'இனிப்புச் சுவை தசையை வளர்க்கிறது, புளிப்போ கொழுப்பைக் கரைக்கிறது, கார்ப்பு எலும்பை வளர்க்கிறது, துவர்ப்பு ரத்தத்தை விருத்தி செய்கிறது, கசப்பு நரம்புகளை உறுதி செய்கிறது, உவர்ப்பு உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது' என்று அறுசுவைகள் ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் உதவுகின்றன.
இந்த ஆறில், இனிப்பே அனைவராலும் விரும்பப்படுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் கசப்புச் சுவையுள்ள உணவுப் பொருள்களைத் தவிர்ப்பார்கள். கசப்பின் பயனை அறிந்தோரே அவற்றை உண்கின்றனர். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், தற்போது நடுத்தர வயதினரும், முதியவர்களும் கசப்பு உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள்.
வெந்தயம், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், புரொக்கோலி போன்ற உணவுகளில் கசப்புத் தன்மைக்குக் காரணமாக இருக்கும் அல்கலாய்ட், பாலிபினால், டெர்பெனாய்ட், குளுக்கோசினாய்ட்டுகள் மற்றும் கேரன்டின் என்ற நுண்பொருள்கள், மனித உடலில் இன்சுலின்போல் செயல்படுகின்றன. 'தாவர இன்சுலின்' என்று அழைக்கப்படும் அவை ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றன.
இதனால் அந்த நோயாளிகள் ஒருநாள் உணவில் 75 முதல் 100 கிராம் வகையில் காய்கள், கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. அதிலும் கசப்பு சுவையுள்ள காய்கள், கீரைகளுக்குச் சிறப்பிடம் கொடுக்கப்படுகிறது. இதற்காகவே கசப்புச் சுவையுள்ள காய்களையும் கீரைகளையும் சமைத்துச் சாப்பிடாமல், அப்படியே சாலட், ஜூஸ் என்று தயாரித்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நவீன உணவு முறைப் பழக்கமாக மாறியிருக்கிறது.
நன்மைகள்
கசப்புச் சுவையானது, பசியைத் தூண்டுவதுடன், உடலில் தேங்கி இருக்கும் நச்சுப் பொருள்களையும் நீக்குகிறது. மற்ற ஐந்து சுவைகளையும் ஒருவர் மிகச் சரியாக உணர வேண்டுமென்றால், அதற்கு கசப்பு சுவையும் தேவைப்படுகிறது. உடலில் ஏற்படும் வறட்சி, அதிகக் குளிர் போன்றவற்றையும் உணவுகளில் இருந்து பெறப்படும் கசப்புச் சுவை சமன்படுத்துகிறது. குடலில் இருக்கும் புழுக்கள் பல்கிப் பெருகாமல் தடுத்து அழிக்கிறது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.
கசப்பு அதிகமாக உடலில் சேரும்போது உடலில் அரிப்பு, தடித்த தோல், வயிறு உப்புசம், மெலிந்த உடல்வாகு, பசியின்மை, வாயில் உமிழ்நீர் வறண்டு போகுதல் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
அதிகம் சாப்பிட்டால்?
சர்க்கரை நோயுள்ள ஒருவர், தொடர்ச்சியாக கசப்புச் சுவையுள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால், அவருடைய ரத்தச்சர்க்கரை அளவு குறைந்துவிடும். அதோடு சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் குறைந்து, மயக்கம் ஏற்படும் ஆபத்தும் வரலாம். கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய்க்கான மருந்துகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், உடல் நிலை மிகவும் மோசமாகிவிடவும் வாய்ப்புண்டு.
வெள்ளரிக்காய், பாகற்காய், கோவைக்காய், சீமை சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற காய்களில் அதிகம் காணப்படும் 'குர்குபிடேசின்' என்ற ஒரு கசப்புப் பொருள் உள்ளது. இந்தத் தாவரங்கள், தங்களை உணவாக்கிக் கொள்வதற்காக வரும் தாவர உண்ணிகளிடமிருந்து காத்துக்கொள்வதற்காக இந்த கசப்புப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன.
இந்த குர்குபிடேசின்கள் மூன்று கிராம் அளவில் அவை உடலுக்குள் சென்றாலே, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நச்சாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
தாவர உணவுப் பொருள்களில் இருக்கும் நச்சுகளையும், உணவு எதிர் பொருள்களையும் வெப்பத்தால் ஓரளவுக்கோ அல்லது முழுவதுமாகவோ அழித்துவிடலாம் என்பது உணவியல் உண்மையாகும்.
அதாவது, ஊற வைத்தல், நொதிக்க வைத்தல், கொதிக்க வைத்தல் போன்ற சமையல் முறைகள் தேவையற்ற நச்சை நீக்கிவிடும். ஆனால், இந்த குர்குபிடேசின்கள் வெப்பத்தால் அழிக்க இயலாத அளவுக்கு வீரியம் கொண்டவை. இதனால் சூப், குழம்பு, பொரியல் என்று எவ்வகையில் சமைத்தாலும், குர்குபிடேசின்கள் அப்படியேதான் இருக்கும்.
அதிலும் வெள்ளரிக்காய், கோவைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், தர்பூசணி போன்றவற்றை அப்படியே சாப்பிடும்போது கசப்புச் சுவை தெரிந்தால், அவற்றில் குர்குபிடேசின்கள் அதிகம் என்று அறிந்து, அந்த நேரத்தில், அவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும். தோல் சீவியோ, வேக வைத்தோ சாப்பிடலாம் என்றெல்லாம் சமாதானம் செய்து கொண்டு சாப்பிட்டால், சிறு உடல் உபாதையில் துவங்கி, பெரியளவில் உடலில் தீங்கு விளைவிக்கும்.
கசப்பு உணவுகள் உடலுக்கு நன்மை தரும் என்றாலும், அதை அளவுடன் உணவாக்கிக்கொள்வதே எப்போதும் நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






