தமிழ்நாட்டில் கோடைவெயில் 'சுள்'ளென்று சுட்டெரித்து வருகிறது. அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக சரும பாதிப்பு. கடும் வெயிலில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா தரும் சூப்பர் டிப்ஸ் இங்கே:
சூரியனிலிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் நம் சருமத்தில் படும்போது சருமம் பாதிப்படைகிறது. சருமத்தைப் பராமரிக்க இயற்கையாகவே நிறைய வழிகள் உள்ளன. நாம் உட்கொள்ளும் உணவு, சருமத்தின் மீது தடவிக்கொள்ளும் களிம்புகள் போன்றவற்றின் மூலம் சருமத்தை பாதிப்படையாமல் காத்துக்கொள்ள முடியும்.
கோடைக் காலத்தில் சருமத்தின் ஈரப்பதம் (ஹைட்ரேஷன்) குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாள்தோறும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீராகவும், மீதமுள்ள ஒரு லிட்டரை இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பானங்களாகவும் குடிப்பது நல்லது. இந்த பானங்களில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் நிறைய உள்ளன. அவ்வப்போது தண்ணீரை மிடறு மிடறாகக் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உதடுகள் வறண்டு போகாமல் இருக்கும்.
கோடைக் காலத்தில் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நீண்ட நேரம் வெயிலில் செல்லும்போது வியர்வை காரணமாக தலைமுடி கொட்டலாம். நீச்சல் பயிற்சிக்குச் செல்பவர்களுக்கு, குளோரின் அதிகமுள்ள நீரில் நீந்துவதால் தலைமுடி பாதிப்படையும். தலைமுடிக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்க வேண்டும். இதற்கு, வாரத்துக்கு இரண்டு நாள்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்து, சிகைக்காய் அல்லது மைல்ட் ஷாம்பூ தேய்த்துக் குளிப்பது நல்லது. நம் முன்னோர் இந்த முறையைத்தான் கடைப்பிடித்து வந்தார்கள்.
இரவில் நான்கைந்து தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் நன்கு அரைத்து, அத்துடன் சிறிதளவு மோர் கலந்து தலையில் தடவி, பத்து நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு தலையை அலசினால் போதும். இப்படிச் செய்தால், தலைப்பகுதி குளிர்ச்சியடையும். தலைமுடியும் பளபளப்பாக இருக்கும். சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து தலைப்பகுதியின் சருமத்தில்படும்படி தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து அலசலாம்.
வெயிலில் நீண்ட நேரம் அலைந்துவிட்டு வரும்போதோ அல்லது விளையாடிவிட்டு வரும்போதோ தலைமுடியில் வியர்வை படிந்து, அழுக்குகள் சேரவும், பொடுகு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பொடுகைப் போக்க, ஆன்ட்டி டேன்ட்ரப் ஷாம்பூவை தேய்த்துக் குளித்து, முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகருடன், ஏழு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்துக் கலந்து தலையில் படும்படி தேய்த்து சில நிமிடங்கள் ஊறவைத்து, மென்மையான ஷாம்பூ தேய்த்துக் குளித்து வருவது பொடுகை நீக்க உதவும்.
அவகேடா (பட்டர் ப்ரூட்) பழத்திலுள்ள சதைப்பற்றை மட்டும் எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து, அந்த விழுதை முகத்துக்கும் தலைக்கும் உபயோகிப்பது மிகவும் நல்லது. வறண்ட சருமம் உள்ளவர்கள், அவகேடா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைத்து முகத்துக்கு மாஸ்க் போல போட்டு, சிறிது நேரம் கழித்து கழுவலாம். எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்கள், அவகேடா பழத்தின் சதைப்பற்றுடன், சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, கழுவலாம். இவை சருமத்துக்கு நல்ல போஷாக்கைத் தரக்கூடியவை.
கோடைக் காலத்தில் நிறைய காய்கறிகள், நீர்ச்சத்து நிறைந்த பழங்களைச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளையும், காரம் அதிகமாகவுள்ள உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
இந்த சீசனில் க்ரீன் டீ குடிப்பது மிகவும் நல்லது. க்ரீன் டீயில் சிறிதளவு பஞ்சை நனைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவலாம். இப்படிச் செய்து வருவது சருமத்துக்குப் புத்துணர்ச்சி தரும்.
கடலை மாவு, அரிசி மாவு, பயத்தம் பருப்பு மாவு போன்றவற்றில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, அத்துடன் சிறிதளவு முல்தானி மெட்டி, சிறிதளவு ரோஸ் வாட்டர், நான்கைந்து சொட்டு கிளிசரின் சேர்த்துக் குழைத்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி கால் மணி நேரம் ஊறவிடவும். பிறகு சிறிதளவு தண்ணீர் தொட்டு நன்றாக மசாஜ் செய்துவிட்டுக் கழுவவும்.
எல்லாவிதமான சருமத்துக்கும் ஏற்ற சிகிச்சை இது. இதைச் செய்துவந்தால், முகப்பருக்கள் வராமல் இருக்கும்.
வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடவும். தேவைப்படும்போது வெளியே எடுத்து, சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, கால் மணிநேரம் ஊறவிட்டு பிறகு கழுவவும். இப்படிச் செய்யும்போது, முகத்திலுள்ள கறுப்பு மறையும்.
முல்தானி மெட்டி, சந்தனப் பவுடர் இரண்டையும் சிறிதளவு எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். கால் மணி நேரம் கழித்து, சுத்தமான தண்ணீரால் முகத்தை அலசவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி சாறு எடுக்கவும். அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பிறகு சுத்தமான தண்ணீரால் கழுவவும். வெயிலில் அலைவதால் முகம் மற்றும் சருமத்தில் ஏற்படும் கருமையைப் போக்கும் எளிய சிகிச்சை இவை.
கோடைக் காலத்தில் முகத்துக்கும் உடம்புக்கும் சோப் உபயோகிப்பதற்குப் பதிலாக, ஃபேஸ்வாஷ் மற்றும் பாடிவாஷ் உபயோகிக்கலாம். சிறிதளவு எடுத்து உபயோகித்தால் போதுமானது. இதனால் உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், நல்ல மணமாகவும் இருக்கும். கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை அணிவது, வியர்வை விரைவில் உறிஞ்ச வழிவகுக்கும்.
பகல் நேரத்தில் வெயிலில் சிறிது நேரம் அலைந்துவிட்டு வந்தால்கூட, முகமும், சருமமும் கறுத்துப் போகும். இதைத் தடுக்க, அழகு நிலையங்களில் டீ டேன் தெரபி சிகிச்சை அளிக்கிறார்கள். வெள்ளரிக்காய், சந்தனம், ரோஸ் வாட்டர் சேர்ந்த கலவையை, பாதிக்கப்பட்ட இடம் முழுவதும் தடவி இந்த தெரபி செய்யப்படுகிறது. தேன், பால் சேர்ந்த கலவையை தடவியும் டீ டேன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரவர் சருமத்துக்குப் பொருத்தமான தெரபியை தேர்ந்தெடுத்துச் செய்து கொள்ளும்போது, வெயிலால் கறுத்துப் போன சருமத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரமுடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டுக் குறிப்புகள்
சமையல் டிப்ஸ்!
மஞ்சள் மகத்துவம் தெரியுமா?

சருமம் பொலிவு பெற... பெண்களுக்கு சில டிப்ஸ்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


