
எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், சுதந்திரப் போராட்ட வீரர்.. என பன்முகத் தன்மைகளைக் கொண்ட கல்கியை இளையதலைமுறையினர் அறியும் வகையில் சுமார் 30 நிமிடம் ஓடும் "பேனா போராளி கல்கி' எனும் ஆவணப் படத்தை கல்கி குழுமம் தயாரித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற அமரர் கல்கி 125-ஆவது பிறந்த நாள் விழாவில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வீ. காமகோடி, வெளியிட்டு பேசுகையில், ""இந்த படத்தை கல்கியைப் பற்றி தெரிந்த, அவரது எழுத்துகளைப் படித்து ரசித்த தலைமுறையினர் பார்த்தால் மட்டும் போதாது. உங்கள் வீட்டில் உள்ள இன்றைய இளைய தலைமுறையினர் எல்லோரையும் கட்டாயமாகப் பார்க்கச் சொல்லுங்கள்'' என்று குறிப்பிட்டார். இந்த காணொளியை kalkionline யூடியூப் தளத்தில் காணலாம்.
ஆவணப் படத்தைத் தயாரித்தவர்களோடு பேசியபோது:
கல்கி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதா ரவி:
1999-இல் ஜி.கே. மூப்பனார் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய "அமரர் கல்கி நூற்றாண்டு விழாக் குழு' அமைக்கப்பட்டு, விழா சிறப்புறக் கொண்டாடப்பட்டது. கல்கியின் எழுத்துகளை அரசுடமையாக்கி, அவருக்குப் பெருமை சேர்த்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களிலும், திருவனந்தபுரம், புதுதில்லி உள்பட இந்திய நகரங்களிலும் மட்டுமின்றி கடல் கடந்தும் கல்கிக்கு தமிழ் அமைப்புகள் ஆர்வத்துடன் விழாக்களைக் கொண்டாடினர்.
கல்கி பிறந்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. எழுத்துலகுக்கும், சமூகத்துக்கும் அவர் செய்துள்ள பங்களிப்பை என்றென்றும் கொண்டாடலாம். இந்தத் தருணத்தில் அவரது பன்முகப் பரிமாணத்தை அழகுடன் வெளிப்படுத்தும் விதமாக, ஆவணப் படத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை தயாரித்துள்ளது.
கல்கி குழுமத் தலைமை நிர்வாகி லட்சுமி நடராஜன்:
கல்கியின் "பொன்னியின் செல்வன்' நாவலை வாசிக்காத தமிழர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அப்படியே வாசிக்காதவர்களும் பொன்னியின் செல்வன் பாகம் 1, பாகம் 2 படங்களைப் பார்த்திருப்பார்கள். வந்தியத்தேவன் பாத்திரமானது நெஞ்சில் நிலைத்திருக்கும். வந்தியத் தேவனின் நெஞ்சுரமும் நேர்மையும், வாய் சாதுர்யமும் படைச்ச ஒரு நிஜ மனிதர்தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி.
1922-இல் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது, இருபத்து மூன்று வயதான இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து ஆங்கிலேய நீதிபதி முன்பு நிறுத்துகின்றனர். "பார்த்தால் சிறுவன்போல இருக்கிறாய். உன் மீதான குற்றச்சாட்டு என்னன்னு உனக்குத் தெரியுமா?' என்று நீதிபதி கேட்டார். அப்போது அந்த இளைஞர், "ஏன் தெரியாது? அதைத் தானே இத்தனை நாளா செஞ்சுக்கிட்டிருந்தேன்' என்றார். இந்த பதிலைக் கேட்டதும் நீதிபதியே சிரித்துவிட்டார்.
இதன்பின்னர், இளைஞருக்கு தேச துரோகம் என்று குற்றம் சொல்லி ஓராண்டு கடுங்காவல் தண்டனையை அளித்தார் நீதிபதி. அந்த இளைஞர்தான் பின்னாளில், கல்கி ஆன கிருஷ்ணமூர்த்திதான். அவரது வாழ்க்கையில் ஏராளமான வெகு சுவாரசியமான சம்பவங்கள். அவற்றையெல்லாம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் 125-ஆவது பிறந்த நாள் விழா தருணத்தில் ஆவணப் படம் எடுப்பதும், அதனை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கண்டு ரசிக்கும் வகையில் யூடியூப் மூலமாக வெளியிடுவதும் பொருத்தம்தான்.
ஆவணப் பட ஒருங்கிணைப்பாளர் பிரியா பார்த்தசாரதி:
"கர்நாடகம்' என்ற புனைபெயரில் கல்கி எழுதிய இசை, நடன, நாடக, சினிமா விமர்சனங்கள் விகடனில்தான் முதலில் வெளியானது. தமிழில் நிகழ் கலைகளை எப்படி விமர்சிக்க வேண்டும் என்பதற்கு கல்கிதான் முன்னோடி. மாதப் பத்திரிகையாக இருந்தது ஆனந்த விகடன்.
கல்கி வேலைக்குச் சேர்ந்தவுடன் மாதம் இரு முறை இதழாகி, அவர் ராஜிநாமா செய்யும் கட்டத்தில் வாரப் பத்திரிகையாக வளர்ந்திருந்தது. கை நிறைய சம்பளம், இதர வசதிகள், பெயர், புகழ் இவ்வளவும் இருந்த நேரத்தில் கல்கி சத்தியாகிரகப் போராட்டத்துக்காக, விகடன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டார்.
இரண்டாவது உலகம் போர் நடந்த நேரத்தில், பொருளாதார நெருக்கடி. பத்திரிகை அச்சடிக்கிற காகிதம் விலை கடுமையாக உயர்ந்தது. "வேண்டாம் புது பத்திரிகை' என்று நண்பர்கள் எச்சரித்தும் கல்கியும் சதாசிவமும் தைரியமாகக் களத்தில் இறங்கி, கல்கி பத்திரிகையை துவக்கினர்.
சதாசிவத்தோட மனைவி எம்.எஸ். அம்மா சாவித்திரி திரைப்படத்துல நாரதரா வேஷம் ஏற்று நடித்து அதற்காகக் கிடைத்த ஊதியத்தைப் பத்திரிகைக்கு முதலீடாகக் கொடுத்தார். ஆசிரியர் பொறுப்பு கல்கியுடையது. நிர்வாகப் பொறுப்பு சதாசிவம். இரண்டு பேருக்கும் இருந்த நாட்டுப் பற்று, மகாத்மா காந்தி மீதான பக்தி, மூதறிஞர் ராஜாஜி மீதான மரியாதை.. இதெல்லாம் சேர்ந்து பத்திரிகைக்கு தனி அடையாளமும் பெரிய வெற்றியும் பெற்றுக் கொடுத்தது.
புரட்சிக்கரமான கருத்துகளை, சம்பவங்களை உள்ளடக்கி கதை, கட்டுரைகளை எழுதியவர் கல்கி. அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. "தியாக பூமி சேலை' என்று கூட ஒரு சேலை அறிமுகமாகி அதிக அளவில் விற்பனையானது.
இப்படியாக ஏகப்பட்ட விஷயங்களை அரைமணி ஆவணப் படத்தில் சொல்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அரை மணி நேரத்துக்கு, கல்கி தொடர்பான புகைப்படங்கள், கார்ட்டூன்கள் ஆகியவற்றைக் கொண்டே விஷுவலாகவும் விறுவிறுப்பாக இருக்கும்படி செய்திருக்கிறோம்.
நூற்றுக்கணக்கான அரிய புகைப்படங்களை, கல்கி அலுவலகப் புகைப்படக் களஞ்சியத்தில் இருந்து தேடிக் கொடுக்கும் இமாலயப் பணியை கல்கி முன்னாள் ஆசிரியர் சீதா ரவி செய்து கொடுத்துவிட்டார். அது எங்கள் பணியை எளிதாக்கியது. ஆனாலும் பழங்காலப் புகைப்படங்கள் என்பதால், அவற்றில் பல வெளிறிப் போய்விட்டன.
தொழில்நுட்பம் மூலமாக அந்தப் புகைப்படங்களுக்கு மெருகூட்டி, பயன்படுத்தி இருக்கிறோம். மொத்தத்தில் இது பெருமிதம் அளிக்கும் ஒரு புது அனுபவம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.