தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
Updated on
2 min read

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை. தஞ்சாவூரை 19- ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி ஆட்சிக் காலத்தில், தலையாட்டி பொம்மைகளை அறிமுகம் செய்தார்.

பொம்மையின் அடிப்பகுதி பெரியதாகவும் - எடை மிகுந்ததாகவும், மேல் பகுதி குறுகலாகவும் - எடை குறைவாகவும் வடிவமைக்கப்படுவதால், எப்படிச் சாய்த்துத் தள்ளினாலும், கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும்.

புவிஈர்ப்பு விசை செயல்பாட்டுக்கேற்ப செங்குத்தாக நிற்கும் விதமாக அமைக்கப்படுகிறது. இந்தத் தனித்தன்மை உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்தப் பொம்மைக்கு 2008- ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

முன்னொரு காலத்தில் 100 குடும்பங்கள் பொம்மை உற்பத்தியில் ஈடுபட்ட நிலையில், தற்போது 10 குடும்பங்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றன.

நலிவடைந்து வரும் இந்தக் கலையில் கைவினைக்கலைஞர்களைப் புதிதாக உருவாக்குவதற்காக தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 30 பெண்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை அளித்து வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் எஸ். பூபதி கூறியது:

'நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி ஜனவரி 22 ஆம் தேதி வரை 60 நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்தத் தொழில் வளர்ச்சியடைவதற்கும், அதை நிறையப் பேர் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

களிமண், காகிதக் கூழ், கனிம வேதித் தூள் (பிளாஸ்ட் ஆப் பாரிஸ்) ஆகிய பொருள்களைக் கொண்டு இந்தப் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. அடிப்பாகம் கொட்டாங்குச்சி வடிவில் களிமண்ணால் தயாரிக்கப்படுகிறது. இதேபோல காகிதக் கூழ், கனிம வேதித் தூள், மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகிய கலவையைக் கொண்டு பிசைந்து, ராஜா, ராணி வடிவ அச்சில் பதிக்கப்படும்.

இந்த மேல்பாகத்தை அடிப்பாகத்துடன் இணைத்து ஒட்ட வைத்து, வெயிலில் 2 நாள்களுக்கு காய வைக்கப்படுகிறது. இவை அனைத்துமே கையால் செய்யப்படுகின்றன. பின்னர் அச்சை நீக்கி பொம்மையில் வர்ணம் பூசப்படும். இதையெல்லாம் எப்படிச் செய்வது என்பது குறித்து ஆரம்பம் முதல் கடைசி வரை கற்றுத் தரப்படுகிறது.

ராஜா - ராணி வடிவம்தான் பாரம்பரியமானது. இந்த வடிவத்தைத்தான் மக்களும் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இது 6 - 7 அங்குலம் கொண்ட சிறிய வடிவம், 8 அங்குலம் உயரமுடைய நடுத்தர வடிவம், 11 அங்குலமுடைய பெரிய வடிவம் ஆகிய வடிவங்களில் செய்ய கற்றுத் தரப்படுகிறது. சந்தையில் ஒரு பொம்மை சிறியது ரூ. 150-க்கும், நடுத்தர வடிவம் ரூ. 180-க்கும், பெரியது ரூ. 230-க்கும் விற்பனையாகிறது.

இத்தொழில் தொடங்குவதற்கு ரூ. 60 ஆயிரம் வரை தேவைப்படும். இதை முழுவீச்சில் கவனம் செலுத்தி செய்தால் மாதத்துக்கு ஏறத்தாழ ரூ. 25 ஆயிரம் வருவாய் கிடைக்கும். அவரவர் திறனைப் பொருத்து குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டலாம். மழைக்காலம் வரும்போது 4 மாதங்களுக்கு மட்டும் காய வைக்க முடியாது என்பதால், உற்பத்தியும், வருவாயும் பாதிக்கும்.

விடுமுறைக் காலங்களில் தஞ்சாவூருக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால், தலையாட்டி பொம்மைகளும் அதிகமாக விற்பனையாகின்றன. வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

விற்பனை அதிகமாக இருக்கும் அளவுக்கு உற்பத்தி செய்வதற்கான ஆள்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இக்கலையைக் கற்றுக் கொடுப்பதன் மூலம் மக்களின் தேவையையும் நிறைவு செய்ய முடியும். மேலும், இக்கலை நம்முடன் அழிந்துவிடாமல், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும்'' என்கிறார் பூபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com