தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்தி மடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த "இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளான இவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோப்பைகளையும், பரிசுகளையும் வென்றுள்ளனர்.
இந்த அணியை 2020-ஆம் ஆண்டில் உருவாக்கிய இருசக்கர வாகன மெக்கானிக் க. செளந்தரபாண்டி தொடர் பயிற்சியையும் அளித்து வருகிறார். தற்போது வரை அவர் 25 கபடி வீராங்கனைகளை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து செளந்தரபாண்டியிடம் பேசியபோது:
""கரோனா காலத்தில் கிடைத்த ஓய்வு எனக்கு மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்தியது. என் மனைவியும், தாயாரும் பீடித் தொழிலாளர்கள். நானும் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மாலையில் பீடி சுற்றும் வேலை செய்தேன். என் மகளும் அதே தொழிலுக்குச் செல்லக் கூடாது என்று நினைத்தேன். என் மகளுடன் சேர்த்து கிராமத்தில் ஏழு சிறுமிகளுக்கு கபடி பயிற்சியளிக்கத் தொடங்கினேன்.
அவர்களின் பெற்றோர்களைச் சம்மதிக்க வைப்பதற்கு முதலில் கடினமாக இருந்தது. சிறுமிகள் படிப்புடன் சேர்த்து பீடி சுற்றும் வேலையிலும் உதவுவார்கள். அவர்கள் போட்டிகளில் வெற்றி பெறத் தொடங்கியதும், பெற்றோர்களின் அணுகுமுறை மாறியது. தற்போது 25 சிறுமிகள் அணியில் உள்ளனர்.
கபடி போட்டிகளில் பங்கேற்ற சிறுமிகளையும் ஆண்டிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மாதாபட்டணத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியிலும் சேர்க்க ஏற்பாடு செய்தேன். மாணவியர் விளையாட்டை தாண்டி கல்வியிலும் சிறந்து விளங்கி வருவதால், பள்ளி நிர்வாகமும் நாடு முழுவதும் நடைபெறும் போட்டிகளுக்கு அவர்களை அனுப்பி ஆதரித்து வருகிறது.
முதல்வர் கோப்பை, குடியரசு தின விளையாட்டுப் போட்டி (ஆர்.டி.எஸ்.), சப்-ஜூனியர், ஜூனியர் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும்போதெல்லாம் இளம்புயல் அணியிலிருந்து குறைந்தது ஐந்து சிறுமிகள் தென்காசி மாவட்ட அணிக்காக விளையாடுகின்றனர். தனியார் அமைப்புகள் நடத்தும் திறந்தவெளிப் போட்டிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.
14 வயதுக்குள்பட்ட பிரிவில் நடைபெற்ற ஆர்.டி.எஸ்., முதல்வர் கோப்பைப் போட்டிகளில் தென்காசி மாவட்ட அணிக்காக பிற பள்ளி மாணவியருடன் சேர்ந்து பல பதக்கங்களை வென்றுள்ளனர். முதல்வர் கோப்பைப் போட்டியில் வெண்கலம் வென்று ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையும் பெற்றனர்.
இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பின் மூலம் இருமுறை தமிழ்நாடு அணிக்காக தேசிய அளவில் வீராங்கனை பிருந்தா தேர்வாகி, பிகாரில் நடைபெற்ற 34-ஆவது சப்-ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப், ஹரியானாவில் நடைபெற்ற 35-ஆவது சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி வெண்கலம், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.
இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்திய 14 வயதுக்கு உள்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக வீராங்கனை ஸ்வர்ணா தேவி விளையாடினார். ஷிவானி, மரியதெரசா, அஜிதா, கீர்த்திகா, பிரதீஷா, தேவி, மகராசி, அபிநயா, மெர்லின், பிரியா, ஹர்ஷினி, இன்ஷியா உள்ளிட்ட வீராங்கனைகள் தென்காசி மாவட்ட அணியில் பிற பள்ளி வீராங்கனைகளுடன் இடம்பெற்று தங்கமும் வென்றுள்ளனர்.
தென்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளர் நல்லாசிரியர் அருள் இளங்கோவன், காளத்திமடத்தைச் சேர்ந்த சரவணன், திராவிடமணி, பயிற்சியாளர் சிவா உள்ளிட்டோர் கபடி சிறுமிகளுக்கு பல்வேறு வகைகளில் ஆதரவளித்து வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சிவபாலன், கேரள சுகாதாரத் துறை அலுவலர் ரொனால்ட் இம்மானுவேல், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த விவசாயி கருத்தையா உள்ளிட்டோரும் சிறுமிகளின் திறமைகளைப் பாராட்டியுள்ளனர்.
சிறுமிகளை பீடித் தொழிலிலிருந்து மீட்பதே என் இலக்கு. உலகத் தரத்திலான விளையாட்டு மைதானமும், தேவையான வசதிகளும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். ஒருநாள் என் சிறுமிகள் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார்கள். அணியினரின் பயணத்துக்காக பழைய காரை வாங்கியுள்ளேன்'' என்கிறார் செளந்தரபாண்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்: க்ருணால் பாண்டியா

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 சிறுமிகள், 4 பேருக்கு வெண்கலம்

4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்

வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
