'ஒரு சினிமா ரசிகனாக எல்லோருக்கும் சார்லி சாப்ளின் படங்கள் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்தபோது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக் கொடுப்பார் ஃப்ராங்க். சார்லி சாப்ளின் படங்களிலும் நீங்கள் அந்த அழகை ரசிக்கலாம்.
நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுத்தான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது. பெரிய திட்டம் எதுவும் இல்லை.
இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்.'' நம்பிக்கையாகப் பேசுகிறார் இயக்குநர் முத்துக்குமரன். ஏற்கெனவே 'தர்ம பிரபு' படத்தில் தன் முத்திரையைப் பதித்தவர். இப்போது 'சலூன்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
சலூன்.... பலதரப்பட்ட மனிதர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம். என்ன விசேஷம்?
அரசியல்தான்.... அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் குடிப்போம் என்று நினைத்துக்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால், நாளை காற்றையும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலை வரும். நடப்பவற்றைப் பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாக பேசுகிற 8 வழி பசுமை வழிச்சாலை வரைக்குமான போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு. இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்து கொண்டு இருக்கிறது.
அதனால் இழப்பு நமக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. சாமானியர்களின் குரல் இதிலே பதிவாகியுள்ளது. சொல்லப் போனால் இதில் என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது. எந்தவிதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் பிரதான பகுதி.
மக்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும், நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது துரத்தப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும் மறக்குமா என்ன? பரவசம் கொடுக்கும் பயணம், எளியவர்களின் எதிர்பார்ப்பு இல்லாத பிரியம்... அரசியல் இப்படித்தான் இருக்கும்.
என்ன பேசப்போறீங்க?
இங்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் மாகாணங்களாக நாம் பிரிந்து கிடந்தோம். ஆங்கிலேயர்கள் நல்லதும் செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கெட்டதும் செய்திருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக், பஞ்சமி நிலம் கொடுத்த ஜேம்ஸ்... இப்படிப் பலரைப் பாராட்டவும், அவர்களுக்குச் சிலை வைத்துக் கொண்டாடவும் செய்கிறோம். அதே நேரத்தில் ஆயிரம் விமர்சனங்களை அவர்கள் மீது வைக்கிறோம்.
இதுவெல்லாம் நடந்த அந்தக் காலகட்டமான 1937 காலகட்டத்தையும், இந்திய விடுதலைக்குப் பிறகான 1980-காலகட்டத்தையும் இணைத்து ஒரு கதை சொல்லப் போகிறேன். அது நடக்கும் இடம் ஒரு சலூன். அந்தக் கடை உரிமையாளராக மிர்ச்சி சிவா, அங்கே பணியாற்றும் ஊழியராக யோகிபாபு. இந்த இருவருக்குமான அரசியல் புரிதலை நகைச்சுவையாகச் சொல்லுவதே திரைக்கதை. அதே நேரத்தில் அந்த காலகட்ட மனிதர்களின் பயணம், வாழ்க்கை, கெளரவம், தன்னியல்பு எல்லாமும் தனிச் சிறப்பு மிகுந்தது.
அதைக் கொண்டு வந்திருக்கிறேன். விளைநிலத்தைக் கூறு போட்டு விற்றிருக்கிறோம். மலையைக் குடைந்து எம் சாண்ட்டாக்கி கட்டடம் கட்டுகிறோம். விவசாயிகள் எல்லாம் சென்னை பக்கம் வந்து ஏ.டி.எம்., பங்களா, ஐ.டி. வாசலில் செக்யூரிட்டியாக நின்று கொண்டு இருக்கிறார்கள். இப்படிப் பல விஷயங்கள் கதைக்குள் என்னை இழுத்துப் போனது. சோறு இல்லை என்பதுதான் எதிர்கால குரலாக இருக்கப்போகிறது. தொழில்
புரட்சி பசியைப் போக்காது. விஞ்ஞானத்துக்கு அரிசியை மந்திரம் மாதிரி உருவாக்கத் தெரியாது. நம் மக்களின் குரலை காரமும், சாரமுமாக பதிவு செய்கிறேன். இது நம் மண்ணின் கதை. அதே நேரத்தில் காமெடியாக இருக்கும்.
இரு காலகட்டங்களையும் திரையில் கொண்டு வருவது பெரும் சவாலாயிற்றே?
வெட்ட வெளியில்தான் முழுப் படமும். எந்த பிரத்யேக அரங்கும் கிடையாது. திடீரென்று மழை பெய்யும். திடீரென்று காற்று வீசும். எல்லாவற்றுக்கும் காத்திருக்க வேண்டும். அதற்கான நடிகர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. மிர்ச்சி சிவா, யோகி பாபு இந்த இரண்டு பேரிடமும் கேட்கும் தேதிகள் இருந்தன.
இதுதான் இதன் முதல் வசதி. குறிப்பாக 80-களைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காண்பிப்பது பெரும் சவால். அந்த இடத்தில் நயன் கரிஷ்மா என்ற புதுமுகத்தைக் கொண்டு வந்தோம். கோகுல் சாண்டல் பவுடர், ரோஸ் கலர் ரிப்பன், மருதாணி காயும் விரல்கள், காற்றில் உருளும் கொத்து முடி, பித்த வெடிப்பு பாதம், ஈரம் ததும்பும்
ஸ்பரிசங்கள்...
இப்படி நிறைய விஷயங்களை உன்னிப்பாகக் கொண்டு வந்தோம். வாகை சந்திரசேகர், அருள்தாஸ், கவிதாபாரதி இப்படி நிறைய பரிச்சய முகங்கள் படத்துக்குப் பக்க பலமாக இருந்தார்கள். செல்போன் கோபுரம், கேபிள் வயர்கள், போக்குவரத்து சத்தங்கள் இல்லாத பகுதிகளில்தான் படப்பிடிப்பு.
குடிக்கும் தண்ணீரைக்கூட சுமந்து செல்ல வேண்டும். போய்க் கொண்டே இருப்போம். திடீரென்று ஒரு இடம் வரும். அங்கே கேமிரா வைப்போம். அவர்கள் நடிப்பார்கள். இது தவிர மற்ற நடிகர்களின் உழைப்பும் அபாரம். கலை இயக்குநர் பாலசந்தர், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இருவரின் பங்களிப்பு அத்தனை ஒத்துழைப்பு. அனைவருக்கும் நன்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.