'சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும். கொழுப்பு நிறைந்த பேக்கரி உணவுகள், அதிக அளவு சர்க்கரை சேர்த்த பழச்சாறுகள், செயற்கை வேதிப்பொருள்கள் சேர்த்த நொறுக்குகள் போன்றவையும் எலும்புகளின் கால்சியம் அளவைப் பாதிக்கின்றன.
இவ்வாறான உணவுகளையும் வளரிளம் பருவத்தினர் தவிர்க்கவேண்டும்'' என்கிறார் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் ப. வண்டார் குழலி இராஜசேகர்.
அவரிடம் பேசியபோது:
'குழந்தை பிறந்து ஒன்பது மாதம் வரை எலும்பு உருவாக்கம் நிகழும். பின்னர், அதன் நீளம் அதிகரிக்கும். இதுதான் சிறு குழந்தையின் உயரம் அதிகரிக்க உதவுகிறது. 10 முதல் 18 வயது வரையில் உச்சத்தில் இருக்கும் எலும்பு வளர்ச்சி, 18 முதல் 20 வயதுக்குள் முடிவடைவதால், வளரிளம் பருவத்தினரின் உயரமும் இந்த வயதில் முடிவுக்கு வருகிறது.
இந்த வயதில், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான எந்தவித சத்துகளும் பற்றாக்குறையாக இருக்கக் கூடாது. சத்துகள் பற்றாக்குறை ஏற்பட்டால், வளரிளம் பருவத்தினர் இருக்க வேண்டிய உயரத்தை அடைய மாட்டார்கள். இதனால், வயதுக்கேற்ற உயரம் இல்லாமல், வளரிளம் பருவத்தினரின் உடல் நலனும், மன நலனும் பாதிப்படையும் ஆபத்தும் ஏற்படலாம்.
எலும்பு அடர்த்தி குறைவதால், தேய்ந்து போவதும் எலும்புக்குள் இருக்கும் நுண்ணிய அமைப்புகளான திசுக்கள், சவ்வு, நீர் போன்றவற்றில் அழிவு ஏற்படுவதும் நிகழ்கிறது. மணிக்கட்டு, முதுகெலும்பு, இடுப்புப் பகுதியில் இது மிக விரைவாக அறியப்படுகிறது.
வயதானவர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான எலும்புத் தேய்மான நிலைக்கு வளரிளம் பருவத்தில் இருக்க வேண்டிய எலும்பு உறுதி குறைவாக இருப்பதும் ஒரு காரணம். வளரிளம் பெண்களின் இடுப்பு எலும்புகள் உறுதியாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் இருந்தால்தான், திருமணத்துக்குப் பிறகான குழந்தைப்பேறும் சிக்கல் இல்லாமல் நடைபெறும்.
எலும்புகள் மனித உடலுக்கு நிலையான உருவத்தை அளிப்பதுடன் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கவும், தசையுடன் சேர்ந்து உடல் இயக்க நிலையில் இருப்பதற்கும் உதவி செய்கின்றன. அவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும் தாதுக்கள், உடலுக்குப் பற்றாக்குறை ஏற்படும்போது, உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
எலும்பும் எலும்பு மஜ்ஜையும் உறுதியாக இருந்தால்தான் உடலுக்குத் தேவையான அளவில் ரத்த சிவப்பணுக்கள் உருவாகும். இவை மட்டுமல்லாமல், எலும்பிலிருந்து உருவாக்கப்படும் "ஆஸ்டியோகால்சின்' என்ற ஹார்மோன், நமது உடலின் ரத்த சர்க்கரை அளவையும், கொழுப்பு திசுக்களையும் பராமரிக்கிறது.
எலும்பு வளர்ச்சி, உறுதிக்குத் தேவையானவை: அனைத்துவிதமான பேரூட்டங்களும் நுண்ணூட்டங்களும் ஒவ்வொரு நிலையில் எலும்பின் உறுதிக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. எலும்புக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துகளாக கால்சியம், வைட்டமின் டி, புரதம், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் கே2 போன்றவற்றைக் கூறலாம். இவை நிரம்பிய உணவுகளை தினசரி உணவில் சேர்த்தால், வயதுக்கான சத்தும் கிடைக்கப் பெற்று எலும்பு உறுதியும் வளர்ச்சியும் முழுமை அடையும்.
கால்சியம்: எலும்பு உருவாக்கத்துக்கும், உறுதிக்கும் தேவையான பிரதான சத்து கால்சியம். வளரிளம் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 1000 - 1300 மில்லி கால்சியம் சத்து தேவை. இவற்றை பால், சீஸ், பாலாடைக்கட்டி, தயிர், மோர், முட்டை, அடர் பச்சைக் கீரைகள், கால்சியம் செறிவூட்டம் செய்யப்பட்ட உணவுகள், கடல் உணவுகளில் பெறலாம்.
வைட்டமின் டி: இதன் பிரதான பணியே குடலில், கால்சியம், மக்னீசியம், பாஸ்பேட் போன்ற தாதுக்களை நன்றாக உட்கிரகித்துக் கொடுப்பதுதான். எலும்பு வளர்ச்சி, எலும்பு, அது சார்ந்த திசுக்கள் உறுதியாக இருக்க வேண்டு
மெனில், வைட்டமின் டி போதுமான அளவு இருக்க வேண்டும். 11 முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 15 - 25 மைக்ரோகிராம் வைட்டமின் டி தேவைப்படுகிறது. இதை எந்தத் தாவரமும் உற்பத்தி செய்து வைத்திருப்பதில்லை. முட்டை மஞ்சள் கரு, ஆட்டு ஈரலில் சிறிதளவும், கொழுப்பு நிறைந்த சில மீன்களின் கல்லீரலில் சேமிக்கப்பட்டு, உணவாக எடுத்துக்கொள்ளும்போது சிறிதளவு உடலுக்குக் கிடைக்கிறது.
10 சதவீதம் அளவே உணவிலிருந்து வைட்டமின் டி கிடைக்கும் நிலையில், 90 சதவீதம் சூரிய ஒளியில் பெறப்படுகிறது. காலையில் 10 அல்லது 11 மணியளவில், 10, 15 நிமிடங்கள் வரையில் உடலில் சூரியஒளி படுமளவுக்கு நின்றாலோ அல்லது வேலை செய்தாலோ போதுமான வைட்டமின் டி கிடைக்கும். இதனால், வளரிளம் பருவத்தினர் காலை, மாலை வேளைகளில் திறந்தவெளியில் விளையாடுவது, நடைப்பயிற்சி செய்வது என்று, உடலில் வெயில் படுமாறு இருத்தல் நல்லது.
புரதச் சத்து: புரதம், கிளைசின், புரோலின், ஹைடிராக்சிபுரோலின் போன்ற அமினோ அமிலங்கள்தான் எலும்புக்குள் இருக்கும் கொலோஜென் உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப் பொருள். எலும்புடன் ஒட்டியிருக்கும் தசைகளே எலும்பின் உறுதி, உடல் உறுப்புகளின் உறுதியையும் பாதுகாப்பையும் முழுமைப்படுத்துகின்றன.
ஒருநாளைக்கு 46 முதல் 56 கிராம் வரையில் புரதச் சத்து தேவை. மீன், முட்டை, பால், பருப்பு வகைகள், மாமிச உணவுகளை உண்பதால், வளரிளம் பருவத்தினருக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. விளையாட்டில் ஈடுபடுபவர்கள், ஒரு கிலோ உடல் எடைக்கு 1.5 முதல் 1.8 கிராம் அளவில் புரதம் எடுத்துக்கொண்டால்தான் பற்றாக்குறை ஏற்படாது.
மக்னீசியம்: பற்கள் 90 சதவீதமும், எலும்புகள் 70 சதவீதமும் ஹைடிராக்சிஅபடைட் என்ற கரையும் நுண் படிகங்களைக் கொண்டுள்ளன. இவையே பிற தாதுக்களுடன் சேர்ந்து, எலும்புகளுக்கு உறுதியையும் அடர்த்தியையும் கொடுக்கின்றன. இந்த நுண்ணிய படிகங்கள் எளிதில் இறுகிவிடாமல் நெகிழ்வுத்தன்மையுடன் இருந்தால்தான் எலும்புகளில் உயிர்வேதி செயல்பாடுகள் சரியாக நடைபெறும்.
இந்தச் செயல்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு மக்னீசியம் அவசியமாகிறது. 9 முதல் 13 வயதுள்ளவர்களுக்கு 240 மில்லி அளவும், 14 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஒருநாளைக்கு 360 மில்லி அளவு மக்னீசிய சத்தும் தேவைப்படுகிறது. அடர் பச்சைக் கீரைகள், காய்கள், பாதாம், முந்திரி, மணிலா, பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைகள் உணவுகளில் மக்னீசிய சத்து இருக்கிறது.
வைட்டமின் கே 2: உணவு வழியாக உடலுக்குள் செல்லும் கால்சியம் சத்து சரியான உயிர்வேதியியல் செயல்பாட்டுக்கு உள்ளாகி, ரத்தத்தில் உட்கிரகிக்கப்பட வேண்டும் என்றால், வைட்டமின் கே 2 சத்து அவசியம். இந்தச் சத்து எலும்பு உறுதியையும் நிர்ணயிக்கிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின் என்பதால், அசைவ உணவுகள், ஆட்டு ஈரல், முட்டை, புளிக்க வைத்த உணவுகளில் வைட்டமின் கே2 இருக்கிறது.
பாஸ்பரஸ்: கால்சியம் சத்துக்கு அடுத்தபடியாக, எலும்புக்கு உறுதி கொடுப்பதற்கு பாஸ்பரஸ் சத்து தேவைப்படுகிறது. உடலிலுள்ள மொத்த பாஸ்பரஸில் 85 சதவீதம் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது. பாஸ்பரஸ் சத்து குறைபாடு ஏற்பட்டால், எலும்புகளில் வலி, தேய்மானம் ஏற்படும். வளரிளம் பருவத்தில், பாஸ்பரஸ் குறைபாடு இருந்தால், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வளர்ச்சியும் உயரமும் குறையும் நிலை ஏற்படும்'' என்கிறார் வண்டார்குழலி இராஜசேகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

500 தலசீமியா குழந்தைகளுக்கு எலும்பு மாற்று சிகிச்சை

அஸ்ஸாமின் பாதுகாப்பு வளர்ச்சியை உறுதி செய்வோம்: முதல்வர் ஹிமந்த!

செங்கல்சூளையில் மனித மண்டை ஓடு, எலும்புகள்: போலீஸாா் விசாரணை
ஜிகர்தண்டா
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
