'கடலும் கிழவனும்' அளித்த கௌரவம்...

நோபல் பரிசு பெற்ற ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்' நாவலின் சிறப்பு.
'கடலும் கிழவனும்' அளித்த கௌரவம்...
Published on
Updated on
3 min read

ஏர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வே தனியொரு மனிதனாக, நாவலாசிரியராக, கலையழகும், நுணுக்கமும் நிரம்பிய இலக்கிய சிருஷ்டிகளின் கர்த்தாகவாக, கவிதை நிரம்பிய இலக்கியங்களைப் படைக்கும் பிரம்மாவாக மட்டுமல்லாமல், தானும் தனது சிருஷ்டிகளும் இணைந்துவிட்ட ஒரு பெரிய ஸ்தாபனமாகவே விளங்கினார். இவர் படைத்த 'கடலும் கிழவனும்' எனும் நாவல் நோபல் பரிசையும், புலிட்சர் விருதையும் பெற்றது.

ஹெமிங்வே 1899- ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி அமெரிக்காவில், இல்லியனாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒக்பார்க் என்கிற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிராமப்புற மருத்துவராக இருந்தார். இளம்வயதில் ஹெமிங்வே கல்வி பயிலவில்லை.

தனது பதினெட்டாம் வயதில், முதல் உலகப் போரில் பங்கேற்றார். 1918-இல் செஞ்சிலுவைச் சங்க ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்து, இத்தாலியப் போர்முனைக்குச் சென்றார். அங்கு யுத்த அனுபவங்களைப் பெற்றார். 1919-இல் இவர் அமெரிக்கா திஹரும்பினார்.

'எவே யு வில் நெவர் பி' என்ற இவரது முதல் நாவலின் கதாநாயகனான 'நிக்ஆடம்ஸின்' சிருஷ்டி ஹெமிங்வேயின் யுத்த அனுபவத்தில் உருவானதாகும்.

1920 முதல் 1926 வரை பத்திரிகைத் துறையில் இருந்தார். சிகாகோவில் தனது இலக்கியக் குருவான ஷெர்வுட் ஆண்டர்சன் என்பவரைச் சந்தித்து, தம்மை மேம்படுத்திக் கொண்டார். பின்னர், கிரீஸ்- துருக்கி இடையே நடைபெற்ற போரில் நிருபராகப் பணியாற்றினார். அப்போது நிறைய கதைகளை எழுதினார். இவரது ஆரம்பக் காலக் கதைகளில் 'யுத்தத்தின் வாசனை' வீசியது.

பின்னர், பாரிஸில் தங்கியபோது இலக்கியகர்த்தாவான ஜெட்ருட்ஸ்டெயின், எஸ்ரா பௌண்ட், போர்ட்ஸ்மாடாக்ஸ் போர்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்ற பிரபல எழுத்தாளர்களின் நட்பைப் பெற்றார். ஹெமிங்வேயின் வித்தியாசமான எழுத்தாற்றலுக்கு இவர்களே காரணமாகும்.

1923-இல் வெளியான இவரது 'மூன்று கதைகளும், பத்து கவிதைகளும்' என்ற நூல், 1924-இல் வெளியான 'நமது காலத்தில்' என்ற சிறுகதைத் தொகுதியும்தான் இவரது முதலிரண்டு வெளியீடுகளாகும். இரண்டும் சரியாக விற்பனையாகவில்லை.

1926-இல் இங்கிலாந்தில் வெளியான 'சூரியனும் உதயமாகிறான்' என்ற நாவல் இவருக்கு நல்ல வருவாயைத் தந்தது.

1932-இல் 'பிற்பகலில் நிகழ்ந்த மரணம்' எனும் நாவல் வெளிவந்தது. கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகிய நூல்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணம் 'ஜல்லிக்கட்டுச் சண்டை' குறித்து இந்த நூலில் விவரித்திருந்தார். பின்னர் வெளிவந்த 'டெத் இன் தி ஆப்டர்' நாலும் அதே பொருளை வைத்து எழுதியது. இதுவும் மிகப் பிரபலம் அடைந்தது.

பின்னர், 'பெண்ணின்றி ஆண்' எனும் சிறுகதைத் தொகுப்பு மிகச் சிறந்த நூலாகப் போற்றப்பட்டது.

1928 முதல் பத்து ஆண்டுகள் அமெரிக்காவிலேயே ஹெமிங்வே வசித்து வந்தார். அவர் தனது முப்பதாவது வயதில், 'யுத்த நிராகரிப்பு' என்ற நாவலை எழுதினார். இந்த நாவல் இவர் எழுதியவற்றுள் தலைசிறந்த நாவல் என்று பலரும் போற்றுகின்றனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் பயணம் செய்தபோது, ஹெமிங்வேயின் பயண நூலான 'ஆப்பிரிக்காவில் பச்சைமலைகள்' என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து, 1933-இல் இவருடைய சிறுகதைகள் கொண்டதான 'வென்றவனுக்கு ஒன்றுமில்லை' என்ற நாவல் வெளிவந்தது.

ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் 1936-இல் நடைபெற்றபோது, ஒரு நாவல் எழுதிவிட்டு குடியரசுவாதிகளை ஆதரிக்க ஸ்பெனுக்கு புறப்பட்டு சென்றார். இதனால் குடியரசுவாதிகளுக்குப் பெரும் நன்மைகள் ஏற்பட்டன. வட அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு நிருபராக இருந்தார். 'ஸ்பானிஷ் எர்த்' என்ற திரைப்படத்துக்கும் கதை எழுதினார். யுத்த ம் முடிந்தது.

1941-இல் சீன யுத்தத்தின்போது, நிருபராகப் பணியாற்றினார். 1944-இல் ஆங்கிலேய விமானப் படையுடன் நிருபராக உடன் சென்றார். இவரே பின்பு தனியாகவே ஒரு படையைத் தயாரித்துகொண்டு பாரீûஸ அடுத்த ரிட்ஸ் நகரை மீட்டார். இந்தச் சமயத்தில் இவர் கண்ட காட்சிகள் நல்ல நாவலுக்கு உதவிய உபகரணங்களாகும்.

பின்னர், பிரான்ஸிலும், ஜெர்மனியிலும் நடைபெற்ற யுத்தங்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார். இந்தச் சம்பவங்கள் பலவற்றையும் 'அக்ராஸ் தி ரிவர்' என்ற நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

ஹெமிங்வே 'மாகோம்பர் ஸ்டோரி', 'கில்லர்ஸ்', 'பார் ஹூம் தி பெல் டால்ஸ்', 'தி ஸ்நோஸ் ஆஃப் கிளிமாஞ்சாரோ' போன்ற தம்முடைய பிரசித்தி பெற்ற கதைகளைத் திரைப்படமாக எடுக்க ஹாலிவுட்டுக்கு அனுமதியை அளித்தார். இதனால் அவருக்கு நல்ல வருவாய் கிடைத்தது.

மற்றுமொரு அதிசயம் என்னவென்றால், தனது மரணத்தைப் பற்றியே அவர் இரண்டு கதைகளை எழுதினார். 'தி ஸ்நோஸ் ஆஃப் கிளிமாஞ்சாரோ அன்டு அதர் ஸ்டோரிஸ்' நூலில் மிகவும் இரங்கத்தக்க வகையிலும், 'அக்ராஸ் தி ரிவர் அண்டு இன்டு தி ட்ரீஸ்' என்கிற நாவலில் மிக வெளிப்படையாகவே அவர் வர்ணித்திருக்கிறார்.

இரண்டாவது நூல் 1950-இல் பிரசுமான

வுடன் பல லட்சக்கணக்கில் விற்பனையானது.

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'கடலும்

கிழவனும்' ஓர் உன்னதமான படைப்பு என்று

மக்களால் பாராட்டப்பெற்றதாகும். அதைப் பற்றிய சில செய்திகள்:

எர்னஸ்ட் ஹெமிங்வே இதற்கு முன்பு போரையும், காதலையும் பற்றியும், மனித வாழ்க்கையின் விநோத நிகழ்ச்சிகளையும் ஏராளமாக எழுதியிருக்கிறார். ஆனால், சிறப்பான கதையம்சம் எதுவுமில்லாமல், பெண்ணும், காதலும் இல்லாமல் ஒரு கதையை எழுதி அந்தக் கதை மற்ற கதைகளைக் காட்டிலும் பேரும் புகழும் பெற்றிருப்பது மிகப் பெரிய விஷயமாகும்.

இந்தக் கதையில் காதல் போட்டியோ, வில்லன்களோ, மாமி- நாத்திச் சண்டைகளோ இன்னும் நவீன நாவல்களுக்குரிய அம்சங்கள் என்று எதெல்லாம் சொல்லப்படுகிறதோ, அந்த விஷயங்களில் ஒன்று கூட இல்லை. தனது சக்திக்கு மீறிய போரில் ஒரு பெரிய மீனுடன் போரிட்டுத் தோல்வி கண்டும் தோல்வி காணாத ஒரு சாதாரண, சக்தி வாய்ந்த கிழவனான கலைஞனின் கதையே இது.

இந்தக் கடல் காவியமானது மனித இனத்தில் எல்லா வகுப்பினருக்கும் பொதுவான சிரத்தை ஏற்படக் கூடிய அமைப்பைப் பெற்றிருக்கிறது. இந்தக் கதையில் நாவலுக்குரிய புதுமையும், பிரயாண நூலுக்குரிய கவர்ச்சியும், வீரதீரச் செயல்கள் கூடிய கதைக்குரிய திடுக்கிடும் தன்மையும் இருக்கிறது.

வழக்கமான யுத்தமணமும், பயங்கர ரத்த வாடையும் வீசும் வகையில் நாவல் எழுதும் ஹெமிங்வேயா இந்த 'கடலும் கிழவனும்' நாவலை எழுதினார் என்று அறிஞர்கள் வியந்தனர். மேல்நாட்டு இலக்கியவாதிகளில் ஹெமிங்வேக்குத் தனியிடம் உண்டு.

இந்த நாவல் 1952-இல் வெளியாகி, பல பதிப்புகளைக் கண்டது. உலக மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் பெற்றது. 1954-இல் உலக இலக்கியங்களில் மிகவும் சிரந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நோபல் பரிசும், அமெரிக்காவின் சிறந்த இலக்கியத்துக்கு அளிக்கப்படும் புலிட்சர் விருதையும் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.