நிறைவான திரை அனுபவம் 2024!

தமிழ் சினிமா இந்த ஆண்டில் அதிகமான, தரமான திரைப்படைப்புகளை பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது.
நிறைவான திரை அனுபவம் 2024!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமா இந்த ஆண்டில் அதிகமான, தரமான திரைப்படைப்புகளை பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. குறிப்பாக, மனித உணர்வுகளை அதன் அன்பின் வெளிப்பாட்டில் கொண்டு வந்து சேர்த்தது. சாமானியக் கதை மாந்தர்களைப் பார்வையாளர்கள் அதிகமும் சந்தித்தனர்.

அவை புழங்கிய கதைக் களன்களும் அதற்குள் படைப்பாளிகள் கையாண்ட உள்ளடக்கமும் அவர்களின் மனதுக்கு நெருக்கமான, நிறைவான திரை அனுபவத்தைத் தந்தன. அந்த விதத்தில் இங்கே அந்தப் பட்டியலை பார்க்கலாம்.

லப்பர் பந்து

'உள்ளூர் சேவாக்' பூமாலை என்கிற 'கெத்து'க்கும் ('அட்டகத்தி' தினேஷ்) 'எமெர்ஜிங் பிளேயர்' அன்புவுக்கும் (ஹரிஷ் கல்யாண்) 'லப்பர் பந்து' கிரிக்கெட் டில் ஈகோ நெருப்பு பற்றிக்கொள்கிறது. மோதல் முற்றிவிட்டதற் குப் பிறகுதான், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான் இந்த கெத்து என்று அன்புவுக்குத் தெரியவருகிறது.

அன்புவின் காதலும் கெத்தின் கெத்தும் என்ன ஆனது என்ற சிம்பிள் ஒன்லைனைக் கொண்டு நிறைவான பொழுதுபோக்கு சினிமாவைப் படைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. திரைக்கதை நெடுகிலும் சூழ்நிலை நகைச்சுவை தெறித்து விழுந்தது.

முதன்மை மற்றும் துணைக் கதாபாத்திரங்களை எழுதிய விதமும் பெண் கதாபாத்திரங்களுக்குத் தந்திருந்த முக்கியத்துவமும் இயக்குநரை ஒரு தேர்ந்த திரைசொல்லியாக அடையாளம் காட்டின. காட்சிக்கு காட்சி பறந்தது சிக்ஸர் விசில்கள்.

வாழை

கடல்போல் விரிந்துகிடக்கும் வாழைத் தோட்டங்கள். விளைந்த தார்களை மிகக் குறைவானக் கூலிக்கு வலியுடன் சுமந்தபடி, நீண்ட தூரம் வரப்புகளில் நடந்து கரை நோக்கி வந்தும் வாழ்க்கையில் கரையேற முடியாத கூலித் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையை ரசனையான திரைமொழியில் பந்தி வைத்தது வாழை.

அனைவருக்குமான பள்ளிப் பருவப் பால்யத்தை நினைவூட்டும் சிறுவன் சிவனைந்தன், வயதுக்கு மீறிய சுமையாகத் தார் சுமக்கும் அவனது ஏழ்மையும் தனது கொடும்பசிக்கு ஒற்றை வாழைப்பழத்தைப் பறித்து உண்ண உரிமையில்லாமல் அவன் அடிபடும் அவலமும் அதற்காக வெட்கித் தலைகுனியும்படியான குற்றவுணர்வில் பார்வையாளர்களை ஆழ்த்தியதும் இயக்குநரின் படைப்பாளுமைக்குக் கிடைத்த வெற்றி.

அமரன்

மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமரணம் உருவாக்கிய அதிர்வுகள் செய்திகளோடு முடிந்துபோய்விட வில்லை என்பதை உணர்த்தியது ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதை ஆக்கம். முகுந்தின் தனிப்பட்டக் குடும்ப வாழ்க்கை, அவரது ராணுவ வாழ்க்கை ஆகிய இரண்டு அடுக்குகளில் அமைந்த அத்தியாயங்களுக்குள் படைக்கப்பட்டது அமரன்.

ராணுவத் தாக்குதல்கள், பிரச்னைக்குரிய நிலத்தின் பதற்றமான வாழ்க்கை ஆகியன காட்சியாக்கப்பட்ட விதம், முதன்மைத் துணை நடிகர்களின் உயிர்ப்புமிக்க நடிப்பு ஆகிய அம்சங்கள், தமிழுக்கு ஓர் அசலான ராணுவ சினிமாவைக் கொண்டுவந்து சேர்த்தன. அமரன் பார்த்து விட்டு வந்த அத்தனை கண்களிலும் கண்ணீர் குளம்.

மகாராஜா

ஒரு திரைக்கதையின் நிகழ்வுகளைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் 'நான் - லீனியர்' திரைக்கதையாக்கமே இப்படத்தை மகத்தான திரை அனுபவமாக மாற்றியது. தன் மகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளியைக் கண்டறிய முயலும் ஒரு சாமானியன், சாணக்கியத் தனமான முயற்சியால் எவ்வாறு வெற்றியடைகிறான் என்பதை, திரைக்கதையின் திடீர் விலகல்களை மீறிப் படபடப்புடன் பார்வையாளர்கள் பார்த்து வியந்தனர்.

பார்வையாளர்கள் பலரும் மனம் பதைபதைத்தனர். இதில் வரும் ஏழைத் தகப்பனை வாழ்வு நெடுகிலும் நாம் கண்டு வரலாம். அந்த விதத்தில் தன் சீரிய நடிப்பைத் தந்திருந்தார் விஜய்சேதுபதி. சீனாவில் மகாராஜா படத்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்ததில் ஆச்சரியம் கொண்டது தமிழ் சினிமா.

போகுமிடம் வெகு தூரமில்லை

தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு நடுவே, சக மனிதனின் பிரச்னைக்குத் தம்மால் தீர்வளிக்க முடியும் என்றால் அதைச் செய்யத் துணிவதுதான் மனிதம். அது ஒரு சிறு துரும்பை நகர்த்தும் செயலாகக்கூட இருக்கலாம்.

அதை, அவல நகைச்சுவை, உறவுகளுக்கு இடையிலான உணர்வுப் போராட்டம், காதலின் உன்னதம், கிராமியக் கலையின் அந்திமம் எனப் பல இழை களைத் தொட்டுச்செல்லும் தர்க்கப் பிழைகள் இல்லாத திரைக்கதையாக உருவாக்கி, நிலப்பரப்புகளின் வழியே கதை சொன்ன நேர்த்தியும் மானுட மீட்சிக்கான கலையாக சினிமாவை அணுகிய விதமும் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவுக்கு நல்வரவு கூற வைத்தன. விமல், கருணாஸின் நடிப்புக்கு இந்த சினிமாவுக்கு ஒரு மைல் கல்.

மெய்யழகன்

விட்டுத்தர மனமில்லாத ரத்த உறவுகளால், பிறந்து வளர்ந்த பூர்விக வீட்டை விட்டு, மாநகரத்துக்குக் குடிபெயர்ந்து போன அருள்மொழி, அந்த உறவுகளின் மீதான தார்மிகக் கோபத்தால் சிரிக்கவும் மறந்து போகிறான். உண்மையில் அவன் அந்த உறவுகளையும் நேசிப்பவன்தான். ஆனால், அவர்களை மன்னித்துக் கடந்து போய்விட வேண்டும் என்பதை, அருள்மொழியின் தூரத்து உறவினனான மெய்யழகன் அவனுக்குத் தனது நன்றியுணர்வின் வழியாக உணர்த்துகிறான்.

மறந்து போன பூர்விகத்தை, வரலாற்றை, உறவுகளையும் நண்பர்களையும் விட்டு விலகி வாழ்வதல்ல இந்த சின்னஞ்சிறிய வாழ்க்கை என்பதைத் தத்துவார்த்தமாக உணர்த்திய 'மெய்யழகன்' தமிழ் சினிமா ஆண்டாண்டு காலம் பேசப் போகும் 'கிளாசிக்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com