இந்தியாவின் நீர்வள மனிதர்

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து எண்ணற்ற கிராமங்களை உயிர்ப்பிப்பது என்பதும் எளிதான செயல் அல்ல.
இந்தியாவின் நீர்வள மனிதர்
Updated on
2 min read

வற்றிய அல்லது நீர்வரத்துக் குறைந்த ஆறுகளைப் புத்துயிர் பெறச் செய்வதும், கிணற்று நீர் ஊற்றுகளை வீரியம் கொள்ளச் செய்வதும், அதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து எண்ணற்ற கிராமங்களை உயிர்ப்பிப்பது என்பதும் எளிதான செயல் அல்ல. தண்ணீர் இல்லை என்றால் மனித உயிர்கள் இல்லை; இந்த உலகம் இல்லை. அதனால்தான் 'நீரின்றி அமையாது உலகு' என்று முன்னோர்கள் சொன்னார்கள்.

சமூகத்திற்கு எல்லாமாக இருக்கும் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் எப்படி ஒரு கிராமத்தை, ஒரு ஊராட்சியை, ஒரு மாவட்டத்தை மாற்றும் என்பதை 'இந்தியாவின் நீர்வள மனிதர்' என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் சொல்கிறார்:

'இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில், பல தசாப்தங்களாக வற்றிப்போயிருந்த ஆறுகள் மீண்டும் பாயத் தொடங்கியுள்ளன. தூர்ந்து போனதால் நீண்ட காலமாகக் கைவிடப்பட்டிருந்த கிணறுகள் நீரால் நிரம்பி வழிகின்றன. ஒரு காலத்தில் தரிசாகக் கிடந்த வயல்களில் இப்போது பயிர்கள் செழித்து வளர்கின்றன. கிராம மக்கள் மீண்டும் நம்பிக்கையை மீளப் பெற்றுள்ளார்கள்.

பாரம்பரிய முறையில் மழைநீர் சேகரிப்பு நுட்பங்களை மீட்டெடுப்பது, சிறிய தடுப்பணைகளைக் கட்டுவது மூலம் இந்த மாற்றம் அடையப்பெற்றோம். இதனால் முழு கிராமங்களும் புத்துயிர் பெற்றுள்ளன; வாழ்வாதாரங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

எனது சொந்த ஊர் உத்தரபிரதேசம் மீரட் அருகே உள்ள தெளலா கிராமம். நான் படித்தது என்னவோ ஆயுர்வேத மருத்துவம்தான். கிராமப்புற இந்தியாவுக்கு நீர்ப் பற்றாக்குறை மிகப் பெரிய சவாலாக உள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன். தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை தீர்ந்தால் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும். அதனால் கிராமம் முன்னேறும் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த திசையில் பயணிக்கத் தொடங்கினேன். நீர்வளம், பயிர்வகைகள் குறித்த தகவல்களைத் திரட்டினேன்.

வறட்சியினால் அதிகமாகப் பாதிக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் என் களப்பணியைத் தொடங்கினேன். ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் சுரக்காத கிணறுகளை மீட்டெடுப்பதற்காக 'தருண் பாரத் சங்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

மழைநீரைச் சேகரித்து, நிலத்தடி நீரை நிரப்பி, சிறிய நீரோடைகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் 'ஜோஹத்' எனப்படும் எளிய மண் தடுப்பணைகளைக் கட்டினோம். இந்தப் பணிகளில் அந்தந்தக் கிராம மக்களின் பங்களிப்பையும் கேட்டுப் பெற்றேன். ஒரு காலத்தில் வறண்டு கிடந்த, கை விடப்பட்ட 'அர்வாரி' மற்றும் 'ரூபரெல்' போன்ற ஆறுகள், எங்கள் தொடர்ச்சியான புதுப்பிக்கும் முயற்சிகளால் மீண்டும் உயிர்பெற்று பாயத் தொடங்கின.

எங்கள் முயற்சிக்கு சர்வதேச அங்கீகாரங்கள், பாராட்டுகள் கிடைத்தன. நீர் நிலைகளைப் புதுப்பிக்கும் எங்கள் முயற்சிக்காக 'ராமன் மகசேசே' விருது, ஸ்டாக்ஹோம் நீர் பரிசு வழங்கப்பட்டன. எனது அமைப்பின் பின்னணியில் இருந்து கிராம மக்களை முடுக்கிவிட்டு அவர்களையும் பங்கேற்கச் செய்ததில் நாங்கள் வெற்றி பெற்றோம். 'இனி கிராம மக்கள் நீர் நிலைகளை பாதுகாத்துக் கொள்வார்கள்' என்ற நம்பிக்கை வரும்வரையில் கிராம மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.

கிராம மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தன்னார்வலர்களுக்கு இந்த நீர் கட்டமைப்புகளைக் கட்டவும், பராமரிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தந்தக் கிராம மக்களை இயற்கைச் செல்வங்களைப் பாதுகாக்கும் பணியில் நேரடியாக ஈடுபடுத்துவதன் மூலம், திட்டங்களின் நீண்ட கால செயல்பாடுகள் நடந்தே தீரும். கிராம மக்கள் பொறுப்புகளை உணர்ந்து கொண்டால் , அந்தப் பகுதியில் நீர்வளத்துக்குக் குறைவு ஏற்படாது.

தருண் பாரத் சங் பணிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டெடுத்துள்ளன. ஆறுகளைப் புனரமைத்ததன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்குத் தீவனம் கிடைத்துள்ளது. வேலை, வருமானம் தேடி மக்கள் இடம் பெயர்வது குறைந்துள்ளது. உணவுப் பாதுகாப்பு உறுதி பெற்றுள்ளது. கிராம மக்களுக்கு இப்போது பாசனத்துக்கும் வீட்டு உபயோகத்துக்கும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது.

ஒரு காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை என்பது கிராமங்களில் சாபமாக இருந்து வந்தது. எங்களது முயற்சிகளில் அதிகாரத்துவத் தடைகள், சுயநல சக்திகளின் எதிர்ப்புகள் குறுக்கிட்டன. கடுமையான வறட்சி பெரிய சவாலாக எங்களை எதிர்த்து நின்றன. இருப்பினும், நாங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு தளராமல் எதிர்நீச்சல் போட்டோம். பாரம்பரிய அறிவு, எளிய பொறியியல் யுக்திகள், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவை நீர்ப்பற்றாக்குறையை நிரந்தரமாகத் தீர்க்க முடியும் என்பதை நிரூபித்தோம்.'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com