கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!

கோபுரத்துக்குச் சிறப்பு சேர்ப்பது அதில் அமைந்திருக்கக்கூடிய சுதைச்சிற்பங்கள்.
கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!
Updated on
3 min read

'ஓர் ஊருக்கு அடையாள மையமாக விளங்கிடுவது கோயில். அக்கோயிலுக்கு அடையாளமாக விளங்குவது கோபுரம். கோபுரத்துக்குச் சிறப்பு சேர்ப்பது அதில் அமைந்திருக்கக்கூடிய சுதைச்சிற்பங்கள். நமது நாட்டில் சுதைச் சிற்பங்களை மூலஸ்தானத்தில் இருத்தி வழிபடுவதும், கோபுரங்களில் அமைப்பதும் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் வழக்கம். முற்காலத்தில் இவை மரக்குச்சிகளின் கட்டுமானத்துக்கு மேலாக சுண்ணக் கலவையினைப் பூசித் தயாரிக்கப்பட்டன. தற்காலத்தில் மாற்றாக செப்பு அல்லது கலாய் (இரும்பு) கம்பிகளும், மேற்பூச்சாக சிமென்ட்

கலவையும் பயன்படுத்தப்படுகின்றன'' என்கிறார் சுதைச் சிற்பக் கலைஞரான கடாரங்கொண்டான் ஸ்தபதி கார்த்திகேயன். அவருடனான சந்திப்பில் பகிர்ந்த செய்திகள் இங்கே...

'பல்லவ மன்னர்கள் காலம் வரை குடைவரைக் கோயில்களில் மரம் அல்லது சுதையால் ஆக்கப்பெற்ற சிற்பங்களே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. பின்னாளில்தான் கருங்கல் சிற்பங்கள் வழக்கத்துக்கு வந்தன. சுதா மூர்த்தங்கள் எனப்படும் கருவறைச் சிற்பங்களின் தன்மை வேறு. சுண்ணம், பலவித நாட்டுமருந்துகள் மற்றும் மூலிகைகள் சேர்த்த கலவை என்பதால், அவற்றுக்கு அபிஷேகம் கிடையாது. அவ்வப்போது இடப்படும் சாம்பிராணித் தைலக்காப்பு மட்டும்தான். இன்றளவும் பெரும்பாலான பெருமாள், பைரவர், காளி கோயில்களில் இவ்வகை மூர்த்தங்களே வழிபாட்டில் இருக்கின்றன.

இவற்றின் வடிவாக்க முறையும் ஸ்தபதிகளும் தனி. ஆனால், கோபுரங்களிலும், விமானங்களிலும், மதில் சுவர்களிலும் அலங்காரத்துக்காகச் செய்து வைக்கப்படும் சுதை பொம்மைகள் வேறுவகையானவை.

அந்தந்தக் கோயிலின் தன்மை மற்றும் தலபுராணத்துக்கேற்ப அவற்றுடன் தொடர்புடைய புராணக்கதை கதாபாத்திரங்கள், துவாரபாலகர்கள், தேவருலகத்தினர், அடியார்கள், மிருகங்கள், தலவிருட்சங்கள், பூதகணங்கள், பறவைகள், அருளாளர்கள் முதலானோர் உருவங்கள் இவ்வகையில் இடம்பெறுகின்றன. பெருமாள் விண்ணகரங்களில் கருடனை அமைப்பதும், சிவாலயங்களில் ரிஷபங்களை அமைப்பதும் மரபு. இதுபோன்று கோயில்களுக்கு ஏற்ப சிற்பங்களும் மாறுபடும். தவிர இவற்றுக்கும் அளவீடுகள், சிலாவிதிகள் உள்ளிட்ட நிர்ணயங்கள் உண்டு.

கிராம எல்லை தேவதை கோயில்களில் பெரும்பாலான தெய்வங்கள் வண்ணம் பூசப்பெற்ற சுதைச் சிற்பங்களாகவே அமைக்கப்படுவது வழக்கம். வீரன், ஐயன், கருப்பு, அங்காளி, காட்டேரி, லாடசுவாமி, முனி, சப்தகன்னியர், பேய்ச்சி அம்மன், பாம்பாட்டி, நாககன்னிகை போன்ற ஏராளமான தெய்வங்கள், வாகனங்கள், யானை, நாய் மற்றும் குதிரைச் சிலைகள் போன்றவை இவ்வகையில் அடங்கும்.

புராதன தொன்மை வாய்ந்த கோயில்களில் இதுபோன்ற கோபுரப் பொம்மைகளைப் பார்ப்பது அரிது. அதற்கும் பிற்காலகட்ட கோயில்களில்தான் இம்முறை பரவலாகத் துவங்கியது. உள்புறத்தில் கம்பியை அமைத்து, அதன்மீது சுண்ணச் சாந்தினைப்பூசி உருவங்களை செய்யும் பாணி முதன்முதலில் செட்டிநாட்டுப் பகுதிகளில் துவங்கியது என்று சொல்கிறார்கள். இவர்களின் அரண்மனை போன்ற வீடுகளை அழகுபடுத்த இதுபோன்ற சுதைவேலைகளைப் பயன்படுத்தி உள்ளனர். இதே பாணியைத் தாங்கள் திருப்பணி செய்த கோயில்களிலும் பயன்படுத்தி ஏராளமான சுதைச் சிற்பங்களையும் அமைத்தனர்.

இதன்மூலம் ஏராளமான புராண நிகழ்வுகள் மற்றும் கடவுளர் உருவங்களைக் காட்சிப்படுத்துதல் எளிதாயிற்று. பிற்காலத்தில் இவ்வழக்கமானது அவர்கள் திருப்பணி செய்த கோயில்கள் உள்ள பகுதிகள் தோறும் பரவத் தொடங்கியிருக்கிறது.

இன்றைக்கு டெல்டா மாவட்டங்களில்தான் இத்தொழிலைச் செய்யும் கலைஞர்கள் ஏராளம் என்று சொல்லலாம். பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கோயில் வேலைகளுக்கு இங்கிருந்துதான் பெரும்பாலான ஆள்கள் செல்கிறார்கள். மாதக்கணக்கில் குழுவாகத் தங்கியிருந்து அங்கேயே சமைத்து, உண்டு, உறங்கி வேலை முடிந்தவுடன் ஊருக்குத் திரும்புவது எங்களது வழக்கம்.

ஏற்கெனவே இருக்கின்ற சிலைகளைச் சீர்படுத்தி வர்ணம் தீட்டுவது, புதிதாக உருவாக்குவது, கோபுரக் கட்டுமான வேலைகள், விதான வர்ணவேலைகள் என அனைத்துப் பிரிவுகளிலும் எங்கள் குழுவில் ஆள்கள் வேலை செய்கிறோம்.

எனக்கு இத்தொழிலில் இருபத்தைந்து வருட அனுபவம். குடும்பச் சூழல் காரணமாக பத்தாவது படிப்புடன் கட்டட வேலைக்கு வந்தவன் நான். பிறகு இத்தொழிலைக் கற்றுக்கொண்டு செய்யத் துவங்கினேன். இன்று வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் வேலை செய்து நல்லவிதமாக முடித்துக்கொடுத்து இருக்கிறேன்.

கன்னியாகுமரி பகுதிகளில் எங்கள் குழுவினர் அதிகமாக கோபுரவேலைகள் செய்திருக்கிறோம். குறிப்பாக, பூம்புகாரைச் சுற்றியுள்ள கலைஞர்கள்தான் அதிகமாக அங்கு இவ்வித பணிகளுக்காகச் செல்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். இன்றளவும் இந்த வேலைக்கு வருடம் முழுவதுமே நல்ல வாய்ப்பு இருக்கிறது. முதல் படியாகக் கம்பிகளைச் செருகிச் சுற்றிலும் செங்கற்களை ஒட்டி தேவைக்கேற்ற வடிவமைப்பினைக் கொண்டு வருவோம். இது போன்று பதினைந்து முதல் இருபது வடிவங்களை ஒரே நாளில் ஒரு 'பேட்ச்' ஆகச்செய்து விடுவோம்.

பிறகு அடுத்த கட்டமாக மட்டி பார்த்தல் வேலை. பிறகு சரியான வடிவத்துக்கு 'பினிஷிங்' கொண்டுவருவது அடுத்தகட்ட வேலை. இதையெல்லாம் முறையாக முடித்தபிறகு அடுத்ததாக கை, கால்களை அமைப்போம். அதன்பிறகு ஆடை, அணிகலன்கள் மற்றும் தேவையான விஸ்தரிப்பு அலங்கார வேலைகள். எல்லாம் சரியாக அமைந்து தயாராக பதினைந்து நாள்கள் பிடிக்கும்.

முதலில் ஒரே நிறத்தில் வர்ணம் செய்து விடுவோம். அது உலர்ந்த பிறகு அதன்மீது பஞ்ச வர்ண வேலைகளைத் தொடங்கிடுவோம். இப்படிக் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் கோபுர விமான வேலைகளைக் குழுவாகச் செய்து முடிப்பது வழக்கம். துவாரபாலகர் போன்ற பெரிய சிலைகளை வடிவமைப்பதுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும். பெரிய சிலைகளுக்கு மட்டும் கம்பிகளை ட்ரில் செய்து, அடிப்பீடத்தினை வலுவாக அமைத்து உறுதி செய்து கொண்ட பிறகே மற்ற பணிகளைத் துவங்கிட வேண்டும். கும்பாபிஷேகத்துக்கு முந்தைய தினம் இச்சிலைகளுக்கு கண்திறப்பு செய்வதுடன் எங்களது பணி முடிவடையும்.

செப்புக்கம்பிகளை அமைத்து முறையான 2:1 விகிதத்தில் தயாரித்த கலவையில் உருவாக்கிய சிற்பங்களில் தரமான பெயிண்ட்டிங் செய்துவிட்டால், ஐம்பது வருடங்கள் ஆனாலும் பொம்மைகள் பொலிவு குறையாமல் நீடிப்பது உறுதி.

முன்பெல்லாம் தரமான ஆற்று மண்ணைப் பயன்படுத்துவது வழக்கம். தற்பொழுது அது கிடைப்பதில்லை என்பதால், காலத்துக்கு ஏற்றவாறு பி-சேண்ட் கலவைகளைப் பயன்படுத்த வேண்டியதாக உள்ளது. மற்றபடி விதவிதமான சிலைகளைச் செய்வதே மனதுக்கு மகிழ்ச்சி தரும் பணிதான். அந்தந்தத் தலத்துக்குரிய மூலமூர்த்திகளை உள்ளது உள்ளவாறு செய்வது சவாலான வேலை. கருவறைத் தெய்வங்களுக்கு நிகரான இந்த மூர்த்தங்கள்தான் அனைவரும் மிக எளிதாகப் பார்க்கும் வண்ணம் விளங்கிடுவது. இவற்றைப் படைத்திடும் தொழிலில் சிறப்பாக விளங்கிடுவதே பெரும் புண்ணியம்'' என்கிறார் கார்த்திகேயன் .

-சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com