பொ.ஜெயச்சந்திரன்
அரசுப் பள்ளி மாணவிகளின் முன்னேற்றத்தைத் தாண்டி, அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விஷயங்களை முன்னெடுத்துள்ளார் சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் ம.நயினார்.
அவரிடம் பேசியபோது:
'திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட பத்மனேரி கிராமம்தான் எனது பூர்விகம்.
நா.மகாலிங்கத் தேவர்-பொன்னம்மாள் தம்பதியின் மூத்த மகன். நாங்கள் இயற்கை இடுபொருள்களை உற்பத்தி செய்து, மகசூல் பெறும் அனுபவத்தைத் தொடர்ச்சியாகப் பெற்று வருகிறோம்.
களக்காடைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் மறைந்த கே.எஸ்.மணி எனக்கு ஓவியத் துறையில் குருவாக இருந்தார்.
1997-இல் ஓவிய ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றேன். வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பின்னர் 2001-இல் முனைஞ்சிப் பட்டி குரு சங்கர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பணியாற்றினேன். 2006 ஜனவரி முதல் சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறேன்.
ஓவியப் போட்டிகளுக்கு மாணவிகளைத் தயார்படுத்தி அனுப்பி வைக்கிறேன். 'மகிழ்வித்து மகிழ்ச்சி கொள்' என்ற வாசகத்தின்படி, மாணவிகளின் பிறந்த நாளில் அவர்களை ஓவியமாக வரைந்து பிறந்த நாள் பரிசாக வழங்கி வருகிறேன்.
மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, காமராஜர், அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கணித மேதை ராமானுஜம், டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் உருவங்களை வரைந்துள்ளேன்.
லண்டன் பிபிசி நிறுவனத்தில் பணியாற்றியவருக்கு அனுப்பிய வாழ்த்து மடல், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த விஷ்ணுவை வரைந்து அவருக்கு அளித்த ஓவியம், கிராமத்துத் தம்பதியினருக்கு 25-ஆவது திருமண நாளை முன்னிட்டு அளித்த படம் போன்றவை பெரிதாகப் பேசப்பட்டது.
ஒருவரின் கை நாடியைத் தொட்டுப் பார்க்கும்பொழுது, அவருக்கு நோய் பாதிக்கப்பட்ட அல்லது வலியுள்ள இடங்களை என்னால் உணர முடியும். அதற்கேற்ப பாதிக்கப்பட்ட உடற்பகுதிக்குப் பயிற்சியை அளிப்பதால் குணமாக்கலாம். நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்.இ.எல். அறக்கட்டளையினர் இந்தப் பயிற்சியை அளிப்பதோடு, பயிற்சி பெறுவோர் கட்டணம் வாங்காமல், ஆங்காங்கே சேவையாற்றுகின்றனர். 2024 டிசம்பர் முதல் 2025 அக்டோபர் வரையில் சுமார் 400 பேருக்கு இலவச சிகிச்சையை அளித்திருக்கிறேன்.
எனது சேவைப் பணிகளுக்காக, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் போன்றவற்றின் விருதுகளையும், போத்தீஸ், ஸ்வர்ண மஹால் போன்ற நிறுவனங்களின் நல்லாசிரியர் விருதுகளையும் பெற்றுள்ளேன்'' என்கிறார் ம.நயினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.