சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இயற்கையை நோக்கி நகர்வோம்...

'காகித உறைகளில் பொருள்களைப் பொட்டலம் கட்டும்போது சிறிது நேரம் பிடிக்கும்.

News image
Updated On :21 மார்ச் 2026, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

பொ.ஜெயச்சந்திரன்

'காகித உறைகளில் பொருள்களைப் பொட்டலம் கட்டும்போது சிறிது நேரம் பிடிக்கும். இதையே சில மணி நேரம் தொடர்ந்து செய்யும் சூழ்நிலை உருவாகும்போது, அன்றிரவு கை வலியில் தூக்கம் இழந்த நாள்கள் அதிகம். அடுப்பின் அருகில் நிற்போரின் நிலையும் அப்படியே! இயற்கை வேளாண் பொருள்களுக்கான லாபத்தையே நாங்கள் எடுக்க முடியும்.

இதுபோன்ற வேலைகளுக்கான கூலியை நாங்கள் எடுக்க முடியாது. எண்ணற்றோர் பிளாஸ்டிக் பைகளைப் புறக்கணித்தது மட்டுமல்லாது, எதிர்வரும் சந்ததியினருக்கு எங்களால் எந்தக் குப்பைகளும் உருவாக்கப்படவில்லை என்ற மனநிறைவு எப்போதும் உண்டு. இயற்கையை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பதே என்னுடைய இலக்கு' என்கிறார், பாரம்பரியமான உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சீதாலட்சுமி மணிகண்டன்.

சென்னை சைதாப்பேட்டை வனநீலி ஆர்கானிக்ஸின் நிறுவனரான இவர், தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஷெனாய் நகரிலும், இரண்டாவது சனிக்கிழமைகளில் வேளச்சேரியில் நடைபெறும் சந்தையில் பாரம்பரிய உணவுப் பொருள், மதிப்புக்கூட்டுப் பொருள், காய்கறிகளை நேரடியாக விவசாயிகளோடு இணைந்து விற்பனை செய்து வருகிறார்.

வணிகப் பட்டதாரியான சீதாலட்சுமியிடம் பேசியபோது:

'2013-ஆம் ஆண்டு இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், விவசாயிகளின் சந்திப்புக்குப் பின்னர் என்னுடைய பயணம் தொடங்கியது. ரெஸ்டோர், ஆர்கானிக் விவசாயிகளின் சந்தையின் இணை நிறுவனர் அனந்தசயனத்தின் (அனந்து) அறிமுகம் கிடைத்தது. அப்போது சமூகம், உணவின் எனது பார்வை முன்னுதாரணமாக மாறியது.

ஒருமுறை புற்றுநோய் பிரிவில் நான் பார்த்த காட்சிகள், திரட்டிய தகவல்கள் எனது மனதை வாட்டியது. அதற்குப் பின்னால் இருந்தவற்றை அலசி ஆராய்ந்தேன். தாய்ப்பாலில் கூட உடலுக்கு நஞ்சு விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் கலந்து இருப்பதை அறிந்தேன். கேள்விப்படாத பல நோய்களுக்கு இருப்பிடமாக உணவு வாழ்க்கை முறையும் இருக்கிறது.

இதனை மனதில் கொண்டு சென்னை லயோலா கல்லூரி, அடையாறு மீனா முத்தையா கல்லூரி, சைதாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாரம்பரிய மூலிகைகள், அரிசி, தினைகள், கர்ப்பிணிகளுக்கான பாதுகாப்பான உணவு போன்ற எண்ணற்ற தலைப்புகளில் விழிப்புணர்வுகளை விதைத்துள்ளேன். சங்க காலத்தில் செய்த உணவு முறைகளை அறிந்து, மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளேன்.

குழந்தைகள் உண்ண மறுப்பது ஏன்?

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், 'இந்த உணவை உண்ண மறுக்கிறார்கள்' என்கிறார்கள். ஆனால், பாரம்பரிய உணவை உண்ணும்போது அந்த மாற்றத்தை ஆழமாக உணர்கிறேன். கஞ்சி, கூழ் இது போன்ற உணவுகள் அவர்களுக்குப் பிடிக்கின்றன. அவர்களை முயற்சி செய்யவைப்பதுதான் கடினம். ஒரு முறை அவர்களுக்குப் பிடித்து விட்டால், நிச்சயமாக அதைவிட்டு மாறமாட்டார்கள்.

அதனால்தான் எங்களது சந்தையில் சிறுதானியம், பாரம்பரிய அரிசி பொங்கல், இட்லி, தேநீர், மூலிகை சூப், கீரை வடை, அதிரசம், முறுக்கு, உருண்டை வகைகள் எல்லாம் கிடைக்கும் வகையில் செய்துள்ளோம். உண்டு மகிழ்ந்த பின்னர் தானியங்களையும் வாங்கிச் செல்கின்றனர். வீட்டில் முயன்று பார்த்து எங்களிடம் பகிர்ந்தும் கொள்கின்றனர். 'பிறந்த முதல் மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவே அளிக்க வேண்டும்' என்று தேடி வரும் மக்கள் அதிகரித்து உள்ளனர்.

விவசாயிகள்- நுகர்வோர் சந்தை

விவசாயிகள் சந்திக்கும் பெரும் சவால்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ள முக்கியமான ஓர் இடமாக விவசாயிகள்- வேளாண் சந்தைகள் திகழ்கிறது. பொருள்களை வாங்குதல் என்பது இரண்டாம்பட்சம்தான். விவசாயிகளோடு இருந்து பார்த்தலும், உற்றுநோக்குதலும் மிகவும் முக்கியம். தான் உண்ணும் உணவை எந்த விவசாயி உற்பத்தி செய்கிறார் என்பதை அறியவும் முடிகிறது. அரிய வகை உணவுப் பொருள்களை விவசாயிகள் கொண்டு வரும்பொழுது மக்கள் அதனை போட்டி போட்டு வாங்கிச் செல்கிறார்கள்.

அப்பொழுது விவசாயிகளுக்கும் இன்னும் நல்ல உணவுப் பொருள்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும். தன்னுடைய வாழ்வாதாரத்தைத் தாண்டி மக்கள் நலத்துடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனை விவசாயப் பெருமக்களிடம் அதிகம் உண்டு. அதனால் தான் இன்னும் உலகம் சுழன்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது போன்ற சந்தைகள் மிகவும் முக்கியமானது.

பொருள்களைப் பொட்டலம் கட்டுவதற்கு மக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது இப்போது குறைந்துவருகிறது. மக்கள் துணிப்பைகளையும், பாத்திரங்களையும் கொண்டு வருகின்றனர். இதனால் குப்பைகள் இல்லாத சந்தைகள் உருவாகி வருகின்றன' என்கிறார் சீதாலட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.