பொ.ஜெயச்சந்திரன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக நடைமுறையை நடைமுறைப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். ஊர்க் கணக்குக் காட்டாதவர், கையூட்டுப் பெற்றவர், எல்லைக் கற்களை மாற்றம் செய்து மோசடி செய்தவர், ஏரி-குளம் போன்ற நீர்நிலைகளை அழித்தவர் எனப் பல வகையான குற்றங்களைச் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர்கள் என்பதை உலகுக்கு நம் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. குடவோலை முறையில் நடைபெற்ற அன்றைய தேர்தல் நடைமுறைகள் குறித்து வரலாற்று ஆய்வர்களிடம் கேட்டோம்.
பேராசிரியர் முனைவர் சி.சுதாகர்:
உலகின் மக்களாட்சியின் பிறப்பிடமான கிரேக்கத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன், வேட்பாளர்களைக் குறிக்கும் தாமிரத் தகடுகள், கூழாங்கற்களைத் தாழிகளில் போட்டு தேர்தலை நடத்தியுள்ளனர். உடைந்த பானை ஓடுகளில் வேட்பாளர்களின் பெயரைக் கீறியும் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி இருக்கின்றனர். இருந்தாலும், உலகமெங்கும் மன்னராட்சியே நடந்தது.
சுமார் 1,100ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்லாந்தில் மக்களாட்சி முதலில் உருவானது.அந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளை முதலாம் பராந்தகச் சோழன் ஆண்டார். அதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்தார் மாமன்னன் ராஜராஜன். ஐஸ்லாந்து மக்களாட்சிப் பெற்றவுடன் சுமார் 900 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்காவில் 1788-ஆம் ஆண்டிலும், சுவிட்சர்லாந்தில் 1848-ஆம் ஆண்டிலும் மக்களாட்சிகள் உருவாயின. பின்னர் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சிகள் மலர்ந்தன.
இருப்பினும், கிரேக்கத்தில் நடைபெற்ற தேர்தல்போன்று, மக்கள் மறைமுகத் தேர்தலில் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தவில்லை. ஆஸ்திரேலியாவில்தான் முதன் முதலில் 1856-ஆம் ஆண்டில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.
1230 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் கிராம சபை தேர்தல் குடவோலை முறையில், பனை ஓலையைப் பயன்படுத்தி நடைபெற்றுள்ள தகவலானது மானூர் அம்பலவாணசுவாமி கோயில் மண்டபத் தூணில் பாண்டிய மன்னன் மாறன் சடையனின் (768-815)ஆம் ஆட்சியாண்டில் நிறுவப்பட்டுள்ளது. இதில், 'வேட்பாளரின் வயது 35 முதல் 70-க்குள் இருக்க வேண்டும். கல்விக் கற்றவராக இருக்க வேண்டும். உழைத்துச் சம்பாதித்து அரசுக்கு வரி செலுத்துபவராக மட்டும் அல்லாமல், வேட்பாளரிடம் அரை வேலி நிலமாவது இருக்க வேண்டும். திறமைசாலிகளாகவும், நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த அரசுப் பணியிலும் இருந்திருக்கக் கூடாது. குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அடைந்தவர்களும், அவர்களின் தாய், தந்தை வழிச் சொந்தங்கள் யாருமே தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லாதவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற தேர்தல் முறையை விளக்கும் வகையில் பராந்தச் சோழன்(907-955) காலத்தில் நிறுவப்பட்ட கல்வெட்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட உத்திரமேரூர் திருமால் கோயிலின் சுவரிலும் உள்ளது.
உத்திரமேரூர் கல்வெட்டு தற்காலத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதைவிட பழமையான மானூர் கல்வெட்டு வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. வட்டெழுத்தும் தமிழ் எழுத்துகளே. ஆனால், எழுத்து முறை தற்காலத் தமிழ் எழுத்தைவிட முற்றிலும் மாறுபட்டது. இந்த இரண்டு கல்வெட்டுகளும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கின்றன.
தமிழர்கள் 2300 ஆண்டுகளுக்கு முன்பே 5,400 கி.மீ. தூரம் கடலில் பயணித்து எகிப்து வரை வணிகம் செய்துள்ளனர். பயணத்தின்போது எகிப்தின் பல பிரமிடுகளில் தங்கள் பெயரைப் பதித்து வந்துள்ளனர். கிரேக்க நகரமான ஏதென்ஸ்-எகிப்துக்கும் இடையே சுமார் 1100 கி.மீ. தூரம்தான் உள்ளது. அப்போது கிரேக்கர்களின் தாக்கம் எகிப்தில் அதிகமாக இருந்தது.
தமிழர்கள் தங்கள் பயணத்தின்போது, கிடைத்த பயனுள்ள தகவல்களையும், பழக்கங்களையும் இங்கு கொண்டு சேர்த்திருக்கும் வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் குடவோலை தேர்தல் முறை திருநெல்வேலிக்கு வந்துள்ளதா? என்ற கேள்வியும் எழவே செய்கிறது. சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பண்டைய தமிழர்களின் நாகரிக எச்சங்களைக் கூர்ந்து பார்க்கும்போது, 2,500ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் குடவோலை தேர்தல் முறை இருந்தது எனலாம்.
ரம்யா பிரகாசம், ஓலைச்சுவடிப் படியெடுப்பாளர்:
இன்று கிராமங்கள், கோயில்களில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்பொழுது குழப்பமான மனநிலையைப் போக்க எடுக்கும் முடிவு சீட்டு குலுக்கல். சிறாரை அழைத்து எடுக்கக் சொல்லும் இன்றைய நடைமுறையானது 10-ஆம் நூற்றாண்டிலே இருந்துள்ளது. மக்களாட்சித் திட்டமாக இந்தக் குடவோலை முறை கையாளப்பட்டுள்ளது. பல்லவ, சேர, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சபாக்கள் செயல்பட்டுள்ளன.
கிராமங்களைப் பல கோட்டங்களாகச் சேர்த்து, ஒவ்வொரு கோட்டத்துக்கும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதிமுறைகளானது இந்திய தேர்தல் ஆணையம் இன்று கடைபிடிக்கும் விதிகளுக்கு அன்றே இணையாக இருந்துள்ளன. குடியரசுத் தலைவர், ஆளுநரின் மசோதாக்களுக்கு அனுமதி பெறுவதைப் போல, அந்த காலங்களில் மன்னரால் போடப்பட்ட ஆணைகளை சபாக்களில் வைத்து அமலாக்கினர்.
'குடத்தில் இடும் சீட்டு குடவோலை முறை' என்று அகராதி விளக்கம் தருகிறது. இந்தக் குடவோலையில் தேரும் மாக்களை ஆவணமாக்கள் என்றும் குறிப்பிடுகிறது. அக்காலத்தில் ஓலையில் எழுதும் பழக்கம் இருந்தது என்பதை இந்த முறையில் அறிய முடிகிறது. திருமந்திர ஓலை, ஓலைநாயகம் போன்ற அலுவலர்கள் இருந்தமையால் ஓலையில் எழுதும் பழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது.
சில கல்வெட்டுகளில், 'நாம் ஓலை கொடுத்தோம். இப்படி மக்கள் செய்வார்களாக?' என்றும், 'செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்வார்களாக?' என்றும் வருவதால் இரண்டிலும் பொறிப்பதற்கு முன்னர் ஒலையில்தான் எழுதப்பட்டது என்பது நன்கு விளங்குகிறது. குடவோலை முறையானது வேட்பாளராக நிற்பவருடைய பெயரை ஓலையில் எழுதி குடத்தினில் இடுவதை அறிந்து வைத்திருந்தனர்.
'கடைசி உறுப்பினராக இருந்தவர்கள் 2 முதல் 10 ஆண்டுகள் வரையிலான இடைவெளிக்குப் பின்னர்தான் தேர்தலில் போட்டியிட முடியும். இவர்களின் உறவினர்களும் கடந்த 5 ஆண்டுகளில், தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க வேண்டும். புதியவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பளிக்கும் வகையில் 2 உறுப்பினர்கள் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்ற நடைமுறையில் தேர்தல் சோழநாட்டின் கிராமங்களிலும் பின்பற்றப்பட்டது. முன்னோடி திட்டமாக குடவோலை முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடவோலை தோ்தல்! கல்வெட்டு சொல்லும் அரிய தகவல்!!

வேட்பாளராக யாரைத் தோ்வு செய்ய வேண்டும்? குடவோலை தோ்தல் முறை கல்வெட்டுகள் சொல்லும் அரிய தகவல்கள்

252 முறை தேர்தலில் போட்டி! ரூ. 1 கோடி டெபாசிட் இழந்த வேட்பாளர்! யார் இவர்?
தேர்தல் 1957: சட்டப்பேரவைக்குள் முதன்முதலாக நுழைந்த திமுக!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

