வங்கம் தந்த தங்கம்..

வங்கத்தில் மிகச் சிறிய குக்கிராமம் ஒன்றில் 1876-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-இல் 'சரத்பாபு' என்ற 'சரத் சந்திர சட்டர்ஜி' பிறந்தார். கிராமச் சூழ்நிலையிலேயே அவர் வளர்ந்து, கல்வி கற்றார்.
வங்கம் தந்த தங்கம்..
Published on
Updated on
2 min read

வங்கத்தில் மிகச் சிறிய குக்கிராமம் ஒன்றில் 1876-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-இல் 'சரத்பாபு' என்ற 'சரத் சந்திர சட்டர்ஜி' பிறந்தார். கிராமச் சூழ்நிலையிலேயே அவர் வளர்ந்து, கல்வி கற்றார்.

கிராமத்தில் மலிந்துகிடந்த வேற்றுமைகள், மக்களிடையே காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள், குறுகிய மனப்பான்மை, செல்வந்தர்களின் அடக்கியாளும் தன்மை, வாடி வதங்கிய மக்களின் அவல நிலை, கைம்பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், சூது, வாது, பலத்துடன் ஏழைகளின் உழைப்பில் உண்டு களித்திருந்த ஜமீன்தார்கள் புரிந்து வந்த அட்டகாசங்களுக்குத் தன் எழுத்துகளின் வாயிலாக உயிர் கொடுத்து, 'வங்கம் தந்த தங்கம்' என்ற பெயர் பெற்றார்.

அடிதளத்தில் வாழ்ந்த சாதாரண பொதுமக்களையே தமது கதாபாத்திரங்களாகப் படைத்தார். அவருடைய நாவல்கள், அந்தக் காலத்தில் வங்க மக்கள் மத்தியில் பெரிய சூறாவளியையே உருவாக்கியது.

எழுத்தைத் தொழிலாகக் கொண்டு செல்வத்துடனும் செல்வாக்குடனும் வாழ முடியும் என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் சரத் சந்திரர். எழுத்தாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் அளிக்கப்பட்ட அந்தக் காலத்தில் வசதியாக வாழத் தேவையான ஊதியம் அவருக்கு வழங்கப்பட்டது.

இவர் தனது இளம் வயதில் பெரும் பகுதியை பர்மாவில் ரங்கூன் நகரில் ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றிய அனுபவங்கள் அத்தனையும், அவரை பண்பட்ட எழுத்தாளராகப் பரிணமிக்க உதவின. பர்மாவைவிட்டு 1903-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்னர், ஒரு சிறுகதையை எழுதிய அவர் போட்டிக்கு அனுப்பிவைத்தார். அந்தக் கதை முதல் பரிசைப் பெற்றதுடன், சரத் சந்திரரைப் பிரபல எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்தியது.

இந்தக் கதை மூலம் அவர் இலக்கிய உலகில் பிரவேசித்தாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் சில சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தாரே தவிர மூழு மூச்சுடன் இலக்கியப் படைப்பில் ஈடுபடவில்லை.

1913-ஆம் ஆண்டு முதல் முழு நேரத்தையும் இலக்கியப் படைப்புகளில் ஈடுபடத் தொடங்கி, அவர் பல படைப்புகளைக் கொண்டு வந்தார். 'யமுனா', 'சாகித்யா', 'பாரத் வர்ஷத்' போன்ற பிரசித்தி பெற்ற பத்திரிகைகளில் இவருடைய அற்புதமான உயிர்த் துடிப்பான படைப்புகள் பிரசுரமாகி, வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்த பங்கிம் சந்திரர், ரவீந்திரர் ஆகியோரின் படைப்புகளில் ஊறித் திளைத்ததன் பயனாக ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சமுதாய வாழ்வைப் புதிய கோணத்தில் சரத் சந்திரர் பார்த்தார். அதை தனது சக்தி வாய்ந்த எழுத்தில் எழுத ஆரம்பித்தார்.

வங்க மக்களின் மனப் போராட்டங்கள், விருப்பு வெறுப்புகள், அபிலாஷைகள், ஆசாபாசங்கள், வாழ்க்கை முறை, சமுதாயத்தில் நிலவி வந்த ஊழல்கள் போன்றவை சரத் சந்திரருக்கு அத்துப்படி.

கதைக்குரிய கருவையும், கதாபாத்திரங்களையும் அவர் தேடி அலையாமல், தன்னுடைய அனுபவத்தைக் கொண்டே தேர்ந்தெடுத்தார். 1901-இல் வெளிவந்த 'தேவதாஸ்', 1913-இல் வெளிவந்த 'பிந்தூர் சைலே', 1914-இல் வெளிவந்த 'பிராஜ் பொகு', 1916-இல் வெளிவந்த 'பள்ளிசமாஜ்', 'ஸ்ரீகாந்தா' (முதல் பகுதி) ஆகியவை அமரத் தன்மை வாய்ந்தவையாகும்.

ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளில் உள்ள ஆழமான உணர்ச்சி பாவத்தையும், கலைப் பார்வையையும் சரத் சந்திரருடைய படைப்புகளில் காண முடியாது. ஆனால், வாசகர்களின் உள்ளத்தை உருக்கி, கண்ணீரை வரவழைக்கும் தன்மை அவருடைய படைப்புகளில் இருந்தது.

குடும்பம், வீடு, உறவினர்கள் என்ற பந்தங்களில் இருந்து விடுபட்டு தன்னிச்சையாக, சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துகொண்ட சரத் சந்திரர் எப்படி இவ்வளவு அற்புதமாக வங்காளிக் குடும்பச் சூழ்நிலைக் களமாகக் கொண்டு அமர இலக்கியங்களைப் படைத்தது அதிசயம்தான்.

சரத் சந்திரரின் படைப்புகளில் பெண் கதாபாத்திரங்கள் அளவற்ற துன்பமும், துயரமும் கொண்டவர்களாக இருந்தனர். சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளான ஒரு குற்றமும் புரியாத பெண்களைக் காணலாம். அவர்களுடைய துன்பங்களையெல்லாம் விதவிதமாக அவர் விளக்கினார்.

தம் கதாபாத்திரங்களாக வரும் தாய், குடும்பத் தலைவி, காதலி, விலைமாது ஆகிய ஒவ்வொரு பெண் பாத்திரத்தின் மென்மையை பெண் உள்ளத்தை, பொறுப்புணர்ச்சியை, இரக்கத் தன்மையை, படைத்துவிடும் ஆற்றல் அவரிடமிருந்தது.

அவருடைய இலக்கிய வாழ்வின் இரண்டாம் பகுதியில் உருவான படைப்புகளில் தாகூரின் 'கோரா' போன்ற கதைகளுக்குரிய அடிப்படையான கருவை எடுத்துகொண்டு, படைப்புகளை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றார்.

இதன் விளைவாக 'கிரகதாகா' (1919) என்ற நாவல் இரண்டாவது, மூன்றாவது பகுதிகளாக வெளிவந்த ஸ்ரீகாந்தா, நாட்டின் விடுதலைக்காக வங்கம், பர்மா, தூரக் கிழக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் நிலவி வந்த புரட்சி நடவடிக்கைகளைக் கொண்ட காதல் கதை 'பதேர்டாபி' (1926) ஆகிய நூல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. பல பதிப்புகளையும் கண்டது.

சரத் சந்திரருடைய கடைசி முழு நாவல் 1931-இல் வெளிவந்த 'சேஷ் பிரஷ்னா' முற்றிலும் வித்தியாசமான படைப்பாகும். அறிவுப்பூர்வமாகக் கதைக்குரிய கருவைத் தேர்ந்தெடுத்துப் படைக்கும் படைப்பாக அமைந்த இந்த நாவலில் காதல், திருமணம் ஆகியவை குறித்த பிரச்னைகளை அலசி ஆராய்ந்தது.

அவருடைய அற்புதமான அமரத்துவம் பெற்ற படைப்புகள் பல திரைக்காவியங்களாகவும் உருப் பெற்றன. இலக்கிய உலகில் இருந்து சரத் சந்திரர் மறைந்து 90 ஆண்டுகள் ஆகின்றன.

நாவலாசிரியர் என்ற வகையில் சரத் சந்திரர் மற்ற நாவலாசிரியர்களைவிட, வங்க மக்களிடையே பிரபலமானவர்களாக விளங்கினார். வங்கம் தந்த தங்கமாக இன்றும் போற்றப்படுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.