புதுவையின் அரசியல், தொழில்,கலை,கலாசாரத்தில் பிரான்ஸ்நாட்டவரின் தாக்கம் விளையாட்டையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு பெத்தாங் விளையாட்டே சாட்சியாகும். கோலிக்குண்டு விளையாட்டைப் போன்ற பெத்தாங் விளையாட்டை புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் இன்றும் விளையாடி மகிழ்கின்றனர்.
விளையாடுவது எப்படி?
'பெத்தாங் விளையாட்டுக்கு 12 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் உடைய மைதானம் தேவை. அதில் ஒருபுறத்தில் வட்டமிட்டு அதில் நிற்பவர் மரத்தினாலான சிறிய குண்டை வீசுவார். அது 6 மீட்டர் முதல் 10 மீட்டருக்குள் நிலைநிறுத்தப்படும். அந்த மரக்குண்டின் அருகே இருக்கும் வகையில் மற்ற பெரிய இரும்புக் குண்டுகளை வீசுகிறார்கள். இதில் ஒருவர் வீசிய குண்டை எதிராக விளையாடுவோர் தங்கள் குண்டுகளை வீசி அப்புறப்படுத்தலாம்.
மரக்குண்டு அருகே நிலை நிறுத்துதல், ஏற்கெனவே உள்ள இரும்புக் குண்டுகளை அப்புறப்படுத்துதல், மைதான எல்லையைவிட்டு குண்டு செல்லுதல் ஆகியவற்றை மையமாக வைத்து வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படும். தனிநபர், குழு என போட்டிகளில் ஆள்களின் எண்ணிக்கைக்கேற்ப விளையாடலாம்.
ஒரு மணி, இரண்டு மணி நேரம் என போட்டியாளர்கள் விரும்பும் வகையில் விளையாட்டு நடைபெறும். விளையாடுபவர்கள் போந்தர், தீரர், டெமி என மூன்று வகையாக அழைக்கப்படுகின்றனர்.
அவரவருக்கும் உரிய விதிகள் உள்ளன.புதுச்சேரியில் 1960 -ஆம் ஆண்டு முதல் பெத்தாங் விளையாடப்பட்டுவருகிறது.தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விளையாடி வருகின்றனர்.45 சங்கங்களும்,300 பெத்தாங் விளையாட்டு அணிகளும் உள்ளன.
பிரான்ஸ் நாட்டு கிராமங்களில் ஏழை, எளியோரால் விளையாடப்படும் இந்த பெத்தாங் தற்போது சர்வதேச அளவிலான விளையாட்டாக மாறிவருவதற்கு, புதுச்சேரி வீரர்களும் காரணமாக இருக்கின்றன.
புதுச்சேரி உழவர்கரையைச் சேர்ந்த தக்கார்:
'நான் எனது பத்தாவது வயதில் தொடங்கினேன்.18'ஆம் வயதில் அரசின் அங்கீகாரம் பெற்ற அணியில் சேர்ந்தேன். 42 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டபோட்டிகளில் பங்கேற்று 59 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றேன். அவற்றில் 35 முறை முதல் பரிசையும், 24 முறை இரண்டாம் பரிசையும் பெற்றிருக்கிறேன்.
வர்ணப் பூச்சாளராகப் பணிபுரிந்துவருகிறேன்.சிறிய வீட்டில் வசித்தாலும், தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றுபல பதக்கங்களையும் குவித்துள்ளேன். வறுமையில் வாடினாலும் பெத்தாங் விளையாடாமல் என்னால் உயிர் வாழ முடியாது.
வாழைக்குளம் நியூ பெத்தாங் அசோசியேசன் ஆப் புதுச்சேரி அமைப்பின் தலைவர் பத்ரீஸ்:
தமிழ்நாடு, புதுச்சேரி, புதுதில்லி, ராஜஸ்தான், குஜராத், சண்டிகர், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெத்தாங் விளையாடப்படுகிறது. ஆனால், புதுச்சேரியில் மட்டும்தான் முறையாக விளையாடப்பட்டு தேசிய, சர்வதேச அளவிலானபோட்டிகளில் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.
பெத்தாங் அமைப்பின் பொதுச்செயலர் சி.கலைச்செல்வன்:
உலக அளவில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பெத்தாங் விளையாடப்பட்டு வந்தாலும், தற்போது புதுச்சேரி மட்டுமே அந்த விளையாட்டில் தொடர்ந்து இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குஜராத் மாநில அமைப்பினரே தேசிய அளவில் பதிவும் பெற்று அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
புதுச்சேரி பெத்தாங் அமைப்புகள் இன்னும் பிரான்ஸ் நாட்டு அங்கீகாரத்தைக் கூட பெறாமலிருப்பது கவலைக்குரியது.தொழிலாளியான நான், பெத்தாங் விளையாட்டுக்காக தனது திருமணத்தையே தியாகம் செய்துள்ளேன். தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற பெத்தாங் போட்டியில் தங்கம் வென்றேன்.
வீரர் தீன்குமார்:
சண்டீகரில் அண்மையில் நடைபெற்ற பெத்தாங் போட்டியில்தங்கம் வென்றேன். புதுச்சேரியில் பல வீரர்களின் சாதனைகள் அதிகமாகவே பேசப்படுகின்றன. பெத்தாங்கின் தாயகமாக பிரான்ஸ் இருந்தாலும், தற்போது தேசிய,சர்வதேச அளவில் பெத்தாங்கில் புதுச்சேரி வீரர்கள்தான்அதிகமான வெற்றியைக் குவித்து வருகின்றனர்.
இவர்களை புதுவை அரசு உற்சாகப்படுத்த வேண்டும். பெத்தாங் விளையாட்டுக்கான குண்டுகள் பிரான்ஸிலிருந்தே வாங்கிவரப்படுகின்றன.அவையும் ஆயிரக்கணக்கான ரூபாய் விலை உயர்ந்துவிட்டது. பெத்தாங் விளையாட்டை முன்வைத்து, சுற்றுலாப் பயணிகளைக் கவரலாம்.