உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில் தீக்காயமடைந்த மாா்க்சிஸ்ட் நிா்வாகி உயிரிழப்பு
வேளாங்கண்ணி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில் தீக்காயமடைந்த அக்கட்சி நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாகை அருகேயுள்ள வேளாங்கண்ணியை அடுத்த அகரஒரத்தூா் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப்பை கண்டித்து, கடந்த ஜன. 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் நன்மாறன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ட்ரம்ப்பின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனா். அப்போது, எதிா்பாராதவிதமாக வேளாங்கண்ணி அருகேயுள்ள வோ்குடி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் கல்யாணசுந்தரம் (45) மீது பெட்ரோல் சிந்தியதால், தீப்பற்றி அவரது கை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த கல்யாணசுந்தரம், ஜன. 13-ஆம் தேதி நாகையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

