பதினாறு வயது சிறார் பார்வையில் உலகம் வியப்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. அத்துடன் பருவமும் சேரும்போது, அவர்கள் காண்பதும், அவர்களது கவனத்தைக் கொள்ளை கொள்வதும் உணர்வின் நீட்சியாக உள்ளன.
வலைதளத்தில் கற்றுக் கொள்ளவும், பார்த்து அறிவை விரிவு செய்யவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள், வளர் இளம்பருவத்து சிறார்களை காந்தம்போல ஈர்க்கின்றன. 'சிறார் கவனம் சிதறி, வேறு பாதையில் சென்றுவிடக்கூடாது' என்று பெற்றோர்கள் பதறு
கிறார்கள். குறிப்பாக, அவர்கள் சமூக ஊடகங்களைக் கண்டு அச்சப்படுகின்றனர். ஆபாசங்களும், தவறான நட்புகளும் மிக எளிதில் கிடைக்கின்றன.
ஆஸ்திரேலியா உலகிலேயே முதல்நாடாக, 16 வயதுக்கு குறைந்த சிறார்கள் சமூக ஊடகங்களில் செயல்படுவதற்குத் தடை விதித்தது. இந்தோனேசியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளும் இதுபோன்ற உத்தரவை அமல்படுத்தின. இங்கிலாந்து, நார்வே நாடுகளிலும் மசோதா நிறைவேறியுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ் போன்ற நாடுகள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியா ஏன் தடை விதித்தது?
ஆஸ்திரேலியாவில் 2025-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், 10 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 90 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் செயல்படுகிறார்கள் என்று தெரியவந்தது. இவர்களில் 10 பேரில் 7 பேர் ஆபத்தான, ஆபாசம் மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளைக் கொண்ட வீடியோக்களைப் பார்த்து வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.
இந்த 7 பேரில் ஒரு சிறுவர், அவரைவிட சில ஆண்டுகள் மூத்தவராக இருக்கும் நபரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருப்பதும், அதற்குக் காரணம் சமூக ஊடகத்தின் மூலம் ஏற்பட்ட தொடர்பு என்பதும் தெரியவந்தது.
பல சிறுவர்கள் தூக்கமின்மை, படிப்பில் ஆர்வமின்மை, வீட்டில் கடும் கோபம், வன்முறையை வெளிப்படுத்துவது, உணவுப் பழக்கத்தில் பெரும் பின்னடைவு எனப் பல பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது. சில சிறார்களின் தற்கொலையைத் தூண்டுவதாகவும் இந்த சமூக ஊடகத் தொடர்புகள் அமைந்திருந்தன.
இதையடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்ஷாட், திரெட், டிக்டாக், எக்ஸ், யூட்யூப், ரெட்டிட் , கிக், மற்றும் டிவிச் ஆகிய சமூக ஊடகங்கள் 16 வயது குறைந்த சிறார்களுக்கு இடம் தரக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறினால் சிறுவர்களோ அல்லது பெற்றோரோ தண்டிக்கப்பட மாட்டார்கள். ஆனால், சிறுவர்களின் வயதைச் சரிபார்க்கத் தவறிய ஊடக நிறுவனங்களுக்கு 45.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும்.
ஆன்லைன் மூலம் சமூக ஊடகங்கள், பலருடன் கலந்துரையாடும் சமூக வலைதளங்கள், மற்ற நபர்களுடன் பேசுவதை அனுமதிக்கும் வலைதளங்கள், ஒருவர் வீடியோ அல்லது கருத்தை பதிவிட அனுமதிக்கும் ஊடகங்கள் ஆகியவற்றை வகைப்படுத்தி, இந்த வலைதளங்களில் 16 வயது குறைந்தவர்கள் செயல்பட அனுமதியில்லை என்று வரையறுத்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் சிறுவர்களின் கல்வி மற்றும் கற்றல் நடைமுறைகள் பாதிக்காத வகையில் இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது.
சில நாடுகளில் பள்ளி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தத் தடை உள்ளது. சில நாடுகளில் சில பதிவுகளைக் காண்பதற்கு வயது நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவை போலியான உள்ளீடுகள் மூலம் மீறப்படுகின்றன என்பதே உண்மை.
இந்தியாவில் இதுகுறித்து கர்நாடகம், ஆந்திரப்பிரதேச அரசுகள் தடை கொண்டுவருவதாக அறிவித்தன. இந்த நிலையில், இந்தத் தடை தேவையா? அவசியம்தானா? அல்லது பெற்றோர்கள் தேவையில்லாமல் கவலைப்படுகிறார்கள் என்று சொல்வதா? அதன்படி, சிலரிடம் கருத்துக் கேட்டோம்.
திருச்சி மாவட்டம், லால்குடி அரசுக் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் டி. அசோக்குமார்:
கரோனா காலத்தில் கல்வியானது இணையவழியில்தான் நடைபெற்றது. 'சைபர் புல்லிங்' எனப்படும் இணையவழி துன்புறுத்தல், சமூக ஒப்பீடுகளால் மன அழுத்தம், நேர விரயம் ஏற்படுவதுடன், உடற்பயிற்சிக்கும் வாய்ப்பில்லாமல் போகும். நேரடி சமூக உறவுகள் குறைந்து, தனிமை உணர்வு அதிகரிக்கும்.
அன்னப்பறவையைப் போன்று நாம்தான் நமக்கான நல்லதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலை. பேராசிரியர் வெ.சுகுமாரன்:
சிறு வயதிலேயே மின்னணுச் சாதனங்களில் இணையவழிக் கற்றல் முறை என்பது ஒழுங்கற்ற, கண்காணிப்பற்ற, நெறிமுறை தவறிய கற்றல் முறையாக அமைந்தால், அது குழந்தைகளிடம் பல பாதிப்புகளை உருவாக்கும். அவர்களுடைய கற்கும் மனநிலையைச் சிதைக்கும். ஆசிரியர், பெற்றோருடன் மட்டுமல்லாமல் நண்பர்களிடமும் கூட பரஸ்பர உறவு பாதித்து, பெரும் இடைவெளியை ஏற்படுத்தும். எனவே, கண்காணிப்பு, கட்டுப்பாட்டுடன் இணையவழிக் கல்வி பயிற்றுவிக்கலாம்.
புதுக்கோட்டை அரசு மனநல மருத்துவத் திட்ட மருத்துவ அலுவலர் ரெ. கார்த்திக் தெய்வநாயகம்:
மனிதன் ஒரு சமூக விலங்கு. பிறருடன் தொடர்பு கொண்டு கலந்து உறவாடி பழக்க வழக்கங்களைப் பகிர்ந்து கொள்பவன். இப்போதுள்ள தொடர்பியல் ஊடகமாக வளர்ந்திருக்கும் சமூக ஊடகங்களில் இருந்து யாரையும் வெளியேற்ற, தடுக்க முடியாது. இணையதள அடிமைகளாகவோ, சமூக ஊடக அடிமைகளாகவோ மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளலாமே தவிர, எதையும் தடுக்கக் கூடாது.
பெரம்பலூரைச் சேர்ந்த சிறுவனின் தந்தை இளவழகன்:
அதிநவீன கைப்பேசி பயன்பாடு, விளையாட்டு, கேளிக்கைச் செயல்களை சிறார்கள் பயன்படுத்தும்போது பெற்றோரின் ஒப்பு
தலைக் கட்டாயமாக்க வேண்டும். முழுமையாக சிறுவர்களை விலக்கி வைப்பது சாத்தியமில்லை. யாரையும் எதையும் விலக்கி வைத்தல் இயலாது.
ப.தேவேந்திரன், சமூக ஆர்வலர், திண்டுக்கல்:
மழலையர் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்குக்கூட வீட்டுப் பாடங்கள் கைப்பேசி வழியாகவே அனுப்பப்படுகின்றன. கைப்பேசியின் தேவை அடுத்தகட்டமாக சமூக ஊடகங்களை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்கிறது. சமூக ஊடகங்களை எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் பயன்
படுத்துவதற்கான புரிதலை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஜி.சங்கர், மின் பொறியாளர், திருநெல்வேலி:
சமூக ஊடகங்கள் வரும் விளையாட்டுகளால் ஏராளமான சிறுவர்கள், பெற்றோரின் பணத்தை வீணடிப்பதோடு பல நேரங்களில் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். பெற்றோர் - குழந்தைகள் இடையிலான குடும்ப உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஒரே வீட்டில் ஐந்து பேர் இருந்தாலும் கூட சமூக வலைதளங்களால் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது என்பது அரிதாகி விட்டது.
சி.பிரபாவதி, ஓய்வு பெற்ற ஆசிரியர், தூத்துக்குடி:
குழந்தைகளின் கையில் விளையாட்டுப் பொம்மைகளுக்குப் பதிலாக அலைப்பேசிதான் குழந்தையின் தோழனாக, தோழியாக மாறிக் கொண்டிருக்கும் அவல நிலையே இப்போது தொடர்கிறது. ஒரு வாய் உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தையும்கூட அலைப்பேசியில் வரும் பொம்மை படக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு ஒரு கிண்ணம் நிறைய உணவை விழுங்குகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அளவில் சிறுவர் குற்றங்களைக் காண இயலாது.
திருத்தணி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அ.கலைநேசன்:
தகவல் பரிமாற்ற கருவியான கைப்பேசியே குழந்தைக்கு நேராக தகவல் சொல்வதைவிட நம் வழியே சிறந்தது. சிரித்துச் சொல்வோம். ஆடிப்பாடி சிரிக்க வைப்போம். இதற்குத் தடையாய் நிற்கிறது கைப்பேசி. இயற்கையை நேசிக்கட்டும். பிள்ளைகள் அதில் இருந்து ஏராளம் கற்பார்கள். அரிய படைப்புகளைத் தருவார்கள். இதற்குத் தடை செய்ய திட்டம் போட்டாலும் தவறில்லை.
தொகுப்பு:
ஆர். முருகன், வி.என் ராகவன், சா.ஜெயப்பிரகாஷ், கே.தர்மராஜ், ஆ.நங்கையார்மணி, ஏ.வி.பெருமாள், எஸ்.சபேஷ்.

கவனம் சிதைந்தால் கனவுகள் சிதறும்!
நீட் தேர்வில் மகாராஷ்டிர மாநிலத்தில் முதலிடம் பெற்றவர் ஷிரவாணி குடாலே. இவர் ஒரு கிராமத்தில் ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மலேகானில் உள்ள சாரதாபாய் பவார் வித்யா நிகேதனில் மேல்நிலைப் படிப்பைத் தொடர்ந்தார். மாநில அளவில் முதலிடத்திலும், இந்திய தர வரிசையில் 5 -வது இடத்திலும் அதிக மதிப்பெண் பெற்ற பெண்களில் முதல் பெண்ணாக இருக்கும் ஷிரவாணி ஒரு பேட்டியில், 'நான் கடந்த ஓராண்டாக சமூக ஊடகங்களில் செயல்படவில்லை. பின்தொடரவில்லை. எனது இன்ஸ்டா
கிராம் பக்கத்தை முடக்கி வைத்தேன். இதையெல்லாம் நாம் படிப்புக்காக தியாகம் செய்ததாக அர்த்தமில்லை. என் கவனம் முழுக்க நீட்தேர்வில் ஈடுபடுவதற்காக இதைச் செய்தேன். அது பலன் தந்தது' என்று கூறியுள்ளார். ரத்தினச் சுருக்கமாக அவர் சொல்வது இதுதான். கவனம் சிதைந்தால், கனவுகள் சிதையும்!

உளவியல் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன ?
வளரும் பருவத்தில் உள்ள சிறார்களுக்கு சமூக வலைதளங்களை தடை செய்வது ஒருபுறம் இருக்க, செல்போன் திரைநேரத்தைக் குறைக்க வேண்டியது மிகமிக அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். குழந்தைகள் திரைநேரம் (ஸ்கிரீன் டைம்) குறையும்போது குழந்தைகளின் உடல், மனம், உணர்வு நலம் மேம்
படுகிறது. குழந்தைகள் விளையாட்டுக்கு இயல்பாகவே ஆர்வம் உள்ளவர்கள். விளையாட்டின் மூலம் உடல் நலம் பெறுகிறது. அவர்கள் அனைவருடனும் பழகுவதால், மனம் மற்றும் உணர்வு ரீதியாக சமூகத்தில் கலந்து, பழகும் ஆற்றல் மேம்படுகிறது. குழந்தை-பெற்றோர் உறவிலும் மாற்றம் ஏற்படுகிறது.
அதிகநேரத்தை செல்போனில் செலவிடும் குழந்தைகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஆசைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். மனஉணர்வுகளை கையாளும் திறன் இல்லாதவர்களாக மாறுகிறார்கள். மேலும், செல்போன் திரையில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு பார்வைத் திறன் பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும் கவனக் குறைவு மற்றும் அதீத செயல்பாடு நோய்க்கு ஆளாகிறார்கள்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும்போது, குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்தும்படி நேரம் நிர்ணயிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்குறள் தம்பதி!

இ20 எரிபொருள் பற்றி விரிவான பிரசாரம் மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு!

காணொலி உலகம்!

சமூக ஊடகங்களில் அவதூறு அம்புகள்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



