ஆக்ஷன் படம் என்றாலும், துடித்து அலற வைக்கிற ஆக்ஷன் இல்லை. எல்லாமே கதையோடு சம்பந்தப்பட்டதுதான் இருக்கும். ஒரு சிறை, அதன் அதிகாரிகள், காவல்துறை கட்டுப்பாடுகள், சிறைக் கைதிகள்... இது எல்லாமும் உள்ளடக்கம். கதையை மீறி இங்கே எதுவும் இல்லை. ஒரு மெலிதான லைன்தான்.
அடடா, நல்லா வரும் போலிருக்கே.. பெரிதாக பண்ணிடுங்க.. பச்சைக் கொடி காட்டிய தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. அப்படி வந்து நின்றதுதான் இந்த 'சொர்க்க வாசல்'. எப்படி படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே திரையிலும் வந்திருக்கு. ஆர்வம் தழும்ப பேசுகிறார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத். பா. ரஞ்சித்தின் உதவியாளர். 'கபாலி', 'காலா' காலகட்டங்களில் அவரோடு பயணித்து சினிமா கற்றவர்.
சிறை வளாகத்தைதான் சொர்க்க வாசல் என அர்த்தப்படுத்தி இருக்கிறீர்களா...
பெயர், கதையோடு தொடர்புடையது... இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். கதைக்கான புள்ளி சிறு சிறு பயணங்கள்தான். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஏழெட்டு பேரை புதிதாக சந்தித்து பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட புழங்க வேண்டியிருக்கும். ஒரு சிறை கைதியின் வாழ்நாள் முழுக்க அவனோடு பயணிக்க வேண்டி இருக்கும்.
அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேற்ற மாதிரி இயங்குவதே சிரமமானது. இது சில சாமானிய போலீஸ் அதிகாரிகளின் கதை.
அவர்களைச் சுற்றிய சிறை வாசிகளின் வாழ்க்கை. இதற்காக நிறைய தரவுகள் தேவைப்பட்டன. அதையெல்லாம் ஆராய்ந்து கதை செய்திருக்கிறேன்.நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு. இது த்ரில்லர் கதை. அதே சமயம் வாழ்க்கை இவ்வளவு சிக்கலானதா என சொல்ல வரும் கதை.
கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்....
சிலர் விதவிதமான குற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாமல் பல அப்பாவிகளும்கூட வழக்குகளில் சிக்க நேரிடுகிறது. பொய் வழக்குகளின் அணிவகுப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. நம் சமூகத்தில் தாங்கள் நிரபராதிகள் என உண்மையை நிரூபிக்க, முட்டி மோதி கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. சிறையில் அடைக்கப்படும் சாதாரண மக்களும்கூட அங்கே வாழ்ந்துதான் ஆக வேண்டும். சிறையில் இருக்கும் வரை ஒருவர் தனது மனநிலையை சரியாக வைத்துக்கொள்வது முக்கியமானது.
அங்கே உள்ள வார்டன்களின் மனநிலை தனி ரகமாக இருக்கும். வெளியில் உள்ள காவல்துறையினரைவிட சிறையில் உள்ள காவலர்களுக்கு கிடைக்கும் மரியாதை, வசதி ஆகிய அனைத்துமே குறைவாகத்தான் இருக்கும். கைதிகளைப்போலவே இந்தக் காவலர்களும்கூட எப்படியாவது சிறையை விட்டுப்போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். சிறையில் வேலை பார்க்க வேண்டுமென்று யாரும் ஆசைப்படுவதில்லை. கைதிகளுக்கான தண்டனைக்காலம் போன்றுதான் இந்தக் காவலர்களின் பணிக்காலம் அமைகிறது. சிறையில் பணியாற்றும் காவல்துறையினரின் வரம்பு மீறிய அதிகார ஆட்டம் எப்படி இருக்கும் என்பதையும் இங்கே பார்க்கலாம்.
போலீஸை விமர்சிப்பதுதான் இங்கே அதிகமாக இருக்கிறது...
ரத்தம் வழிய வழிய... நான்கு பேர் அடித்துக் கொள்ளும் போது ஒதுங்கி ஒளியும் போலீஸ்காரர்கள் எப்படி உருவாகிறார்கள். சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்கார்களைக் கேவலமாக திட்டும் நமக்கு, பெரும் அரசியல் பேரங்களிலும், கலவரங்களிலும் கொலைகளிலும் பங்கு போட்டு நடத்தும் காவல்துறை அதிகாரிகளை தெரிவதே இல்லை. சில குற்றங்கள்தான் இந்தக் கதையின் பிரதானம்.
குற்றத்தின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100 க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. அதை ரிபீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகள் எக்கச்சக்கம். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும். நீங்கள் போலீஸில் நல்லவரையும், கெட்டவரையும் பார்த்திருக்கலாம். அது அப்படி இரண்டு பக்கமும் இருக்கிறது.
ஆக்ஷன் கதை ஆர். ஜே. பாலாஜிக்கு புதிய களமாக இருந்திருக்குமே...
கொலை செய்தவர்கள், கடத்தல் பேர்வழிகள், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பவர்கள், 'பிக்பாக்கெட்' அடிப்பவர்கள் எனப் பல்வேறு குற்றங்களைச் செய்யும் ஆசாமிகள் சிறைக்கு வருகிறார்கள். அப்படி வந்து சேரும் குற்றவாளிகளும் எந்தத் தவறும் செய்யாமல் இத்தகைய வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் அப்பாவிகளும்கூட சிறைக்கு வர நேரிடுகிறது.
இந்தத் தனி உலகத்தை சரியான விதத்தில் காட்சிப்படுத்த மேற்கொண்ட முயற்சிதான் இந்தப் படம். இதுவரை குடும்பப்பாங்கான படங்களில் மட்டுமே நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜிதான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவருக்கு இந்தக் கதை சரியாக வருமா எனத் தொடக்கத்தில் யோசனை இருந்தது. ஆனால் படத்தில் ஒப்பந்தமான முதல் நொடியில் இருந்து பாலாஜி காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் வியக்க வைத்தது. அவரால் எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என இப்போது நான் உறுதியாக நம்புகிறேன்.
உண்மையைச் சொல்லும்போது அதன் விளிம்புவரை சென்று எட்டிப்பார்க்கும் முனைப்பு எனக்கு இருந்தது. நேர்மை வெற்றி பெறுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நியாயம் என்பது உலகத்துக்கு கண்டிப்பாக புரியும்.
இனிமேல் வாழ்க்கையைப் பிரதிபலித்தால்தான் சினிமா பேசப்படும். அப்படி ஒரு நியாயம் இந்தப் படத்தில் இருக்கிறது. செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும் இங்கே சரியாக கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நிறைய பொது விவாதங்களை இந்தப் படம் முன் வைக்கும்.