மன இருளுக்கும் ஒரு தீபம்
தீபாவளியின் பின்னணியில் வெவ்வேறு சமய மரபுகளும் புராணக் கதைகளும் உள்ளன.
தீபாவளியின் பின்னணியில் வெவ்வேறு சமய மரபுகளும் புராணக் கதைகளும் உள்ளன. இராமன் இராவணனை வென்று அயோத்திக்குத் திரும்பியபோது, மக்கள் விளக்கேற்றி வரவேற்றதாக ஒரு மரபு கூறுகிறது.
நரகாசுரன் அழிக்கப்பட்டதைத் தீமையின் வீழ்ச்சியாகக் கொண்டாடும் மரபும் நிலவுகிறது.
சமண மரபில் மகாவீரரின் பரிநிர்வாணம் தீபாவளியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே வரலாற்றுச் சம்பவத்தின் வெவ்வேறு வடிவங்கள் அல்ல; வெவ்வேறு சமயங்களும் சமூகங்களும் தங்களுக்குரிய நம்பிக்கைகளின் வழியாகப் பொருள் வழங்கிய மரபுகள். அவற்றை ஒன்றாக இணைக்கும் பொதுவான கேள்வி, மனிதன் நன்மையையும் தீமையையும் எவ்வாறு புரிந்துகொள்கிறான் என்பதுதான்.
இராமன் அயோத்திக்குத் திரும்பிய கதையில், நீண்ட பிரிவுக்குப் பிறகு மீண்டும் இணையும் வேளையில் மக்களின் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. நோயிலிருந்து மீண்டவர், தோல்வியைக் கடந்து எழுந்தவர், நம்பிக்கையிழந்த நிலையில் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குபவர் என மனித வாழ்விலும் இத்தகைய திரும்புதல்கள் நிகழ்கின்றன.
இழந்த நிம்மதியை மீண்டும் அடையும்போது, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்களும் உறவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றனர். இவ்வாறு பார்க்கும்போது, ஒரு புராணக் கதை வெற்றியின் நினைவாக மட்டுமல்லாமல், மீட்சி, நம்பிக்கை, மனித உறவுகள் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையாகவும் விரிகிறது.
நரகாசுரன் கதை இதைவிடச் சிக்கலான கேள்வியை எழுப்புகிறது. பிறரைத் துன்புறுத்தியவன் அழிக்கப்படுகிறான்; அவனது வீழ்ச்சி கொண்டாடப்படுகிறது. ஆனால், தீமை என்பது ஒரு புராண அரக்கனுடன் முடிந்துவிடுகிறதா? அதிகாரம் கிடைத்தவுடன் பிறருடைய உரிமைகளை மறுக்கும் மனநிலை; தன்னைவிட வலிமை குறைந்தவர்களை இழிவுபடுத்தும் போக்கு: தனக்குச் சாதகமாக இருக்கும்போது அநீதியைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்லும் இயல்பு ஆகியவற்றிலும் அதே நரகாசுரத்தனம் வெளிப்படுவதில்லையா?
குடும்பத்தில், பணியிடத்தில், பொதுவாழ்வில் நமக்குக் கிடைக்கும் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது இந்தக் கேள்வியின் ஒரு பகுதியாகும்.
நமது கருத்துக்கு மாறான கருத்தை முன்வைப்பவரை மதிப்பதும், பிறருடைய வெற்றியைப் பொறாமையின்றி ஏற்றுக்கொள்வதும், நமக்கான நீதியை விரும்பும் அதே அளவுக்கு மற்றவர்களுக்கான நீதியை மதிப்பதும் அன்றாட வாழ்வின் அறவியல் சோதனைகள். இவற்றில் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை ஆராயாமல், தீமையின் அழிவைக் கொண்டாடுவதால் மட்டும் அதன் மெய்மையை முழுமையாக உணர்ந்துவிட முடியுமா?
நரகாசுரன் அழிக்கப்பட்ட நாளினைக் கொண்டாடுகிறோம்; நமக்குள் இருக்கும் நரகாசுரனைக் காணத் தயாராக இருக்கிறோமா?
இந்தக் கேள்வி ஒரு நம்பிக்கையை மறுப்பதற்காக எழுப்பப்படுவதல்ல. மாறாக, அந்த நம்பிக்கை உணர்த்தும் அறத்தை நமது செயல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான முயற்சி. ஒரு புராணக் கதையின் உட்பொருள், அதில் வரும் கதைமாந்தர்களின் வெற்றி தோல்விகளோடு முடிந்துவிடுவதில்லை. அக்கதை சுட்டிக்காட்டும் மனித இயல்புகள் இன்றைய வாழ்க்கையில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை உணரும்போதுதான் அது நிகழ்காலத்தோடு தொடர்புகொள்கிறது.
தீபாவளியின் பண்பாட்டுப் பின்னணியை ஆராயும்போது தமிழர் மரபையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் இன்றைய தீபாவளி அதே பெயரிலும் அதே கொண்டாட்ட வடிவத்திலும் இடம்பெற்றதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. அதேவேளையில், பழந்தமிழ் இலக்கியத்தில் விளக்குகளோடும் விழாக்கோலத்தோடும் தொடர்புடைய பதிவுகள் காணப்படுகின்றன.
அகநானூற்றின் 141-ஆம் பாடலில்,
'அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர...''
என்று தெருக்களில் விளக்கேற்றி, மாலைகள் தொங்கவிட்டு, மக்கள் ஒன்றுகூடி விழா கொண்டாடும் காட்சி இடம்பெறுகிறது. இப்பாடலில் வரும் அறுமீன் குறிப்பு கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
எனவே, இது பழந்தமிழர் வாழ்வில் தீப விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை இன்றைய தீபாவளிக்கான நேரடிச் சான்றாகக் கருதாமல், தமிழர் பண்பாட்டு வரலாற்றில் தீபத் திருவிழாக்கள் இடம்பெற்றதைக் காட்டும் இலக்கியச் சான்றாக அணுகுவதே பொருத்தமானது.
ஒரு பண்பாட்டின் வரலாற்றை ஆராய்வது என்பது அதன் வெவ்வேறு மரபுகளையும் ஒரே காலத்துக்குள் அடக்கிவிடுவதல்ல. வெவ்வேறு காலங்களில் உருவான நம்பிக்கைகள் எவ்வாறு சமூக வாழ்வின் பகுதிகளாக மாறின என்பதைப் புரிந்துகொள்வதே வரலாற்று அணுகுமுறை. அதேபோல், ஒரு மரபின் வரலாற்றை அறிந்துகொள்வதும் அதன் இன்றைய வாழ்வியல் பொருளைப் புரிந்துகொள்வதும் வெவ்வேறு முயற்சிகள். வரலாற்றுச் சான்றுகள் எதை உறுதிப்படுத்துகின்றன என்பதில் தெளிவு தேவை; நம்பிக்கைகள் மனித வாழ்க்கையில் உருவாக்கும் பொருள்களை ஆராய்வதற்கும் இடமளிக்க வேண்டும்.
இன்றைய கொண்டாட்டத்திலும் இத்தகைய மறுபரிசீலனைக்கான வாய்ப்பு இருக்கிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான வழிகள் பெருகியுள்ள நிலையில், பிறருடைய மகிழ்ச்சியிலும் துயரத்திலும் பங்கெடுக்கும் மனப்பக்குவம் அதே அளவுக்கு வளர்ந்திருக்கிறதா ? என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி.
தன்னுடைய துயரத்தைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனிதன், சில நேரங்களில் பிறருடைய துயரத்தைப் புரிந்துகொள்வதற்கான பொறுமையை இழந்துவிடுகிறான். தனக்கான உரிமைகளை வலியுறுத்தும் அவன், பிறருடைய உரிமைகளையும் அதே அளவிற்கு மதிக்கிறானா என்பதும் கவனிக்கத்தக்கது. இவை தனிமனித ஒழுக்கம் சார்ந்த கேள்விகள் மட்டுமல்ல; ஒரு சமூகம் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளுமாகும்.
இங்குதான் தீபாவளியின் ஒளி என்ற குறியீடு புதிய பொருளைப் பெறுகிறது. ஒளியை அறிவு, தெளிவு, நம்பிக்கை ஆகியவற்றோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது பல பண்பாட்டு மரபுகளில் காணப்படும் அணுகுமுறை. அந்தக் குறியீட்டை நமது வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கும்போது, தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வதும், பிறருடைய உரிமைகளை மதிப்பதும், அதிகாரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதும் முக்கியமானவையாகின்றன. இவை தீபாவளியின் வரலாற்றுக் காரணங்கள் என்று கூற முடியாது; அதன் குறியீடுகளிலிருந்து நாம் உருவாக்கிக்கொள்ளக்கூடிய வாழ்வியல் பொருள்கள்.
நம்பிக்கைகள் தலைமுறைகளைக் கடந்து வாழ்வதற்கு அவற்றின் கதைகள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு தலைமுறையும் அவற்றைத் தன் காலத்தின் அனுபவங்களோடு இணைத்துப் புரிந்துகொள்வதே அதன் காரணமாகிறது. ஒரு காலத்தில் கூட்டு நினைவாக இருந்த கதை, மற்றொரு காலத்தில் தனிமனித மனசாட்சியைப் பற்றிய கேள்வியாக மாறலாம். இத்தகைய மறுவாசிப்பு ஒரு மரபின் மதிப்பைக் குறைப்பதில்லை; மாறாக, அது நிகழ்கால மனிதனுடன் உரையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.
தீபாவளி ஒவ்வோர் ஆண்டும் திரும்பி வருகிறது. அதன் கதைகளும் சடங்குகளும் தொடர்கின்றன. அவற்றின் வழியாக நாம் பெற்றுக்கொள்ளும் மகிழ்ச்சியோடு, நமது செயல்களை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும். தீமையை வென்ற கதையை நினைவில் வைத்திருப்பது ஒரு பண்பாட்டு மரபு; நமது செயல்களில் வெளிப்படும் தீமையை உணர்ந்து திருத்திக்கொள்வது அந்த மரபிற்கு நாம் அளிக்கும் வாழ்வியல் பொருள்.
நாம் ஏற்றும் விளக்குகள் இரவின் இருளை அகற்றலாம். ஆனால், நமக்குள் இருக்கும் இருளை உணர்ந்து மாற்றிக்கொள்ளும் சிந்தனைதான் அந்த ஒளிக்கு மனித வாழ்வில் ஆழமான பொருளை வழங்குகிறது. அந்தச் சிந்தனை உருவாகும் தருணத்தில், தீபாவளி ஒரு பண்டிகையாகத் தொடர்வதோடு மட்டுமல்லாமல், நமது பண்பாட்டையும் மனசாட்சியையும் மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பாகவும் அமைகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

