கோடையைச் சமாளிப்பது எப்படி?

'கோடைகால நோய்களிலிருந்து தற்காத்துகொள்வது எப்படி?' என்பது குறித்து, இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையினர் பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளனர்.
கோடையைச் சமாளிப்பது எப்படி?
Published on
Updated on
2 min read

'கோடைகால நோய்களிலிருந்து தற்காத்துகொள்வது எப்படி?' என்பது குறித்து, இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையினர் பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளனர்.

அவை என்னென்ன?

கோடையில் உடலில் நீரின் அளவு குறைவதால் வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைகிறது. இதனால் தினசரி மூன்று முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது நல்லது.

தர்ப்பூசணி,வெள்ளரி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்துள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும், பனங்கருப்பட்டி, எலுமிச்சை சாறு, கொடம்புளி, சுக்குப்பொடி, ஏலப்பொடி ஆகியனவற்றுடன் தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் பானகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, நீர்க்கடுப்புக்கும் அருமருந்தாகும்.

காலையில் நீராகராமோ அல்லது மோரோ பருக வேண்டும். அறுசுவை உணவு சிறந்தது என்றாலும், கோடையில் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவையுள்ள பொருள்களை அதிகம் சேர்ப்பதனால் பித்தம் சமப்படும்.

வெட்டி வேர்,நன்னாரி வேர் கலந்த தண்ணீர் குடிக்கலாம். சுரைக்காய், வாழைத்தண்டு,முள்ளங்கி, சௌசௌ, பீர்க்கங்காய், எலுமிச்சம்பழம், இளநீர், பீன்ஸ் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்க்க வேண்டும். சிறுகன்பீளை செடி,நெருஞ்சில் விதை இவைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும்.

மண்பானையில் நீர் விட்டு அதில் வெட்டி வேர், நன்னாரி வேர் போட்டுப் பருக உடல் குளிர்ச்சி அடையும். இரவு உறங்கும் முன்பாக உள்ளங்கை, உள்ளங்கால்களில் பசு நெய் அல்லது எண்ணெய் பூசிக் கொள்ள கண்கள் குளிர்ச்சி அடைந்து கண் நோய்கள் தடுக்கப்படும்.இதற்கு சித்த மருந்தான குங்கிலியம் எண்ணெய்யையும் உபயோகிக்கலாம்.

நுங்கு, இளநீர், பழச்சாறுகள் அருந்துவது நன்மையை உண்டாக்கும். சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி குடிக்க, பித்தம் குறையும். பித்தத்தால் உண்டாகும் நோய்களான மூலம், பெளத்திரம்,ஆசனவாயில் ஏற்படும் கட்டிகள், வேர்க் குரு,வயிற்றுப்புண்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

இரவில் கருப்பு உலர்ந்த திராட்சையை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட உடல் அனல் தணிந்து நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். இரவில் கண் விழித்தல் கூடாது,பகல் நேர தூக்கத்தையும் தவிர்த்தல் நல்லது.

வாரம் இருமுறை எண்ணெய் குளியல் அவசியம். வியர்வைச் சுரப்பிகளில் அழுக்குகள் சேர்ந்து வியர்க்குரு தோன்றும். அதிகப்படியான வியர்வை பிசுபிசுப்பால் சில கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து தேமல்,படை,தினவு போன்ற சரும தொற்றுகளை ஏற்படுத்தும்.

சிறிதளவு அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து ஒரு பாட்டில் வைத்துகொள்ளுங்கள்.இந்த எண்ணெயை அடிக்கடி தோலின் மீது பூசி பயன்படுத்தலாம்.

வெட்டி வேர்,விலாமிச்சு வேர்,கோரைக்கிழங்கு, கிச்சலி கிழங்கு,பாசிப்பயறு,கார்போகரிசி,சந்தனம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்த பொடியே நலங்கு மாவாகும். இதை சோப்புக்குப் பதிலாக உடலில் தேய்த்து குளித்து வர வேண்டும்.இதனால் தேமல்,படை,தினவு,தோல் வறட்சி இவைகள் நீங்கி தோல் பளபளப்பாகவும்,புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல்,வெயில் காலத்தில் பிரத்யேகமாக ஏற்படும் தலை அரிப்பு ஆகியவற்றை நீக்க கடுக்காய் தோல், நெல்லி வற்றல், மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து பசும்பாலில் காய்ச்சி குளிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்பாக தலையில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன் கண்களுக்கும் நல்ல குளிர்ச்சி உண்டாகும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல் வெயிலில் அலைதல், அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுதல் ஆகியவற்றால் உணவில் உள்ள அதிகப்படியான கால்சியம்,ஆக்சலேட் பாஸ்பரஸ் போன்றவை சிறுநீரகம், சிறுநீரகப் பாதையில் தேங்கி கற்களாக மாறுகிறது. சிறுநீரகத் தொற்றினாலும் கற்கள் உருவாகும். சிறுநீரை அடக்காமல் உடனுக்குடன் கழித்துவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com