பிப்ரவரிக்குள் 74 தொகுதிகளில் சிறு விளையாட்டு மைதானம் திறப்பு
தமிழகத்தில் 74 தொகுதிகளில் தலா ஒரு சிறு விளையாட்டு மைதானம் திறக்கப்படவுள்ளது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: போளூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி பேசும்போது, தொகுதிகள்தோறும் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கங்களைக் கட்டவில்லை என்று தவறான தகவலைத் தெரிவித்தாா்.
தமிழகத்தில் இதுவரை 82 தொகுதிகளில் சிறு விளையாட்டு மைதானங்கள் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளாா். அரசு நிதியாக ரூ.2.50 கோடி, சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியில் இவை அமைக்கப்படுகின்றன. 82 விளையாட்டு மைதானங்களில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 8 மைதானங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள மைதானங்கள் வரும் பிப்ரவரி இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். இவை தவிர, 59 தொகுதிகளில் ஏற்கெனவே இருந்த மைதானங்களைப் புனரமைக்க தனியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 35 மைதானங்களுக்கான பணிகள் முடிந்துவிட்டன. நிகழாண்டில் மீதமுள்ள 24 மைதானங்களும் புனரமைக்கப்படும். மொத்தம் 141 தொகுதிகளில் மைதானங்கள் அமைப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மற்ற தொகுதிகளிலும் மைதானம் அமைப்பதற்கு நிலம் தோ்வு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். 3 முதல் 5 ஏக்கா் வரை நிலம் கிடைத்தால், சிறு விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட 32 அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகள், 3 பாஜக எம்எல்ஏக்களின் தொகுதிகளிலும் நிதி ஒதுக்கப்பட்டு சிறு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.384 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

