் பட்டம் முடித்துள்ளேன். தமிழில் ஏதேனும் சாதனை நிகழ்த்த வேண்டும் அதுவும் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயலாற்றி வருகிறேன்.

திருச்சிராப்பள்ளித் செம்மொழி மன்ற நிறுவனத் தலைவர், சென்னை உலகத் திருக்குறள் மையத்தின் வாழ்நாள் இயக்குநர், உலகத் திருக்குறள் மைய மூதறிஞர் குழு செயலாளர், உலகத் திருக்குறள் பரப்பு மைய பொறுப்பாளர், திருச்சி உலகத் திருக்குறள் மைய தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து வருகிறேன்.

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவித்திட வேண்டி, 2022- இல் 205 மணி நேர இணைய வழிப் பன்னாட்டுத் திருக்குறள் ஆய்வரங்கம், உலகின் முதல் முறையாக 1,330 குறட்பாக்களுக்கும் 1330 விடுபுதிர்களை வடிவமைத்து 11 மணி 40 நிமிடத்தில் எழுதியது, 1,330 கவிஞர்களை ஒருங்கிணைத்து திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும் 1,330 கவியுரைகள் வழங்க வைத்த கவியரங்கம், ரிக் வேதத்தில் மண்டலம் 2, 10 ஆகிய இரு மண்டலங்களையும் பகுப்பாய்வு செய்தது, திருக்குறள் காமத்துப்பால் மாநாடு நடத்தியது, தொல்காப்பியத்துக்கு வினாவிக் கவிகள் உருவாக்கியது ஆகிய ஏழு சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்.

திருச்சியில் குறள் சார்ந்து பணியாற்றுவோருக்காக, போட்டிகளை நடத்தி 1,548 பேருக்கு விருதுகளை வழங்கியுள்ளேன்.

எனது முக்கிய பணியாக, ஆய்வுக் கட்டுரைகளை எளிய நூல்களாக்கி இலக்கியம் படிப்பவர்களுக்கு உதவி வருகிறேன். இது எப்போதும் தேவையுள்ள பொக்கிஷமாக விளங்கும்.

இதில், 'தொல்காப்பிய வினாவிக் கவிகள்', 'அணியோடு விளையாடு' ஆகிய நூல்கள் சிறப்புமிக்கவை. பண்டையத் தமிழறிஞர்கள் இளம்பூரணர், நச்சினார்கினியர், காளமேகப்புலவர், சேனாவரையருக்கு அடுத்ததாக விடுகதைகளை ஒத்த, 100 வினாவிக் கவிகளை தொல்காப்பிய நூற்பாக்களில் இருக்கும் சில இலக்கணங்களுக்கு முதல்முறையாக எழுதி வெளியிட்டுள்ளேன்.

வினாவிக் கவிகளை உருவாக்கி, அதற்கான விளக்கத்தை ஆய்வு செய்து தெளிவாகக் கூறி, விடையளித்துள்ளேன். தண்டியலங்காரம் பொருளணியில் உள்ள 35 அணிகளை எளிய பாடல்களைக் கொண்ட புதிர்களாக எழுதி, அதனை விளக்கி, அதற்கான விடைகளை மற்ற இலக்கண நூல்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு, ஆய்வு நூலாக எழுதியுள்ளேன்.

'தொல்காப்பியம் இளம்பூரணர் உரைத் திறன்', 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு', முதல்வரால் வெளியிடப்பட்ட 'தொல்காப்பியம் சூடிக் கொடுத்த கலைஞர்' ,

'இருக்கு (ரிக்) வேதம் மண்டலம் 2 பகுப்பும் தொகுப்பும்', 'திருக்குறள் ஒப்பாய்வுகள்', 'இருக்கு வேத உயிரினங்கள் தரும் புதிய ஒளிகள்- குதிரை', 'பன்முகப் பார்வையில் திருக்குறள் - இரண்டு தொகுதிகள்', 'பெரியாருக்குக் கடிதங்கள்', 'திருக்குறள் கவியுரை' என்ற பெயரில் 1330 கவிஞர்கள் இணைந்து எழுதிய நூல், 'காமத்துப்பால் வாழ்வியல் வளம்' உள்ளிட்ட 14 நூல்களை ஆய்வுக் கட்டுரை நூல்களாக எழுதியுள்ளேன்.

தமிழ் இலக்கணத்தை படிப்போர் எளிமையாக அறியும் வகையில் தொல்காப்பிய வினாவிக் கவிகள், அணியோடு விளையாடு நூல்களை ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டுள்ளேன்.

இளைய சமுதாயத்துக்கு ஏற்ற, மக்களின் உள்ளத்தைக் கவரும் வகையில் புதிர்களின் வடிவில், மொழிக்கான சட்டத்திட்டங்களை எளிமைப்

படுத்தி, இலக்கணத்தை விளையாட்டாக எடுத்துக் கூறும் வகையில் 'தொல்காப்பிய வினாவிக் கவிகள்', 'அணியோடு விளையாடு' நூல்களை எழுதியுள்ளேன்.

இலக்கணம் என்று கூறினால் தெரித்து ஓடும் இளைய சமுதாயத்தினருக்கு, எளிமையான இந்த நூல்கள் இலக்கணத்தை விரும்பிப் படிக்க வைக்க உதவும். அதனால், மற்ற நூல்களை விட இவை அனைவராலும் விரும்பத்தக்கவையாக விளங்குகின்றன' என்கிறார் பழனியம்மாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com