'விவசாய பிரச்னைகளையும் விவசாயிகளின் பிரச்னைகளையும் அழுத்தமாகப் பேசும் படம் 'அரிசி'. முன்பெல்லாம் நெல்லை விளைவித்து, நம் தேவைக்கான உணவுக்கும், விதை நெல்லுக்கும் எடுத்துவைத்துவிட்டு மீதமான நெல்லைத்தான் விற்பனைக்குக் கொடுப்போம்.
இப்போதோ, எல்லா நெல்லையும் விற்றுவிட்டு, காசு கொடுத்துத்தான் அரிசியைக் கடையில் வாங்கி உண்கிறோம். கடையில் வாங்கும் அரிசி சத்தானது கிடையாது. அதை உண்பதால் எந்த ஆரோக்கியமும் ஏற்படப்போவதில்லை. இதுதான் இந்தப் படத்தின் லைன்.'' அழுத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார். இயக்குநர் சிங்கம் புலியிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இப்போது 'அரிசி' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
விவசாய பின்புலத்தில் மற்றொரு கதையா?
இல்லை. இதை நீங்கள் இப்படிச் சொல்லிக் கடந்து போகமுடியாது. எல்லாவற்றுக்கும் ஆதாரம் உணவு. இந்த உணவின் அடிப்படை விதைகள். அது இருந்தால்தான் உணவை உற்பத்தி செய்யலாம். உணவுக்கு எப்படி விதைகள் மையமாக இருக்கிறதோ, இந்த உயிர்கள் வாழ மையமாக இருக்கிறவன் விவசாயி.
மருத நிலத்தின் அரசன் இந்திரன். அவனது வாகனம் வெள்ளை யானை. அரிசியும் வெள்ளை நிறம்தான். இந்தக் கதை புனைவுக்குப் பின் இப்படிப் பல கதைகள் இருக்கின்றன. அது ஓர் உருவகம்தான். மற்றபடி விவசாயம்... விவசாயி... இதுதான் கதை.
இலக்குகளுடன் இந்தப் பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது , எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கனத்து ஞாபகங்கள் முளைவிடுகின்றன. அப்படி எனக்குள் உருவான ஓர் அம்சம்தான் இதன் கரு. விவசாயம்தான் பேசு பொருள். அன்பு, காதல், பரிவு கதையைச் சுற்றிவருகிறது.
விவசாய நிலம் என்பது கதையின் நெகிழ்வான பின்னணிதான். மனித உறவுகளும் இங்கே முதன்மையானது. விவசாயத்தின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் உணவை சார்ந்து இருக்கின்றன. விவசாயம் நீரைச் சார்ந்துள்ளது. விவசாய வாழ்வின் அன்பையும், வியர்வையையும், ஏமாற்றத்தையும், கண்ணீரையும், கோபத்தையும் சொல்லுவதே கதை.
வேறு எந்த அம்சத்தை கதை முன்னெடுக்கும்?
விவசாயம்தான் ஒரு தேசத்தின் ஆதாரம். அதை மெல்ல மெல்ல சாகடித்து விட்டால், என்ன ஆகும் இந்த தேசம்? இதற்கு யார் பொறுப்பு? வீரிய விதையும் ஒட்டு விதையும் தந்து விவசாயத்தைக் கீழே இழுப்பது யார்? பக்கத்து மாநிலமான கேரளத்தில் எல்லா அரசு குழுக்களிலும் விவசாயிக்கும் ஓர் இடம் உண்டு. விவசாயிகளின் ஆலோசனை கேட்கப்படுகிறது.
இங்கே ஒரு விவசாயியை எப்படி மதிக்கிறது அரசும் சமூகமும்? விவசாயத்தை மட்டமாகப் பார்க்கும் சமூகத்தில்தானே இருக்கிறோம். ஒரு சினிமாக்காரரோ, கிரிக்கெட் வீரரோ அல்ல... விவசாயிதான் இந்த நாட்டின் கதாநாயகன் என்பதை உணருகிற காலம் வந்து விட்டது. விவசாயத்தின் மீதான கடமையையும், கருணையையும் நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளையும் உணரச் செய்வதுதான் இன்றைய முதல் தேவை.
கதைக்காகச் சுற்றி வந்ததில் என்ன அறிந்தீர்கள்?
கதைக்காகச் சுற்ற வேண்டிய தேவையில்லை. ஏனென்றால், தஞ்சையின் பூர்விகக்குடி நான். தஞ்சை பெரு நகரத்து மகன். விவசாயின் பிள்ளை. அதனால் எந்தச் சான்றையும் தேடி அலைய வேண்டியதில்லை.
இலக்குகளுடன் சென்னைக்கு வந்த காலத்திலிருந்து விவசாயத்தின் தேவையை உணர்ந்தே இருக்கிறேன். ஒரு வாய் சாப்பாடு... அம்மாவை, அப்பாவை, ஊரை, காதலியை, இழந்ததை, தவறுகளை, லட்சியத்தை ... எதை எதையோ நினைவுபடுத்தியிருக்கிறது.
பசி ஏற்படுத்தும் அவமானத்தையும் வலியையும் விட வலியது வேறு இல்லை. பசியைத் தீர்ப்பது ஒரே கனிதான். ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம். பசியும் ஆசையும் உயிர்களை ஒரே பாதையில் துரத்திக் கொண்டே இருப்பது ஏன் என்ற கேள்விதான் அவ்வப்போது பிரதானமாக இருக்கும்.
நிலம் இழந்து துயரப் பரப்புகளில், பசியை உதிரம் பெருகப் பெருக அலைய விட்ட வரலாற்றை எந்த சாபம் தண்டிக்கப் போகிறது? முக்கியமான தேவை நீர் ஆதாரம்தான். விவசாயிக்கு வேறு எதுவுமே தேவையில்லை. தண்ணீர் தந்தால் போதும், அவன் தற்சார்பு மனிதனாக மாறி விடுவான். மேட்டூரிலிருந்து குறிப்பிட்ட பத்து கிலோ மீட்டர் ஒன்றுக்காவது தடுப்பணைகள் வேண்டும். இது டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கியமான கோரிக்கை.
கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் நடிகரானது எப்படி?
அரிசி என்பது வெறும் தானியம் மட்டுமே கிடையாது. அது மனித வாழ்வின் உயிர்நாடி. இப்படியொரு கதைக்குத் தொழில்முறை நடிகர்களை நடிக்க வைத்தால், படத்துக்கு நிச்சயம் சினிமாத்தன்மை வந்துவிடும். சமூகத்திற்குச் சொல்ல வந்த கருத்து சேராமல் போய்விடும். அதனால்தான், முத்தரனை நடிக்க வைத்தேன்.
அவருக்கும் நடிப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரை அணுகியபோது முதலில் மறுத்தவர், பின்பு கதையைக் கேட்டதும் ஒப்புக்கொண்டார். சமூகத்துக்கான கதை என்பதால்தான், ஆர்வம் காட்டி நடித்தார். அவர்தான் படத்தின் ஹீரோ. 'முத்தையன்' என்ற கதாபாத்திரத்தில் விவசாயியாகவே வாழ்ந்துள்ளார்.
முத்தரசன் 17 வயசிலிருந்து பொது வாழ்க்கையில இருக்கிறார். விவசாயிகளுக்காக இப்போதுவரை போராட்டக் களத்தில் நிற்கிறார். விவசாயிகளின் பிரச்னைகள், வலி, வேதனைகள் எல்லாம் அவருக்குத் தெரியும். அதனால், வசனங்களை எளிதாக உள்வாங்கி இயல்பாகப் பேசி நடித்தார். எதிர்பார்த்தது போலவே, காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. படத்தின் இன்னொரு பெரிய ஹீரோ இளையராஜா சார். அவர்தான் இசையமைத்துள்ளார். 'அரிசி' முத்தரசன் ஐயாவை எப்படி ஈர்த்ததோ, அப்படித்தான் இளையராஜா சாரையும் ஈர்த்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமா் மோடிக்காக மக்கள் வாக்களிக்கிறாா்கள்: தமிழக பாஜக துணைத் தலைவா் குஷ்பு சிறப்பு நோ்காணல்
பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்!
கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும்!
நல்ல களம் தேவை
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

