ஓட்ஸூம், பார்லியும்..

ஓட்ஸ் போன்றே செல்வாக்கு பெற்றிருந்த ஒரு தானியம் பார்லி அரிசி.
ஓட்ஸூம்,  பார்லியும்..
Published on
Updated on
2 min read

ஓட்ஸ் போன்றே செல்வாக்கு பெற்றிருந்த ஒரு தானியம் பார்லி அரிசி. நோய்களுக்கு ஏற்ற உணவாக, எளிமையான உணவாக, நினைத்த நேரத்தில் சமைக்கும் ஒரு தானியமாக, அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் உணவுப்பொருளாக இருந்திருக்கிறது பார்லி. தற்போது பார்லியை பெருமளவில் கண்டுகொள்வது கிடையாது. ஆனால், ஓட்ஸின் விலை பார்லியைவிட அதிகம்.

ஓட்ஸை போலவே பார்லியிலும் கஞ்சி, சத்து மாவு, இட்லி, பொங்கல், தோசை, பணியாரம், பிரியாணி, சாலட் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

சுமார் 9 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டதோடு, உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருப்பது பார்லி.

1900 காலகட்டத்தில், கால்நடைகளின் தீவனமாக இருந்து, பிறகு உணவாக மாறி, இப்போது அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் காலை உணவாக மாறிவிட்டது ஓட்ஸ். இவ்விரண்டும் ஏறக்குறைய ஒரே வடிவத்திலும் வெண்மை கலந்த பழுப்பு நிறத்திலும், கொழகொழப்புத் தன்மையுடனும் இருந்தாலும், சத்துகளுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன.

சத்துகள்: கார்போஹைட்ரேட் பார்லியில் (69.6 கிராம்) சற்று அதிகமாக இருக்கும் நிலையில், ஓட்ஸில் குறைவு (62.8 கிராம்). கலோரி, புரதம், கொழுப்பும் பார்லியைவிட ஓட்ஸில் அதிகம். இதனால், உடல் எடை குறைப்புக்கும், நீரிழிவுக்கும், உயர் ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பார்லியையும் தாராளமாக எடுத்துகொள்ளலாம். இதனால் கலோரியும் கொழுப்பும் குறைவாகவே உடலுக்கும் கிடைக்கும்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை முறையே பார்லியைவிட (26 மி.கி., 215 மி.கி., 1.67 மி.கி.) ஓட்ஸில் (50 மி.கி., 380 மி.கி., 3.0 மி.கி.) அதிகம். இந்தக் குறிப்பிட்ட சத்துகள் குறைபாடு உள்ளவர்கள் அவ்வப்போது ஓட்ஸ் உணவுகளை எடுத்துகொள்ளலாம்.

நோய்களிலிருந்து உடலைக் காக்கும் திறன் பார்லியிலுள்ள 30 வகையான நுண்பொருள்களுக்கு இருக்கிறது. அவற்றுள் மிக முக்கியமான ஆறு பொருள்கள் பீட்டா குளுக்கான், பாலிபினால்கள், அரபினோஸிலான், பாலிஎஸ்டரால்ஸ், டோக்கோல்ஸ், ரெஸிஸ்டன்ட் ஸ்டார்ச் போன்றவையாகும்.

பாலிஷ் செய்யப்படாத தானியங்களில் நார்ச்சத்தும், வைட்டமின் பி சத்துகளும் அதிகம். அவை செரிமானத்தை சீராக்குவதுடன், குடல் நோய்களும் வராமல் உடலைக் காக்கின்றன. அவ்வகையில், கரையும் நார்ச்சத்தும், கரையாத நார்ச் சத்தும் ஓட்ஸைவிட பார்லியில் அதிகம்.

இந்த இரண்டு தானியங்களிலும் பீட்டா குளுக்கன் என்ற கரையும் நார்ச்சத்து இருந்தாலும், ஓட்ஸைவிட பார்லியில் சற்று அதிகமாகவே உள்ளது. அதிலும், பார்லியில் இருக்கும் பீட்டா குளுக்கன் நார்ச்சத்துக்கு ஒரு சிறப்பியல்பு உண்டு. அது, எந்த வகையில் சமைத்தாலும், அந்தச் சத்து அழியாமல், குறையாமல் பார்லியில் இணைந்திருப்பதுதான். அது மட்டுமல்லாமல், ஓட்ஸைவிட பார்லியில் இருக்கும் நார்ச்சத்துக்கு, கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் அதிகம்.

உடலிலிருந்து கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை ஓட்ஸைவிட பார்லிக்கு அதிகம் உண்டு. இதனால் கர்ப்பக் காலம், சிறுநீரக, இதய நோய்களில் கால், கை, முகத்தில் நீர் சேர்ந்து வீக்கம் இருப்பின், அதனை வெளியேற்றுவதற்கு பார்லி தண்ணீர் பயன்படுகிறது. உணவாக மட்டுமல்லாமல், குடல் நோய்கள், மூச்சிரைப்பு போன்றவற்றிற்கு தேன் கலந்த பார்லி தண்ணீர் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை எனப்படும் பார்லியில் (28) குறைவு. ஆனால், ஓட்ஸ்ஸில் அதிகம். அதனால், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பார்லியும் நல்லுணவுதான். ஆனால், பார்லி சிலருக்கு விரைவில் ரத்த சர்க்கரை அளவைக் குறைத்துவிடும் என்பதால், நீரிழிவு நோய்க்கு தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் பார்லியை தொடர்ச்சியாக சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு மேலும் குறைந்துவிடும்.

ஓட்ஸை முழுவதுமாக மென்று சாப்பிடவில்லை என்றால், குடலில் அடைத்துகொண்டு செரிமானச் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பவர்கள், தொண்டை- இரைப்பைப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஓட்ஸை தவிர்க்க வேண்டும். அதேபோல், சிறுகுடல், பெருங்குடல் அழற்சி நோய்கள், கோதுமையிலிருக்கும் குளுட்டன் என்ற பொருள் ஒவ்வாமை இருப்பவர்கள் பார்லியைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com