
புகழ்பெற்ற அமெரிக்க இலக்கியமான "கடல் ஓநாய்' புதிய கோணத்தில் செல்கிறது. மனித- மிருக குணங்களுக்கு இடையே வாழும் கப்பல் கேப்டனான ஒரு மனிதனின் போராட்டத்தை நாவலாக விவரிக்கிறார் ஜாக்லண்டன். ஆனால், இவரும் ஒரு கடற்கொள்ளையர் என்பதுதான் வியப்பு.
அமெரிக்க நாவலாசிரியரான ஜாக்லண்டன் (1876-1916) சான்பிரான்சிஸ்கோ-இல் 1876-ஆம் ஆண்டு ஜனவரி 12-இல் பிறந்தார். ஜோதிடரான அவரது தந்தை ஊர், ஊராக அலைந்து திரிந்தார். தாய் ஆன்மிகவாதி. குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் ஜாக்லண்டன் தனது 13-ஆம் வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டு, குடும்பத்தைக் காக்க வேண்டி கிடைத்த வேலைகளைச் செய்து, பொருள் ஈட்டினார்.
எப்படியெல்லாமோ உழைத்து கொஞ்சம் பொருள் சேர்த்தார். அதோடு, நண்பர்களிடம் கடன் வாங்கி, ஒரு படகை உரிமையாக்கிக் கொண்டு, சிப்பிக்கடல் கொள்ளைக்காரரானார். சட்டவிரோதமாக இரவில் சிப்பிகளைச் சேகரித்து, பகலில் விற்கும் முரட்டுக் கும்பல்தான் இந்தச் சிப்பிக் கடல் கொள்ளைக்காரர்கள்.
ஜாக்லண்டன் தனது 18-ஆவது வயதில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவில் சிறந்த சிப்பிக் கொள்ளையராகவும், பெருங்குடிகாரராகவும் விளங்கினார். ஜப்பானியக் கடல் பகுதியில் சீல் வேட்டைக்காரராகவும், சணல் ஆலைத் தொழிலாளியாகவும், ரயில் நிலையங்களில் வேலை தேடியும் பல மாதங்கள் கழித்திருக்கிறார்.
ஆனால், இவரிடம் நல்ல பழக்கம் ஒன்றும் இருந்தது. அதுதான் புத்தகங்கள் படிப்பது. எந்தவொரு சூழ்நிலையிலும் அவர் புத்தக வாசிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து புத்தகங்களை மிகவும் நேசித்தார். ஏராளமாகவும் படித்தார்.
பத்திரிகை ஒன்றில் அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டியில் பங்கேற்று, ஒரு அருமையான கதையை எழுதி அனுப்பினார். அந்தப் போட்டியில் இவருக்கு முதல் பரிசு கிடைத்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார். மேலும், படித்தால் சிறந்த எழுத்தாளராகலாம் என்ற எண்ணம் ஏற்படவே, ஒரு பள்ளியில் சேர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், ஒரு செமஸ்டர் முடிந்தவுடன் கல்லூரிப் படிப்பைக் கைவிட வேண்டியதாயிற்று.
வறுமையில் வாடும் குடும்பத்தைக் காப்பாற்ற அலாஸ்காவில் தங்கம் தேடிச் சென்றார். கொஞ்சம் பணம் சேர்த்தார். மீண்டும் ஓல்காண்ட் வந்து, கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். நிறைய கதைகள், கட்டுரைகள் என்று நாள்தோறும் 16 மணி முதல் 19 மணி நேரம் வரையில் எழுதினார். பத்திரிகைகளுக்கு அனுப்ப, அவை பிரசுரமாயின.
1899-இல் அட்லாண்டிக் மாதப் பத்திரிகையில் வெளிவந்த கதையால் இவரது புகழ் பரவியது. அந்தக் கதையை பலரும் விரும்பிப் படித்தனர். அமோகமாக விற்கவே, பல பதிப்புகளையும் கண்டது. புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற அந்தக் கதைதான் "தி சீ உல்ஃப்' (கடல் ஓநாய்) என்ற நவீனமாகும்.
1913-இல் உலகின் மிகப் பிரபலமான எழுத்தாளராக மதிக்கப்பட்டார் ஜாக்லண்டன்.
சாகசம் புரிவதில் முன்னே நிற்பவர் ஜாக்லண்டன். லண்டன் மாநகரில் குடிசைப் பகுதியில் வாழ்ந்தவர். கொரியாவில் நடைபெற்ற ரஷிய- ஜப்பானியப் போரில் பங்கேற்றவர். சிறிய படகின் மூலம் பசிபிக் கடலில் பயணித்து, சாதனைகளைப் புரிந்தவர். இப்படி ஜாக்லண்டன் பல அனுபவங்களைக் கொண்டிருந்தார். அவர் 1916-இல் மறைவுற்றார்.
"தி சீ உல்ஃப்' (கடல் ஓநாய்) கதை என்ன?
சான்பிரான்சிஸ்கோ விரிகுடா. கடும் பனிமூட்டத்தில் மார்டினஸ் எனும் படகு புறப்படுகிறது. அந்தப் பயணிகள் படகில் ஒரு இளைஞன் பயணிக்கிறான். அவன் ஒரு எழுத்தாளர். மூடுபனியில் படகு ஒரு நீராவிக் கப்பலோடு மோதி உடைந்து மூழ்கவே இளைஞன் நினைவிழக்கிறான். மீண்டும் அவன் கண்விழித்தபோது, ஒரு கப்பலில் இருப்பதை உணர்கிறான். அவனைக் காப்பாற்றியது அந்தக் கப்பலின் மாலுமிகள்தான்.
அந்தக் கப்பல் கேப்டன் ஒரு விசித்திரப் பேர்வழி. மகாமுரடன். அந்தக் கப்பலின் பணியாளர்கள் வெறுக்கும்போதும், கேப்டனுக்கு பயந்து பணிபுரிகின்றனர். அவன் பெயர்தான் உல்ஃப்.
இளைஞனுக்கு கப்பலில் இழிவான வேலைகள் தரப்படுகின்றன. குறிப்பாக, எடுபிடி வேலை. சமையலறையில் உதவியாளர். இந்த நேரத்தில் இளைஞனுக்கு விரோதிகளும், நண்பர்களும் உண்டாகின்றனர். கேப்டன் ஓநாய் குறித்த உண்மைநிலையை இளைஞன் அறிகிறான். கேப்டனின் மிருகக் குணத்துக்கும், மனிதத் தன்மைக்கும் அவனது உள்ளத்தில் நடக்கும் போராட்டத்துக்கும் காரணம் அவனது தனிமை என்பதை இளைஞன் அறிகின்றான்.
கேப்டனுக்கு அடிக்கடி பயங்கரமான தலைவலி தாக்குவதை இளைஞனுக்கு தெரியவருகிறது. அப்போது, கேப்டனுக்கு இளைஞன் நண்பனாகிறான். இந்த நேரத்தில் கப்பலில் இருந்து தப்பிச் செல்ல இளைஞனுக்கு மனம் வரவில்லை.
ஒருமுறை இன்னொரு கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலர் இந்தக் கப்பலுக்கு வருகின்றனர். அவர்களில் ஒரு அழகிய இளம்பெண்ணும் இருக்கிறாள். அவளும் இளைஞனும் காதலிக்கின்றனர். முரடன் உல்ஃப்போடு பல போராட்டங்கள். அந்தப் பயங்கரத் தலைவலி தாக்கியதில், உல்ஃப் இறக்கிறான். கடைசியில், காதலர்கள் தப்பிச் செல்கின்றனர்.
இவ்வாறு கதை செல்கிறது.
-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.