
ஜெய்ப்பூரைச் சேர்ந்த எழுபத்து வயதான தாரா சந்த் அகர்வால், இந்த ஆண்டு பட்டயக் கணக்காயர் தேர்வில் முதல் முயற்சியிலேயே எழுதி, தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இந்தியாவில் மிக்க கடினமான தேர்வுகளில் ஒன்றான "பட்டயக் கணக்காயர்' (சி.ஏ.) தேர்வை ஓய்வு எடுக்கும் வயதில் தாரா சந்த் ஏன் எழுத வேண்டிவந்தது குறித்து, அவரே கூறியது:
'நான் ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், வீட்டில் பேத்தி கணக்காயர் தேர்வுக்குப் படித்துகொண்டிருந்தாள். அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வேன்.
பிறகு டியூஷன் போலவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். போகப் போக பாடங்களில் மனம் ஒன்றிவிட, "தேர்வை நாமும் எழுதினால் என்ன‘ என்று தோன்றியது. அன்றிலிருந்து நானும் படிக்க ஆரம்பித்தேன். தேர்வு எழுதினேன். தேர்ச்சியும் பெற்றுள்ளேன்.
நான் தேர்வுக்குப் படிப்பதை அறிந்து, "இதெல்லாம் இந்த வயதில் தேவையா? என்ன செய்யப்போறே‘ என்று பலரும் கேட்டார்கள். நான் சிரித்துகொண்டே மௌனமாக இருந்துவிடுவேன். படிப்பதற்கும், தேர்வுகள் எழுதுவதற்கும் வயது ஒரு வரம்பு அல்ல; தடையும் அல்ல.
இளம் வயதில்தான் படிக்கணும்னு இல்லை. எப்போது வேணுமானாலும் அறிவைத் தேடிக் கொள்ளலாம். தேடத் தொடங்கலாம். ஆர்வம் இருக்கணும். அதுதான் முக்கியம். மற்றபடி வயது என்பது உண்மையில் ஒரு எண் மட்டுமே'' என்கிறார் தாரா சந்த் அகர்வால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.